
எந்த ஒரு விஷயத்திலும் அது எவ்வளவு சிறிய விஷயமானாலும் சரி பெரிய விஷயமானாலும் நாம் அதில் இறங்குவதற்கு முன்பே நம்மை எல்லா விதங்களிலும் நாம் தயார் செய்துகொள்ள வேண்டும். இயற்கையிலேயே பார்த்தோமானால் ஒரு குழந்தை பிறப்பதற்குக் கூட ஒரு தாய் பத்து மாதம் காத்து இருக்க வேண்டியிருக்கிறது.
ஒரு குழந்தை பிறப்பு என்பது ஒரு புது உறவின் வரவு. அந்த புது உறவை வரவேற்க ஒரு தாய்க்கு மனதளவில் பத்து மாத கால அவகாசம் இயற்கையே தருகிறது. அந்த பத்து மாதங்களில் ஒரு தாய் தன் குழந்தையின் வரவைக் குறித்து மனத்தளவில் தயாராகிவிடுகிறாள். எதற்காக இந்த உதாரணம் என்றால் எந்த ஒரு செயலையும் நாம் செய்வதற்கு முன்னால் மனத்தளவில் நாம் முழு அளவில் தயாராக இருக்கவேண்டும்.
அப்போதுதான் நாம் செய்யும் வேலையில் தவறு இருக்காது. இதைத்தான். 'மோடிவேஷன்' என்கிறார்கள். 'மோடிவேஷன்'என்ற ஆங்கிலத்தில் இந்த ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் செயல்நோக்கமாயிரு என்ற அர்த்தம் உள்ளது அதாவது நீ என்ன செயலைச் செய்ய விரும்புகிறாயோ அதே நோக்கமாகவும் சிந்தனையாகவும் இருக்க வேண்டும் என்பதை இவ்வர்த்தம் நமக்குத் தெளிவாகக் கூறுகிறது.
ஒரு மிகச் சராசரியான வேலையைச் செய்வதானால் கூட இந்தச் செயல் நோக்கும் திறன் நமக்குத் தேவை. என்பதை நாம் உணர வேண்டும் எந்த வேலையாக இருந்தாலும் அதில் நமக்கு சொந்தமாக ஒரு ஈடுபாடு இல்லாவிட்டால் அதில் வெற்றி இருக்காது என்பது திண்ணம்.
பிரபல நடிகர் ஒருவரின் தாயார் அவரிடம் சொல்வாராம். எந்த வேலை வேண்டுமானாலும் செய் வேலையில் உயர்வு தாழ்வு கிடையாது. ஆனால் நீ செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் ஏன் கழிப்பறையைக் கழுவும் வேலையாக இருந்தாலும் அதில் நீதான் மிகச் சிறந்தவனாக இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் குறிப்பாக வாழ்க்கையின் முதல் கட்டத்தில் அடி எடுத்து வைக்கும் இளைஞர்கள் மனத்தில் இந்த வேகம் இந்த ஜீவாலை இருக்கவேண்டும். நான் செய்வது எந்த வேலை என்பது எனக்குப் பிரச்னை அல்ல. அந்த வேலையில் நானே மிகச் சிறந்தவன் என்று பெயர் வாங்க வேண்டும் என்ற தாகம் இருந்தால் அவனுடைய வெற்றி உறுதியாகிவிடுகிறது.
ஏதோ வாழுவதற்கு பணம் தேவை அந்தப் பணம் சம்பாதிக்க இந்த வேலை தேவை என்றமனப்போக்கு இளைஞர்கள் மனத்தில் எந்தக் காலத்திலும் இருக்கவே கூடாது. அந்த எண்ணம் அவர்களுடைய வளர்ச்சியை முழுதாகக் கெடுத்துவிடும்.
சாதாரணமாக ஏதோ வேலை கிடைத்தது அங்கு போய் சேர்ந்து அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளலாம் என்று நினைப்பது அந்தக் காலம். ஆனால் இன்றைய இண்டர்நெட் உலகில் எல்லாமே ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும்போது நீங்கள் வேலையில் சேர்ந்த முதல் நாளே உங்கள் திறமையை நீங்கள் காண்பித்தாக வேண்டும். அதற்கு உதவதான் இந்த செயல் நோக்குத்திறன்.
இவை போருக்குச் செல்லும் போர் வீரனுக்குத் தரப்படும் போர் ஆயுதங்கள்போல் ஆயுதங்களை சரியாக உபயோகித்தால் போரில் வெற்றிதானே! அதேபோல்தான் நீங்கள் பணிக்குச் செல்லும் முன்பே அத்துறையின் அனைத்து விஷயங்களுக்கும் உங்களைத் தயார் படுத்திக்கொண்டுவிட்டால் உங்களை வெல்ல யாராலும் முடியாது.