

மன்னிப்பது பெருந்தன்மையான செயலா என்றால் இல்லை. மன்னிப்பது என்பது ஒரு செயல். துரோகம் செய்த நபர் மீதுள்ள கோபத்தையும், கசப்பையும், காழ்ப்புணர்வையும், வெறுப்பையும் நம் மனதில் இருந்து அகற்றுவது. இது அந்த நபருக்காக செய்யப்படும் செயல் அல்ல. மாறாக அது நம்முடைய மன அமைதிக்காக செய்யப்படுவதாகும்.
ஒருவரை மன்னிப்பதன் மூலம், அந்த துரோகம் நம்மை தொடர்ந்து துன்புறுத்தாமல் நாம் அதிலிருந்து விடுபட முடியும். மனம் அமைதியாக இருக்க உதவும். இது ஒரு வகையில் மனதின் வலிமையையும் பெருந்தன்மையும் காட்டுகிறது.
இப்படி மன்னிப்பதால் நாம் அவரை மீண்டும் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. மன்னிக்கலாம்; ஆனால் மறக்கக்கூடாது. அப்படிப்பட்ட நபர்களை மறுபடியும் நம்புவது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனையாகும். நம்மை காயப்படுத்தியவர் களிடமிருந்து தள்ளி தூரமாக செல்வதே நமக்கு பாதுகாப்பானது. இல்லையெனில் மீண்டும் அதே போன்ற வலி அல்லது அதற்கும் மேலுள்ள வலியை அனுபவிக்க வேண்டிவரும்.
நாம் மென்மையான மனம் படைத்தவர்களாக இருக்கலாம். ஆனால் நாம் எடுக்கும் முடிவுகளோ மிகவும் திடமாக இருக்கவேண்டும்.
ஒருவர் செய்த தவறை மன்னிப்பதன் மூலம் நம் மனதின் சுமையை இறக்கி வைக்கலாம். ஆனால் மீண்டும் அவர்களை நம்புவது என்பது வேண்டாத வேலை. தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அதை மன்னிப்பதோ மேன்மையானது. தவறு செய்தவர்களை மன்னிப்பது சவாலாக இருந்தாலும் அது ஒரு வீர செயலாகும். மேலும் அது நம்முடைய சொந்த நல்வாழ்வுக்கு மிகவும் அவசியமான தேவை. மன்னிப்பது மனக்கசப்பை சுமக்காமல் இருப்பதற்காகத்தான். பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்வதற்காக அல்ல!
நாம் ஒருவருடன் நட்பு கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் நிச்சயம் இருக்கும். ஆனால் திடீரென்று அவர்கள் செய்த முட்டாள்தனமான துரோகத்தால் எல்லாமே கலைந்து விடும். உறவும் நாசமாகிவிடும். அதைப்பற்றி எண்ணி வருத்தப்படுவது நம் நேரத்தையும் காலத்தையும்தான் வீணாக்கும். இப்படி நடந்து முடிந்த நட்புக்கு பாதகமான, துரோகமான செயல்களை எண்ணி புலம்பிக்கொண்டே இருப்பதால் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இருக்காது.
நம் வளர்ச்சிதான் தடைப்படும். எனவே அவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பை மனதில் சுமக்காமல் மன்னிப்பதுதான் பெருந்தன்மையான செயல். இது அவர்களுக்காக அல்ல நம் மனநலனுக்காக.
செய்வோமா நண்பர்களே!