
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும். நமக்குப் பிடித்த ஒரு விஷயம் அடுத்தவருக்கு’ப் பிடிக்காததாக இருக்கலாம். ஒவ்வொருவடைய வாழ்வும் பல்வேறு சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டது. உங்களுடைய கொள்கையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவசியமும் இல்லை. அது போல பிறருடைய கருத்துக்களை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
சிலர் தினம் தினம் எப்போது பார்த்தாலும் யாரிடமாவது எதையாவது தேவையின்றி விவாதம் செய்துகொண்டே இருப்பார்கள். தன்னுடைய கருத்தை அடுத்தவர் அப்படியே மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். பிரச்னை ஆணிவேரே இங்கேதான் உருவாகிறது. விவாதிப்பவர் சொல்லும் கருத்தை ஏற்றுக்`கொள்ள மறுப்பவர் எதிர் விவாதம் செய்வார். சிறிய சிக்கல் பெரிய சிக்கலாக உருமாறும். இரண்டு தரப்பினரின் நிம்மதியும் பறிபோகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் பலர் விவாதிக்கும் விஷயத்தைப் பற்றி அடிப்படை விஷயங்களைக் கூட அறியாதவராக இருப்பார். தனக்குத் தெரிந்ததே உண்மை என்று நம்புபவராகவும் இருப்பார். இத்தகைய நபர்களிடம் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இவர்களால் நமது நேரம் வீணாகும். ஒருநாள் பொழுது முழுவதும் நமது மனம் அந்த விவாதத்தைப் பற்றியும் விவாதித்தவரைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டே இருக்கும். இதனால் நமது மனமோ அன்றாடப் பணிகளில் ஈடுபட முடியாமல் தவிக்கும்.
விவாதங்களால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா என்றால் பொதுவாக இல்லை என்பதே விடையாக இருக்கும். தன் கருத்தைப் பிறர் மீது திணிக்க முயல்வதையே விவாதம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பிரச்னையைப் பற்றி இருதரப்பினர் பேசி தங்களுக்குத் தெரிந்த கருத்துக்களை அமைதியான வழியில் பறிமாறி எவர் ஆதாரத்துடன் உண்மையை எடுத்துக் கூறுகிறாரோ அதை மற்றவர் மனதார ஏற்றுக் கொண்டு விவாதத்தின் மையக் கருத்தின் உண்மைத் தன்மையை இருவரும் அறிவதே உண்மையான விவாதமாகும். விவாதத்தின் குறிக்கோளும் இதுவே.
ஒரு விவாதம் என்பது இருதரப்பினரின் மனதைத் தெளிவாக்கும்படியாக இருக்க வேண்டும். ஒருவர் ஒரு கருத்தைப் பற்றி முழுமையாக அறியாதவராக இருக்கலாம் அல்லது தவறாக அந்த கருத்தைப்புரிந்து கொண்டிருக்கலாம். உடன் விவாதிப்பவர் ஆதாரத்துடன் அந்த கருத்தை பிறருக்குப் புரிய வைத்தால் அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு நன்றியும் கூற வேண்டும்.
நமக்கு அவசியமில்லாத நம் வாழ்க்கைக்கு உதவாக நமக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை. விவாதிக்கவும் கூடாது. அப்படி விவாதித்தால் அது வீண் விவாதமாகும். அது நமது நட்பை பாதிக்கும். டென்ஷனையும் அதிகரிக்கும்.
சிலர்தான் சொல்வதே சரி என்று பிடிவாதமாக இருப்பார்கள். அது தவறு என்று அவர்களுக்குத் தெரிந்தாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தன் கருத்தை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். இத்தகையவர்களிடம் விவாதம் செய்வதை நிச்சயம் தவிர்க்கவேண்டும்.
வீண் விவாதங்கள் நமது நேரத்தை வீணடிப்பவை. நமது முன்னேற்றத்தைத் தடை செய்பவை. நட்பில் உறவில் விரிசல்களை ஏற்படுத்தக் கூடியவை. கூடிய மட்டும் வீண் வாதங்களைத் தவிர்ப்போம். உயர்வை நோக்கி பயணிப்போம்.