

மனித வாழ்க்கை என்பது நெடுந்தூரப்பயணம். நாம் அதனை கடப்பதற்கு ஒரு துடுப்பு தேவைப்படுகிறது. அந்த துடுப்புதான் நம்பிக்கை. நம்பிக்கை வெறும் வார்த்தை அல்ல. அதுதான் நம் எண்ணங்கள் மற்றும் செயல்கள் இரண்டுக்கும் முயற்சி என்னும் உந்துசக்தி தரும் அட்சய பாத்திரம்.
நாம் வாழும் நாட்களில் ஒவ்வொரு மணித்துளிகளும் நமக்கானது என்ற உணர்வு வளர்ந்தால், சோம்பல் நம்மை விட்டு அகலும். புத்துணர்ச்சி அளிக்கும் எண்ணங்கள் தோன்றும். அதனால் நாம் சுறுசுறுப்பாக இயங்கும் வல்லமை கொண்ட மனிதர்களாக வாழ்ந்து காட்டுவோம்
நாம் நம்பிக்கையோடு செல்லும் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கும் இடத்தில் நாமே இருப்போம். மற்றவர் தலையீடு இருந்தால், நம் கரங்கள் கட்டப்பட்டுவிடும் என்பதை அறிந்து, அந்த எண்ணத்தை தவிர்ப்போம். சுயமாக சிந்திக்கும் ஆற்றல் திறன் பன்மடங்கு உயர்ந்தது என்பதின் உண்மை அறிவோம்.
நம்முடைய வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் எல்லாமே, உயர்வாகவும், உன்னதமாகவும் இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்போம். ஏனெனில் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு, செயலுக்கு பல தடங்கள் உண்டு, எண்ணங்களுக்கு சஞ்சலம் உண்டு, என்பது நிதர்சனமான உண்மை. இதை புரிந்துகொண்டு, களம் காண்பது அவசியம்.
அடுத்தவர்களை விடவும் நம் வாழ்க்கையில், எதாவது செயலில் ஈடுபட்டு சாதிக்க வேண்டும் என்று நினைக்கும்போது, பல நேரங்களில் அவமானங்களை நாம் சந்திக்கும் சுழல் நேரிடும். அப்போது, நாம் சஞ்சலம் அடையாமல், துணிவோடு செயல் படவேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற மனதோடு போராடக்கூடாது. மனதுக்குள் பல சிறைக் கூடங்கள் இருக்கு. அதன் சாவிதான் நிம்மதி. நிம்மதியை நாம் எந்த தருணத்தில் இழக்கிறோமோ, அப்போது அந்த சிறைக் கதவுகள் திறக்கும். அதிலிருந்து தேவை இல்லாத பழைய நிகழ்வுகள் நம் கண் முன்னே தோன்றி, நம்மை ஆட்டிப் படைக்கும்..அதனால், நிம்மதி இல்லாத வாழ்க்கை தவிர்ப்போம்.
எதையும் மறைக்க முயற்சி செய்து, நிம்மதியை இழந்து விட வேண்டாம். அதை அப்படியே விட்டு விடுவோம். காலம் அதனை மாற்றி விடும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ண ஓட்டங்களுக்கு தகுந்தாற்போல் நாணல்போல் வாழ நினைத்தால், நம் வாழ்க்கையை காலம் வென்றுவிடும் என்பதை நினைவில் கொண்டு, மற்றவருக்கு பிடித்த மாதிரி வாழ்வது கடினம் என்பதை உணர்வோம்.
நமக்கென்று இருக்கும் வாழ்க்கையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் இழந்து விடக்கூடாது, என்பதில் உறுதியாக இருப்போம். இல்லையெனில் நமக்குள் இருக்கும் தன்மானத்தின் சிறகுகள் வெட்டப்பட்டுவிடும்.
கடிகாரம் காலத்தோடு பயணிக்கும். அதுபோல் நாம், நம் வாழ்க்கையில் நம்பிக்கையோடு பயணிப்போம். அப்போதுதான் முன்னேற தடைபடும் களைகள் அகலும். எக்காரணம் கொண்டும் அடுத்தவர்களை நம்பி வாழக்கூடாது என்பதில் தின்னமாக இருப்போம்.
மனித வாழ்க்கை ஒருமுறை என்பது நமக்கு தெரிந்த விஷயம். வாழும் காலம் சிறப்பாக கடந்தால், அது நம் வாழ்ந்த காலத்தை, நமக்கு பிறகும் கடத்திச் சென்று, சாகாவரமாக அமையும் என்பதையும் புரிந்து வாழ்வோம்!