
பிறர் உதவி செய்யாமல் வாழ்க்கையில் முன்னுக்கு வருவது கடினம். ஏதோ ஒரு காலகட்டத்தில் உதவி கரம் நீட்டி மற்றவரை வியப்பில் ஆழ்த்தி மகிழ செய்த, செய்யும் நிகழ்வுகள் நடைப்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இக்கட்டான நிலையில், தவிக்கும் சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்தவர்கள், செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெரும்பாலும் பண உதவி பெரிதாக குறிப்பிட படுகின்றது.
பண உதவி தவிர வேறு வகையிலும், ரூபங்களிலும் பிறருக்கு உதவிகள் செய்வதும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது.
ஒரு சிலர் உதவி செய்வதை பெருமையாகவும் கருதுவதுடன் அதை பற்றி பெரிதாக விளம்பரப் படுத்துவத்திலும் குறியாகவும், ஆர்வம் காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
வெகு சிலர் பிறருக்கு தங்களால் முடிந்த, தங்கள் சக்திக்கு உட்பட்ட உதவிகளை தேவை பட்டவர்களுக்கு முடிந்த அளவில் செய்து மன நிம்மதி பெறுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பிறருக்கு செய்வதை கடமையாக செய்து விளம்பரப்படுத்துவதையும், அதைப் பற்றி பெருமை அடித்துக்கொள்வதையும் அறவே தவிர்க்கின்றனர். பிறர் அறியா வண்ணம் செய்வதில் கவனமாகவும் இருக்கின்றனர்.
சிலருக்கு பொருள், பணம் இவை தேவைக்கு அதிகமாக இருந்தும், பிறருக்கு உதவவேண்டும் என்ற குணம் மட்டும் மிஸ்ஸிங் ஆக இருப்பதையும் காணலாம். வேறு சிலர் உண்மையான தேவைக்காக கேட்டும் கொடுக்காமல் இருப்பதும் உண்டு.
அதே சமயம் குறிப்பிட்ட சிலர் கேட்காமலேயே நிலைமை அறிந்து, புரிந்துக்கொண்டு உதவிகரம் நீட்டுவதும் உண்டு. எது எப்படியோ உதவி பெற்றவர்கள் நன்றி உணர்வை வளர்த்துக் கொள்வது அவசியம் ஆகின்றது.
முடிந்த பொழுது, முடிந்த சூழ்நிலையில் தங்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு, மனமார்ந்த நன்றியை மறக்காமல் தெரியப் படுத்துவதை ஆத்மார்த்தமாக பழகிக்கொண்டு கூறுவது சால சிறந்தது. அப்படி செய்வது, குறிப்பிட்ட நபர் தங்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் செய்த உதவிக்கும் அப்படி செய்தவருக்கும் மரியாதை அளிப்பதற்கு சமமாகும்.
இப்படி செய்வதால், அப்பொழுது அவர் செய்த உதவியை
மறக்கவில்லை என்று வெளிப்படுத்துவத்துடன் உதவி செய்தவருக்கு மகிழ்ச்சியும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
மிக முக்கியமாக அவ்வாறு மறக்காமல் நன்றி கூறுவது, உதவிப் பெற்றுக் கொண்டவருக்கு மன நிறைவை (self satisfaction) கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
வாழ்க்கையில் முன்னேறிய பலர் தாங்கள் முன்னேற் உறுதுணையாக இருந்தது நன்றியுணர்வை
பின்பற்றியது என்று மறுக்காமல் குறிப்பிடுள்ளதை காணலாம்.
உதவி செய்தவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும், தேவையான நபர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வதை குறிக்கோளாக கொண்டு பழகி வரவேண்டும்.
பிறருக்கு மனமார செய்யும் உதவி தேவையான பொழுது அவ்வாறு உதவி செய்தவருக்கு ஏதாவது ஒரு வகையில் வந்து உதவி செய்வதை பலர் அனுபவ பூர்வமாக அனுபவித்தும் உள்ளனர்.
எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவிக்கு என்றும் தனிப்பட்ட முக்கியத்துவமும், மரியாதையும் உண்டு.
அது மட்டும் அல்லாமல் அடுத்த தலைமுறையினர் இந்த மகத்தான உதவி செய்யும் பணியை பின்பற்றவும், நன்றியுணர்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வழி காட்டிகளாகவும் இன்றைய தலைமுறையினர் இருக்கவேண்டும்.