

உங்களுக்குள் இருக்கும் வெல்லும் சக்தி உணர்ந்து, வெற்றிக்கு களமாடுங்கள். உலகம் உங்களை நிழலாய் வியந்து பார்க்கும். அந்த நிழலின் முகம்தான் உங்கள் எதிர்காலம், புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் மனதில் இருக்கும் உந்துசக்தியை, உங்கள் கையில் இருக்கும் உழைப்பால் பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். அதன் வியர்வை வாசமே, உங்கள் எதிர்கால வாழ்க்கை சூடும் வெற்றி மகுடமாகும்.
வெல்லும் வரை போராடுங்கள். இடையில் தோல்வி ஏற்படும் போது, கற்றுக்கொண்ட பாடமும், அனுபவமும் உங்கள் வெற்றிக்கான பாதைக்கு இட்டுச்செல்லுங்கள்.
உங்கள் எதிர்கால கனவுகளுக்கு, முயற்சிதான் மூலதனம். விடாமுயற்சிதான் அடித்தளம். உழைப்புதான் நுழைவாயில். கருமமே கண்ணாக உங்கள் செயலாற்றலை தொடங்குங்கள். பொன்னான எதிர்காலம் வசப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
உங்கள் முன்னேற்றப் பாதையில் பயணிக்க நினைக்கும்போது, அடுத்தவர் முதுகில் ஏறிவிடாதீர்கள். அண்டி வரும் தடைகளை தாண்டும் கால்கள் உங்களது ஆகஇருக்கட்டும்.
எதிர்காலம் என்பது நீங்கள் வசிக்கப் போகும் நந்தவனம். அதற்கு செயலாற்றும் திறமையும், மனஉறுதியும் கொண்டு வலுவான பாதை அமையுங்கள். சாதனை படைத்த முன்னோர்களின் வரலாற்றை படித்து, பக்குவமும், ஊக்கமும் உணர்வில் ஏற்றுங்கள்.
உங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் வேடிக்கை பார்க்க விட்டு விடாதீர்கள். உங்களைப் பார்த்து ஆச்சரியமாக பார்க்கும்படி ஒவ்வொரு நாளும் வளர்ச்சி எனும் உரம் போடுங்கள். பட்டைத் தீட்டப்படும் வைரம் மதிப்பு கூடும். வாழ்க்கையும் அப்படித்தான் புரிந்துகொள்ளுங்கள்.
தேடிவரும் வாய்ப்பு உங்களுக்கானது என்று உணருங்கள். அதனை செம்மைப்படுத்தி, உயரும் உத்தியை பட்டைத்தீட்டுங்கள். அதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேற, தன்னம்பிக்கையை படிகளாக்கி, சிந்தனையை விரிவுபடுத்தி, நேர்கொண்ட பார்வையில் கவனம் செலுத்தி, உங்கள் வாழ்க்கையை ஒளிரச்செய்யுங்கள்.
மனிதப்பிறவி மகத்தானது என்பதை உணர்ந்து, கிடைத்த இந்த பிறவியை வாழ்ந்து காட்டும் போதுதான், உங்களை பெருமையாக பாராட்டுவார்கள், ஏன், உள் உணர்வுக்குள் பொறாமையும் படுவார்கள். அந்த சமயத்தில், தான் என்ற அகந்தை துளிர்விட ஆரம்பித்து, சோதனை சிறையில் அடைத்துவிடும். அப்போது இறை சிந்தனையும், தர்ம சிந்தனையையும் உணர்வுகளில் ஏற்றி, உன்னதமாக உயர்ந்து நில்லுங்கள்.
எதையும் சாதிக்கும் துடிப்பான ஆற்றல் மனதில் வளர்ந்தால், ஏமாற்றங்கள் கூட மறைந்து மாற்றங்கள் வாழ்க்கையை புதிய தடங்கள் பதித்து, எதிர்கால வெற்றிக்கு நம்மை இட்டுச்செல்லும்.
இழப்பதற்கு அல்ல வாழ்க்கை என்பதை உணர்ந்தால், எந்த விதமான இக்கட்டான நிலையையும் கடந்து, வாழ்க்கையில் முன்னேறமுடியும் என்று, வாழ்ந்துகாட்டுங்கள்.
வாழ்க்கை என்பது பூமியில் நிலைத்த புகழோடு வாழ்ந்து, வான் வரை உயர்ந்து நிற்பதற்கு என்பதை உணர்ந்து, அதன் இலக்கை நோக்கி, வாழ்வியல் சிந்தனையோடு தடம் பதித்து, வாழ்ந்து காட்டுங்கள்.
எதிர்காலம் என்பது நீங்கள் ஆற்றும் செயலில் இருந்து நல்லகாலம் பிறக்கும். இந்த சிந்தையில் மன அழுத்தம் கொள்ளாமல், மனஉறுதியோடு வாழ்ந்து, பிறவிப்பயனை அடையுங்கள்!
வாழும் காலம் நமக்கானது என்று மனதில் உரம் போடுங்கள். ஆலவிருட்டமாக வளருங்கள். நாளைய உயரத்தையும் உயர்வையும் கொண்டாடுங்கள்!