
சாம்பார் வைப்பதற்கு, ரசம் வைப்பதற்கு பல உணவு பொறியல் செய்வதற்கு போன்ற வகைகளைச் செய்வதற்கென்று ஒரு செய்முறை இருப்பதுபோல் வெற்றி பெறுவதற்கென்றும் ஒரு செய்முறை இருக்கிறது. அது பல அம்சங்களைக் கொண்டது. ஒரு மனிதன் வெற்றி பெறுவதற்கு அவனுக்கு முடிவு எடுக்கும் திறன், ஒரு இலட்சியம், செயல் நோக்குத் திறன் மற்றும் ஒன்றே இலக்கு என்று பல வழிமுறைகள் இருக்கின்றன .
இவை மட்டும் ஒரு மனிதன் வெற்றி இலக்கை பெறுவதற்கும் தான் நினைத்ததை அடைவதற்கும் நிச்சயமாக போதாது. இவற்றோடு சேர்ந்து இன்னும் சில குணங்கள் சேர்ந்தால்தான் மிகச் சரியான வெற்றி உங்களைத் தேடிவரும்.
ஒரு மலையின் உச்சியில் ஒரு மனிதன் ஏற வேண்டுமானால் அவனுக்கு முதலில் என்ன தேவை. 'டிடர்மினேஷன்' அதாவது செய்தே ஆகவேண்டும் என்ற மனஉறுதி. இந்த உறுதிதான் ஒரு மனிதன் வெற்றி பெறுவதற்கான் முதல் தேவை. இந்தக்குணம் இல்லாமல் வேறு எந்தத் திறமை இருந்தாலும் அவனால் வெற்றி என்னும் சிகரத்தைத் தொடவே முடியாது.
என்னால் முடியும் என்று அவன் நினைத்துவிட்டால் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. என்னால் முடியும் என்கின்ற அந்த எண்ணம்தான் மனஉறுதி. நம்மில் பலருக்கு அனைத்துக் குணாதிசயங்களும் இருக்கும். ஆனால் அவர்களினுள் ஒரு குரல் 'நம்மால் நாம் நினைத்த உயரத்தை அடைய முடியுமா' என்ற குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இந்த ஒன்று போதும் அவர்கள் வெற்றி என்னும் இலக்கைத் தொடாமல் போவதற்கு. பயணம் மேற்கொள்ளும் வரைதான் யோசனை செய்யவேண்டும். பயணத்தைத் தொடங்கிய பிறகு நம்மால் முடியுமா? என்ற கேள்வி எத்தனை இக்கட்டான நேரத்திலும் எழவே கூடாது. அப்படி எழுந்தால் அந்த நிமிடமே நாம் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.
ஒரு இலக்கை நோக்கி மனிதனை வைப்பதே இந்த உறுதிதான். பாதையில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் எந்த மாதிரியான இன்னல்கள் வந்தாலும் சூழ்நிலைகள் எதிர்ப்புகள் வந்தாலும் எல்லாவற்றையும் கடந்து அவற்றுக்கு அடிபணிந்து போகாமல் வெற்றியின் இலக்கை நோக்கி அவனை நகரச் செய்வது இந்த மனஉறுதிதான்.
இந்த ஒரு குணம் மட்டும் அவனிடம் இல்லை என்றால் வெற்றி மகள் அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் என்பது உறுதி. இதில் மாறுபட்ட கருத்து மட்டுமல்ல இரண்டாம் கருத்தும் இருக்க வாய்ப்பேயில்லை. எந்த வெற்றி பெற்ற மனிதனைக் கேட்டாலும் அவன் சொல்லும் ஒரு பதில் 'வெற்றி பெற தேவை முதலில் மனஉறுதி பிறகுதான் மற்ற குணங்கள்.
இலக்கை அடையவேண்டுமானால் நிச்சயமாக நாம் பல தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும். எதுவுமே நமக்கு கஷ்டப்படாமல் கிடைக்காது. அப்படிக் கிடைத்தால் அதில் சாதித்த திருப்தியும் மகிழ்ச்சியும் இருக்காது. எதிர்ப்புகளில் நீந்தி கரையேறுவதுதான் வீரனுக்கு அழகு. எத்தனை இடர்கட்டைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து அவைகள் தன்னை பாதிக்காத வண்ணம் எவன் பணியாற்றுகிறானோ அவனுக்கு வெற்றி நிச்சயம்.