

ஒரு மனிதன் பெரிய அறிவாளியாகவும், வசதியான வனாகவும் இருந்தாலும், அவனிடம் குணநலம் இல்லை என்றால் எதற்கும் பயனற்றவன் ஆவான். ஒரு மனிதனை கணக்கிடும் கருவியாக அவனது குணநலமே அமைகிறது.
தூய்மையான எண்ணம், இனிய பேச்சு, நல்ல செயல் ஆகியவை ஒருவனுடைய குணநலத்தை மற்றவர்களுக்கு காட்டும் சாதனங்களாக இருக்கின்றன. விலங்கிலிருந்து மனிதனை பிரித்து காட்டுவது அவனது குணநலனே. உடலை வைத்து ஒரு மனிதனை மதிப்பிட முடியாது. அவனது பண்புகளை வைத்தே, அவனை கணக்கிட முடியும்.
மனிதனை மனிதனிடமிருந்தே இனம் காட்டுவது அவனது குண நலன்கள்தான். தனிமனிதனின் ஒழுக்கத்தை இயல்பான பண்பை கொண்டே தீர்ப்பிட வேண்டும் என்பது அறிஞர் எமர்சன் கூற்றாக உள்ளது. எனவே ஒருவனுடைய சொல், செயல், சிந்தனை, தூய்மை ,நேர்மை என்னும் அடிப்படையில் அமைதல் வேண்டும்.
பல வகையான மலர்கள் குவியலாக இருக்கும்போது அதனுடைய நிறம், வடிவம், இதழ்கள், மணம் ஆகியவற்றை வைத்து இன்னின்ன மலர்கள் என வேறுபடுத்தி பார்க்க முடியும். அதுபோலவே ஒரு மனிதனுடைய அறிவு, உணர்வு, மனத்தூய்மை, ஒழுங்கு ஆகியவற்றை கொண்டு இன்னார் இன்னாரென்று கூறுகின்றோம்.
தீய மனம் உள்ளவரை கெட்டவர் என்றும், நல்ல மனமுள்ளவரை நல்லவர் என்றும், ஆலோசனை கூறுபவரை அறிவாளி என்றும், சிந்தனை அற்றவர்களை அறிவிலி என்றும் விலங்கு உணர்வு உடையவனை துன்மார்க்கன் என்றும் கூறுகிறோம்.
மனிதனுடைய குணநலத்தை வளர்க்க முயற்சி மிகவும் இன்றியமையாதது. முயற்சி இல்லாமல் குணத்தை வளர்க்க முடியாது என்பதால் இடைவிடாமல் தன்னுடைய உணர்வுகள் மீது கவனமும் தன்னடக்கமும் தேவை. மேலும் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் பல சோதனைகளும் இடையூறுகளும் வந்தாலும் குணத்தில் சிறந்தவன் அவற்றை எல்லாம் கண்டு மனம் தளர்ந்துவிட மாட்டான்.
தன்னுடைய முயற்சியில் ஊக்கமும், வேகமும் காட்டுபவன் மன வலிமையும் உள்ளத்தில் நேர்மையும் உடையவன் நம்பிக்கையை இழக்காமல் வாழ்க்கையில் வெற்றி அடைவான். ஒருவனுடைய சக்திகளில் எல்லாம் ஒப்பற்ற சக்தி அவனது குணநலம் ஆகும்.
நல்ல குணநலன் உள்ளவன் தன்னுடைய பேச்சின் மூலமும், செயலின் மூலமும், நேர்மையான வழியில் சென்று மனசாட்சியின்படி தொழில் செய்து, வெற்றி கண்டு மற்றவர்களால் மதிப்புடனும் மரியாதையுடனும் போற்றப்படுவான்.
"எந்த மனிதனும் பணக்காரனாகவோ, தலைசிறந்த மனிதனாகவோ, ஞானமிக்கவனாகவோ இருக்க நல்ல மனம் வேண்டும்" என்று அறிஞர் பெஞ்சமின் ருடியார்டு என்பவர் கூறுகின்றார். ஆகவே குணத்தில் சிறந்தவராக இருந்து புகழின் உச்சிக்கு செல்வோம்.