
நாம் உள்வாங்கும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நம் செயல்களைக் கட்டுப்படுத்தலாம். செயல்கள் மூலமாக விளைவுகளைக் கட்டுப்படுத்தலாம்.
மனம் ஒரு தொழிற்சாலை போன்றது. இந்தத் தொழிற்சாலையில் எண்ணங்கள் தயார் செய்யப் படுகின்றன. இது 24 மணி நேரமும் ஓயாமல் தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. உட்கார்ந்து இருக்கும்போது, நடக்கும்போது, நிற்கும்போது, ஏன் தூங்கும்போது கூட நாம் யோசித்துக்கொண்டேதான் இருக்கிறோம்.
நல்ல வலிமையான எண்ணங்கள் மனத்தில் ஏற்படும்போது கடினமான செயல்களைக் கூட செய்யத் துணிந்துவிடுகிறோம். அதேசமயம் பலவீனமான எண்ணங்கள் மனதில் தோன்றும்போது அடுத்த அடி எடுத்துவைக்க மிகவும் தயங்குகிறோம்.
இந்த மனம் என்னும் தொழிற்சாலையின் மூலப் பொருளாக அமைவது தகவல்கள். அதாவது information. இந்த மனம் என்பது தகவல்களை சேகரித்து அதிலிருந்து எண்ணங்களை உருவாக்குகிறது. அதனால் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதல்வேலையாகத் தகவல்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஒரு திடுக்கிடும் மர்ம நாவல் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு தொலைபேசி மணி அடித்தாலும், என்ன செய்தியாக இருக்குமோ என்று மனம் ஒரு வினாடி பதைத்துப் போகிறது. இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்த சம்பந்த மும் இல்லை என்றாலும்கூட ஒரு கவலை தாற்காலிகமாக மனத்தில் உருவாகிறது.
சில நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்டிக்கும் நேரம் சில எதிர்மறைத் தகவல்களைத் திணிப்பதுண்டு. ஒரு தந்தை பிள்ளையை 'நீ முட்டாள், உதவாக்கரை.' என்றெல்லாம் சொல்லும்போது அந்தப் பிள்ளை இந்த தகவல்களைப் (மூலப்பொருள்களாக) பெற்றுத் தன் மனத்திற்கு எடுத்துக்கொள்கிறான். அதன்பின்பு அவன் உற்சாகம் குறைந்தவன் ஆகிறான்.
சில ஆசிரியர்களும்கூட இதுபோன்ற தவறுகளைச் செய்கிறார்கள். குழந்தையின் மூளை ஒரு வெற்றுப் பலகை போன்றது. ஒரு காக்கையை குருவி என்று சொல்லிக்கொடுத்தால் அது தன் வாழ்நாள் வரைக்கும் காக்கையை குருவி என்று எண்ணிக் கொண்டிருக்கும்.
மகாத்மா காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்ததாக மூன்று குரங்குகள் சிலையைக் கூறுவார்கள். தீயதை பார்க்கக்கூடாது. கெட்டவை கேட்கக்கூடாது. வசை பேசக்கூடாது என்று ஒன்று கண்ணை மூடிக்கொண்டு, ஒன்று காதை மூடிக்கொண்டு, இன்னொன்று வாயை மூடிக்கொண்டு இருக்கும். எப்போதும் மனத்தை தேவையில்லாத விஷயங்களுக்கு அலைபாய விடவேண்டாம்.