
"எங்களுடைய அரசியல் எதிரி திமுக. கொள்கை எதிரி பாசிச பாஜக. இதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. சந்தர்ப்பவாத கூட்டணி, ரகசியக் கூட்டணியென எந்தவிதமான குறுக்கு வழிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இடம் கிடையாது. 1967 மற்றும் 1977 இல் நடந்த ஒரு மிகப்பெரிய மாற்றம் 2026 இலும் நடக்கப் போகிறது. இது தான் சத்தியம். தமிழக வாக்காளர்கள் மக்கள் விரோத அரசுக்கு எதிராகப் போடும் ஓட்டுகள் அதை நிரூபிக்கும். அது ஒட்டு அல்ல வேட்டு. ஆட்சிக்கு எங்களை அழைத்துப் போகும் ரூட்டு" என்று முழங்கினார் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய்.
மதுரை மாநாடு நடைபெற்ற பாரபத்தி என்ற இடம் மூன்று நாள்களாகத் திருவிழாக் கோலம் பூண்டது. அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்கள், சிற்றூர்களிலிருந்து மக்கள் கடைகள் போடத்தொடங்கினர். கரும்பு ஜூஸ், ஜிகர்தண்டா, பிரியாணி, டீக்கடைகள் என முளைத்தன. இது அனைவருக்கும் உபயோகமாக இருந்ததும் உண்மை. அவர்களுக்கும் நல்ல வருமானம். மாநாட்டுத் திடல்களில் மக்கள் கூட்டமாகச் சென்று செல்பி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். மாநாடு நடந்த நாளன்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு சிரமம் ஏற்பட்டது.
மாநாட்டிற்குச் செல்லும் மக்கள் நான்கு கிலோமீட்டருக்கு மேல் நடந்து செல்லும் நிலை இருந்தது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டு பார்க்கிங், மாநாடு அரங்கம் என அமைக்கப்பட்டிருந்தன. முகப்பில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், விஜய் உருவப்படங்கள் அலங்கரித்தன. தண்ணீர் வசதிகள் நாற்காலிகள் என வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும் அடிக்கும் வெயிலுக்கு ஒதுங்கி மக்கள் நிழல் இருக்கும் இடமெல்லாம் ஒதுங்க ஆரம்பித்தனர். அதிகாலையிலிருந்து மக்கள் வர ஆரம்பித்தனர். விஜய் வந்தது மாலையில் தான்.
கூட்டம் லட்சக்கணக்கில் இருந்ததால் கழிப்பிட வசதிகள் போதாமல் அலைவதையும் காண முடிந்தது. இளைஞர்களாக இருப்பதால் பலர் ஒழுங்கற்ற தன்மையுடன் ஸ்பீக்கர் கோபுரங்களில் ஏறுவது, இருபக்கக் கம்பிகளில் நடந்து விஜய் நடந்து வரும் ராம்பிற்கு தாவுவது எனச் சாகசங்களில் ஈடுபட்டனர்.
அவரைச் சுற்றி வந்த பவுன்சர் இவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தள்ளி விடுவதையும் பார்க்க முடிந்தது. நூறடி உயரத்திற்கு எழுப்பப்பட்ட கொடிக்கம்பம் விழுந்து ஒரு தொண்டரின் வாகனம் அப்பளமாக நொறுங்கிப் போனது. மாநாட்டில் ப்ளெக்ஸ் பேனர் வைக்க வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ஒரு ரசிகர் மரணமடைந்தது போன்ற வேண்டாத சம்பவங்களும் நடந்தன.
தனக்காகக்கூடிய கூட்டத்தைக் கண்ட விஜய் ஆனந்தக்கண்ணீர் மல்க உரையாற்றினார். திரையனுபவம் காரணமாக உணர்ச்சிப் பொங்கப் பேசினாலும் சில சமயம் எழுதி வைக்கப்பட்ட தாள்களைப் பார்த்துப் படிக்க வேண்டியிருந்தது. முப்பது நிமிடங்களுக்கு மேல் நடந்த உரையில் அவர் மக்களைக் கட்டிப் போட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
"வருவேன் என்று வருடக்கணக்கில் சொன்னவர் கூட வரவில்லை இவர் என்ன செய்யப் போகிறார் என்றார்கள். இதோ வந்துவிட்டேன். நடிப்பிலிருந்து அரசியல் அடைக்கலம் என்றார்கள். மார்க்கெட் போனபிறகு அரசியலுக்கு வரவில்லை. நடிப்பே வேண்டாம் என்று துறந்து தான் இங்கே வந்திருக்கிறேன். மாநாடு நடத்த முடியாது என்றார்கள்.
வி சாலையில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா. தேர்தலில் ஜெயிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். நாளை அதுவும் நடக்கும். அடுத்தாண்டு தேர்தலில் இரண்டு பேருக்கு மத்தியில் தான் போட்டியே. ஒன்று டிவிகே. இன்னொன்று டிஎம்கே.
தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்த வரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றபிறகு தான் கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் உயிராக, உணர்வாக, உறவாக இருக்கிறோம். எங்கள் கூட்டணி மக்களோடு மட்டுமே. பெண்கள், இளைஞர்கள், அனைவரும் நம் பக்கம். த.வெ.க மேற்கொண்டிருப்பது உண்மையான உணர்வுப்பூர்வமான நல்ல நல்லவர்களுக்கான அரசியல். ஒரு புதிய வரலாறு திரும்பப் போவதை நாம் பார்க்கப்போகிறோம். 234 தொகுதியிலும் இந்த விஜய் தான் வேட்பாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய முகம் தான் உங்கள் சின்னம்.
செய்வோம் செய்வோம் என்று முழங்கும் கட்சிகள் செய்தார்களா. இனி மக்களை நோக்கிய எனது பயணம் தொடரும். அது நம்மை அடிக்க நினைப்பவர்களுக்கு இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தும். அரசியலில் எனது ஆதர்சம் எம்ஜிஆர். அவர் இருந்த வரை தமிழகம் இருந்த நிலை என்ன. இன்று அந்தக் கட்சியின் நிலை என்ன. அவரது அப்பாவித் தொண்டர்கள் வாய்பேச முடியாமல் தவிக்கிறார்கள். பொருந்தாக் கூட்டணியில் மாட்டிக் கொண்டு வெளியே வராத தவிக்கின்றனர்" என்றார் விஜய்.
இரண்டாவது மாநாடு, லட்சக்கணக்கில் ரசிகர்களும் தொண்டர்களுடன் கூடியது. பெண்கள், இளைஞர்கள் மனநிலையில் விஜய்க்கு போட்டால் என்ன என்று தோன்றியிருக்கும் எண்ணம், இதெல்லாம் இருந்தாலும் விஜய் என்ற ஒற்றை மனிதரின் கவர்ச்சி மாபெரும் வெற்றியாக மாறுமா? இவரைத் தவிர அடுத்த கட்டத் தலைவர்கள் யாருமே மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவர்கள்.
ஆதவ் அர்ஜுனா புஸ்ஸி ஆனந்த் உள்பட அனைவருக்கும் இந்த நிலை தான். இவரது மாநிலம் தழுவிய பயணங்களும், அரசியலில் நடக்க இருக்கும் மாற்றங்களும், கூட்டணிப் பேரங்களும், காலமும் தான் நமக்குச் சொல்லும் தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால வளர்ச்சியையும், விஜய்யின் முதல்வர் கனவின் நிலையையும். இது ஆரம்பம் தான். விஜய் என்ற நடிகரின் அரசியல் படத்தின் இண்டர்வல் பிளாக்கையும், உச்சக்கட்டத்தையும் காணத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.