

பலருக்கும் தங்களின் வாழ்க்கையில் தான் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே அவர்கள் தேர்ந்தெடுக்கும் எல்லா விஷயங்களிலும் எவ்விதமான பாதிப்புகளும் இல்லாத ஒன்றையே தேர்வு செய்யும் அமைப்பில் இருப்பார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். மகிழ்ச்சியை தேடிய பயணம் உங்கள் இலக்குகளை அடைவதை எவ்வாறு தடுக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
தோல்வி பயம்: மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் ஒருவருக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை நான் புதிதாக ஏதாவது முயற்சித்து தோல்வி அடைந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி எதையுமே முயற்சிக்காமல் இருந்து விடுகிறார்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் நாம் முயற்சித்தால் மட்டுமே அதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள முடியும். எந்த ஒரு விஷயத்தையும் மனதிலேயே கணக்குப்போட்டு அதன் உண்மைத் நிலையை கண்டறிய முடியாது.
தனிப்பட்ட வளர்ச்சி தடைபடும்: எதையுமே முயற்சிக்காதவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி முற்றிலும் தடைபடுகிறது. நாம் வளர வளர புதிய அனுபவங்கள் நிச்சயம் கிடைக்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சிக்கு இவை தடையை ஏற்படுத்தும் என பயந்துகொண்டு மோசமான சூழ்நிலைகளைக் கண்டு ஒதுங்கினால், உங்கள் தொழில் மற்றும் உறவுகளில் முன்னேற்றத்தை நீங்களே தடுக்கிறீர்கள் என அர்த்தம்.
குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றல்: எதிர்மறையான விளைவுகள் பற்றிய பயம் ஒருவரின் உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலை முற்றிலுமாக தடுக்கிறது. இது ஊக்கமின்மையை ஏற்படுத்தி ஆக்கபூர்வமான தீர்வுகளைக் கண்டறியும் திறனை குறைக்கிறது. உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றல் இல்லாதவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை அடைய முடியாது. எனவே எதை நினைத்தும் அஞ்சாமல் தைரியமான முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.
எதிர்மறை எண்ணங்கள் ஏற்படலாம்: எந்த ஒரு விஷயத்தையும் எதிர்மறையாக பார்ப்பது நமக்கு மகிழ்ச்சியை கொண்டு வரும் வாய்ப்புகளை முயற்சிக்காமலேயே தடுத்து விடுகிறது. உண்மையை சொல்லப்போனால் நம் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் மோசமான விஷயங்கள் உள்ளது. எனவே ஒரு புதிய விஷயத்தின் மீதான அவநம்பிக்கையான பார்வை நம்முடைய வெற்றி வாய்ப்பை சவாலானதாக மாற்றுகிறது. மேலும் நம்மையே அறியாமல் முக்கியமானவற்றை தவிர்க்கவும் வழிவகுக்கிறது.
எனவே வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து, தைரியமான முடிவுகள் எதையும் எடுக்காமல் Comfort Zone-லேயே இருந்தால் வாழ்க்கையில் எதுவும் மாறாது. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போலவே ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பீர்கள்.