

வாழ்க்கையில் சில நிகழ்வுகள் ஏன் இப்படி வந்தது என்று சிந்திக்காமல், அவை அனைத்தும் உங்களுக்கான படிப்பினைகள் என்று ஏற்றுக்கொள்ளுங்கள். சில நிகழ்வுகளை மனஅழுத்தம் தரும்படி ஆராய்ந்து பார்க்காமல், கடந்து செல்ல பாருங்கள், வாழ்க்கை சிறப்பாக அமையும்.
வாழ்க்கையில் சில மதிப்பு மிக்க நேரங்கள் எதுவுமே புரிந்து கொள்ளப்படாமல், வார்த்தை தர்க்கம் ஏற்படும்போது, உங்களுடைய முன்னேற்றப் படிகளை கடக்கவிடாமல், உங்களுக்கு முட்டுக்கட்டை போட வைக்கும். ஆகவே நல்ல நேரம் கூடி வரும்போது, பொறுமையாக இருந்து, பேச்சைவிட செயலில் கவனமாக இருங்கள்.
எந்த செயலுக்கான முயற்சியையும் மன அழுத்தத்துடன் சிந்திக்காதீர்கள் அது ஒருபோதும் நல்ல முடிவுகளைத் தராது. மனம் என்பது மெல்லியதும் மிருதுவானதும் கொண்ட மலரைப் போன்றது. மலரை ரசித்து, அதன் வாசனையை நுகர்ந்து மகிழ்வதுபோல், உள்ளத்திலும் உணர்விலும் அதன் புரிதலோடு சிந்தித்து முயன்று பாருங்கள்.
வாழ்க்கையில் எதை அடையவேண்டும் என்றாலும், அதைப் பற்றிய புரிதலும் தேடுதலும் அவசியம். புரிதல் என்பது அதைப் பற்றிய அறிவு, தேடுதல் என்பது அதனை அடைய துடிக்கும் முயற்சி. உனக்கானது ௭ங்கே இருந்தாலும் உன்னை வந்தடையும் என்பது நம்பிக்கை. ஆனால் அது தானாக வரும் ௭ன்று மனக்கணக்கு போடாதீர்கள்.
வாழ்க்கையின் தொடக்கத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் தடங்கள் சிறியதாக இருந்தாலும், இலக்கை எட்டுவது சிகரமாக இருக்க வேண்டும் என்று மனதில் உறுதிகொள்ளுங்கள்.
நம்பிக்கையான தொடர் முயற்சிகள் ஒரு தினம் முழு வெற்றி அடைவது உறுதி என்று நம்புங்கள்.
தோல்வி அடைந்த சில முயற்சிகளை பற்றி சிந்தித்து சோர்ந்து விடாதீர்கள். எதையும் சாதித்து விடவேண்டும் என்ற உங்களின் உணர்வுகளுக்கு நிதானத்தை பரிசாக கொடுங்கள். அடுத்தக் கட்ட முயற்சிக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
பரந்துபட்ட இந்த உலகில், சாதிக்க நிறையவே உள்ளன. தளராத இதயம் கொண்ட உங்களுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை என்று சிந்தியுங்கள்.
வாழ்க்கையில் திருப்தி அடைந்து விடும் மனம் முதலில் எல்லோருக்கும் வேண்டும். அப்போதுதான் நமக்கு கிடைக்கும் எதுவும் மகிழ்ச்சியைத் தேடித்தரும்.
மாறாக ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை தேடிப் பலரும் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறோம். இதில் கிடைத்துவிடாதோ, அதில் கிடைத்துவிடாதோ என்று ஏக்கத்தோடும் ஆதங்கத்தோடும் இங்கும் அங்கும் அலைகிறோம். இறுதியில் நமக்கு ஏமாற்றங்களே கிடைக்கின்றன.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவவர் கரங்களில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு இடத்திலும், அதனை நாம் முறையாகக் எப்படி கையாள்கிறோம் என்பதுதான், முக்கியமான கேள்வி.
இதன் உண்மைத் தன்மையை நாம் எப்போது உணர்ந்து கொள்கிறோமோ அப்போதுதான், நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். அப்போதுதான் மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் பறித்துக்கொள்ளவும் முடியாது.
வாழ்க்கையில் எதையும் சாதித்துவிடலாம். எதையும் வாங்கி விடலாம். ஆனால், சாதிப்பதை தக்க வைத்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும். எதை வாங்கினாலும் அதற்கான காரணம் வேண்டும். இந்த புரிதல் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சி கடலில் திளைக்கும்!