
இறைவன் படைப்பில் பல விசித்திரங்கள், சில வகையான இடர்பாடுகள், சந்தோஷம், சங்கடம் இப்படி நிறையவே உள்ளன.
அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே படைப்புகளில் வித்யாசம் தொிகிறது. அவற்றையெல்லாம் கடந்து எதிா்நீச்சல் போட்டு்த்தான் வாழவேண்டிய சூழலும் நிறையவே உள்ளன.
அவைகளையெல்லாம் கடந்தும் பலருக்கு நல்ல வாழ்க்கையும் கிடைத்துவிடுவதும் இறைவன் நமக்கு அளித்த மிகப்பெரிய நன்கொடை என்றே சொல்லலாம். சிரிப்பு என்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம், அதை நம்மில் எத்தனை போ் சரிவர பயன்படுத்துகிறோம். அதற்கென்ன நாம் வாடகையா தரவேண்டும்?
பின் ஏன் நாம் பல நேரங்களில் வெளியே வட்டியில்லாமல் அதை அடகு வைத்துவிடுகிறோம்! அது யாா் குற்றம், நம் குற்றம்தானே! பலருக்கு நல்ல மனைவி, மகன், மகள் என அளவான குடும்பம் அமைந்தும் அதை சரிவர கையாளாமல் வாழ்வையே தொலைத்துவிடுவதும் வாடிக்கையாக உள்ளது.
நல்ல குடும்பத்தில் சில சமயங்களில் நிலவி வரும் சந்தோஷங்கள் விலகி சங்கடங்கள் வந்து அழையா விருந்தாளியாய் வாடகையில்லாமல் குடியேறிவிடுவதும் நிஜம்.
கணவன் சில விஷயங்களில் தேவையில்லாமல் சிக்கி விடுவதும், நீ அதைச்செய்தாயே! நான் இதைச்செய்வேன் என மனைவி அநாவசியமான வேலைகளை செய்வதாலும், குடும்பத்தில் மகிழ்ச்சி சிாிப்பு, சந்தோஷம், நிம்மதி குறைந்து விடுவதை நாம் பல இடங்களில் கண்கூடாகப் பாா்க்கிறோம்.
சில குடும்பத் தலைவா்கள் கொஞ்சம் வசதிவாய்ப்பு, அந்தஸ்து ,நட்பு வட்டம் பெருகியதும், செய்வதறியாத காாியங்களான மது, மாது, புகை, சூதாட்டம் இப்படி பல்வேறு கோளாறுகளில் தன்னை ஈடு படுத்திக்கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி சந்தோஷம் எனும் வானவில் தோன்றிய நேரத்திலேயே மறைந்துவிடுகிறது. அதை திருமதிகள் அன்பாக, நயமாக எடுத்துச்சொல்லி கணவனை திருத்த வேண்டும்.
அப்படி திருந்ததாத நிலையில் நீ இப்படிச்செய்கிறாய், நான் அப்படிச் செய்வேன், என பிடிவாதம் காட்டி ஆடம்பரம், படாடோபம், தேவையில்லாத செயல்பாடுகள், அநாவசிய செலவுகள் செய்தல் இப்படி தாறுமாறாக குடும்ப வண்டி ஓடினால், அதனால் கணவன் மனைவிக்குள் வரும் சண்டை சச்சரவுகளால் நாலு சுவற்றுக்குள் அடங்கியிருந்த குடும்ப கெளரவம் வீதிக்கு வந்து விடுகிறது அதுவே நடைமுறை.
அதுமட்டுமா, இந்த நடைமுறைகளால், குழந்தைகள் மனது பாதிக்கப்படுவது அனைவருக்கும் தொிந்த ஒன்றுதானே!
அப்போது அமைதியான நதியினிலே ஓடம் ஓடவில்லையே. அமைதிப்பூங்காவான குடும்பம் துயரமெனும் ஆழ்கடலில் மூழ்கி விடுகிறது.
இங்கே சந்தோஷம், சிாிப்பு, நிம்மதி, அமைதி, இவைகள் காற்றோடு காற்றாய் கலந்துவிடுகிறது. இந்த நிலையில்தான் நிதானமும், விவேகமும், நோ்மறை எண்ணங்களும், அமைதியும், கணவன் மனைவி இவர்களால் தொலைக்கப்பட்டுவிடுகிறது. நமது சில தீய எண்ணங்களை நாம் மாற்றிக்கொண்டால் நமது வாழ்க்கைப் பாதையும் நேராக அமையும்.
ஆக, இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளப்படவேண்டிய பாடமே குடும்பம் எனும் வண்டியை சிறப்பாக சந்தோஷமாக விபத்தில்லாமல் இயக்க நமக்கு தேவை ஒற்றுமை.
ஒருவரை ஒருவர் புாிந்துகொள்ளுதல், அனுசரித்துப் போகும் தன்மை, லட்சியத்தை அடையும் இலக்கு, ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை பாழாய்ப்போன ஈகோ தவிா்த்தல், அமைதியாக பதட்டம் இல்லாமல் பக்குவமாக குடும்பத்தை நடத்தும் நிலைபாடு இவைகளே தேவை.
என் குடும்பம், என் கணவர், பிள்ளைகள், என் மனைவி, என்ற உடன்பாடே மிகவும் சிறந்த ஒன்றாகும். நாம் இருவரும் ஒற்றுமையோடு நெறிமுறையோடு குடும்பத்தை வழி நடத்தினால் உற்றாா் உறவினா்கள், நட்பு வட்டம் அனைவரும் சந்தோஷம் அடைவாா்கள். அதுவே நாம் இறைவனுக்கு கொடுக்கும் காணிக்கை.
அதை விடுத்து ஒருவரை ஒருவர் மதிக்காமல், அவரவர் போக்கில் வாழ்ந்தால் அதில் சறுக்கல் ஏற்பட்டால், அதே உற்றாா் உறவினா்கள் சமுதாயம் எல்லாமும் ஒன்று கூடி கை கொட்டிச்சிாிப்பாா்கள் ஊராா் சிரிப்பாா்கள்.
நம்மிடம் இருந்த சந்தோஷமும் சிாிப்பும் அமைதியும் நம்மிடம் சொல்லாமலே விலகிவிடும் எனவே, இறைவன் நமக்களித்த சந்தோஷமான வாழ்க்கையை சந்தேகம் இல்லாமல் நெறிமுறை கடைபிடித்து சந்தோஷமாக வாழ்வோம் அதுவே நல்லது.