
வாசிப்பது என்பது ஒருவருக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு மனித வாழ்க்கையில் பயணங்கள் என்பதும் மிகவும் அவசியம். பயணங்கள்தான் மனிதனை பக்குவப்படுத்தும். காரணம் பயணங்களின் பொழுது பல்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கும். அவர்களின் வேறுபட்ட கருத்துக்களை ஏற்று கொள்வதுடன், அவற்றை ரசிக்கும் மனப்பக்குவத்தையும் பயணங்கள் தான் நமக்கு தருகின்றன.
பயணம் என்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும். சவால்களை எதிர்கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும் ஒரு முக்கியமான செயல்பாடாகும். அதுமட்டுமின்றி வேறுபட்ட கலாச்சாரங்களை அறிந்து கொள்ளவும், புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும் உதவும்.
வாழ்க்கையை நன்கு ரசிக்கவும், வீட்டையும் உலகத்தையும் புரிந்து கொள்ளவும் பயணம் மிகவும் அவசியம். வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களையும், சந்தர்ப்பங்களையும் பயணம் என்ற ஒன்றால்தான் தரமுடியும். சில சமயம் நம்மை நாமே அறிந்து கொள்வதற்கும் உதவும்.
பயணம் செய்யும்பொழுது பல்வேறு இடங்களைக் காண்பதால் அதன் மாறுபட்ட கலாச்சாரங்களையும், புதிய விஷயங்களையும், புதுப்புது மனிதர்களை பார்க்கவும், புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ளவும் முடியும். அத்துடன் பயணம் செய்யும்பொழுது எதிர்பாராமல் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியையும், சந்தோஷத்தையும் தரக்கூடியது பயணம். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்காமல் நாலு இடங்களை சுற்றிப் பார்ப்பது நம் மனதை விசாலமாக்குவதுடன், நம்மைச் சுற்றி உள்ளவற்றை பற்றிய அறிவையும், தெளிவையும் தரும்.
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ரகசியத்தை புரிய வைக்கும். நம் மொழித் திறனை அறிய ஏற்ற களம் அமைத்துக் கொடுப்பதும் பயணங்கள்தான். புதிது புதிதாக பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்தான் இந்தப் பயணம்.
நம் பார்வையை விரிவுபடுத்தி காண்பிப்பதும் இந்த பயணங்கள்தான். நம் மன அழுத்தத்தை இறக்கி வைக்க பயணங்கள்தான் சிறந்தது. பயணம் செய்யும்பொழுது நம் மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவதை நம்மால் எளிதால் எளிதில் உணரமுடியும். பயணத்தின் மூலம் பல இடங்களுக்கு செல்வதால் பலதரப்பட்ட உணவு வகைகளை ருசிக்கவும், மலைக்கவும், கற்றுக்கொள்ளவும் முடியும்.
பயணம் செய்யவேண்டும் என்றால் வெளி நாட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமோ, விமானத்தில் பறந்துதான் பயணிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ இல்லை. நம்மைச் சுற்றியுள்ள, நாம் பார்க்காத இடங்களை பொடி நடையிலும் பயணிக்கலாம்;
பஸ், ரயிலிலும் சென்று அனுபவிக்கலாம். பயணத்திலும் நிறைய வகைகள் உண்டு; தனிப்பயணம், குழுப் பயணம், குடும்பப் பயணம், நண்பர்களுடன் பயணம் என்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான அனுபவத்தைத் தரும். ஆனால் மொத்தத்தில் பயணம் என்பது வாழ்க்கையில் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.