
"என்ன ஆனாலும் அசரவே மாட்டேங்கிறான்பா. ஸ்டெடியா இருக்கான். மனுஷனா அவன்" என்று சொல்ல கேட்டிருப்போம். ஒரு சிலர் வாழ்வில் இடியே விழுந்தாலும் பதறாமல் நிதானமாகவே என்றும் ஒரே மாதிரியான மனநிலையுடன் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து மற்றவர்கள் கூறும் விமர்சனமே அது.
பலரும் சீராக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் தடைகளை சந்தித்தால் உடனே சோர்ந்துபோய் விடுவதும் அதையை நினைத்து முன்னேறாமல் இருப்பதும் உண்டு. எந்த ஒரு நெருக்கடியிலும் நிலை தவறாமல் அந்த நிகழ்வுகளின் பாதிப்பு இன்றி இயல்பாக இருப்பது என்பது அனைவருக்கும் கைகூடி வரும் குணம் அல்ல.
இதனை உறுதியான மனநிலை என்ற பொருள்பட 'திட சித்தம்' என சொல்வார்கள். குறிப்பாக முற்றும் துறந்த ஞானிகளை, சாதுக்களை இந்த வரிசையில் சொல்வதுண்டு. சாதாரண மனிதர்களாகிய நம்மால் இப்படி இருக்க முடிந்தால் வாழ்வில் மகிழ்ச்சிதான் என்று தோன்றுகிறதா?.
தோன்றியதை செயல்படுத்திப் பார்ப்போமா? அதெப்படி முடியும் நாமெல்லாம் சாதாரண மனிதர்கள்தானே? என்று நினைத்தால் அந்த எண்ணத்தை உதறித்தள்ளுங்கள். என்றும் மனதை சம நிலையில் வைத்திருக்க நம்மாளும் முடியும். ஆம்… நாம் மனது வைத்தால்.
வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக கருதுதல், மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் சமமாக எடுத்துக்கொள்ளுதல் இதுவெல்லாம் நமக்கும் சாத்தியம்தான். நல்லதோ கெட்டதோ இந்த நிலை மாறிவிடும் என்று தெளிவு இருந்துவிட்டால் நமக்கு அதிக மகிழ்ச்சியும் அதிக துயரமும் எல்லாம் ஒன்றுதான் என்ற மனப்பக்குவம் வந்துவிடும்.
இந்த மனப்பக்குவம் பெற்றுவிட்டால் மனவலிமை உடையவராக எதையும் நமது கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எதிர்பார்த்த ஒன்று நடக்காதபோது வருத்தத்தில் குன்றிப்போவதும் எதிர்பாராதது நடக்கிறபோது மகிழ்ச்சியால் துள்ளுவதும் என இல்லாமல் நிலைகுலையாமல் இருப்பவருக்கே வாழ்க்கை வசப்படும் என்பார்கள் பெரியோர்கள்.
எந்த சூழலுக்கும் தயாராக இருப்போம், எந்த நேரத்திலும் எது வரினும் முன்னேற்பாடுடன் இருப்போம் என்பதே மனதை சம நிலையில் வைத்திருப்பவர்களின் ரகசியம். ஆம் அவர்கள் மழையைக்கண்டு அடடா என சலிப்பதும் அல்ல வெயிலை கண்டு ஆஹா என வெறுப்பதும் இல்லை. அவர்கள் பாதகமான நிலைகளில் இருந்தும் சாதகமான ஒன்றை பெற்றுவிடுவார்கள்.
சினிமா, விளையாட்டு அல்லது தொழில்துறையில் சாதித்தவர்களைப் பார்த்தால் ஒரு ஒற்றுமை தெரியும். அவர்கள் தோல்வியைத் தழுவினாலும் வெற்றி பெற்றது போன்ற நிலையிலேயே இருந்து அடுத்த நிலைக்கு முயற்சிப்பார்கள். காரணம் அவர்களின் சமநிலை மனப்பான்மை.
தன் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியாதவரால் மற்றவர்களை தன் இந்த கட்டுப்பாட்டில் வைக்க முடியாது. ஏனெனில் மனதை சமநிலையில் வைக்க இயலாதவர்கள் கவலை, சந்தேகம், பதற்றம், மணக்குழப்பம் ஆகியவற்றால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். பின் எப்படி அவர்கள் மற்றவர்களை ஆளமுடியும்?
ஆனால் மனதை சம நிலையில் வைப்பவரோ எந்த ஒரு சூழ்நிலையிலும் துணிவோடும், நம்பிக்கையோடும் இருப்பார்கள். வெற்றிக்குத் தேவையான அறிவை விட, ஆற்றலை விட, திறமையை விட மனதின் சமநிலையும் முக்கியமான காரணம். அதுவே அறிவின், ஆற்றலின் சிறந்த திறமையாக அமைகிறது.
ஆகவே, எந்தவொரு ஏற்றங்கள் இறக்கங்கள் வந்தாலும் மனநிலையை சமநிலையில் வைத்திருக்கும் பயிற்சி எடுப்போம். வாழ்வில் சிறப்போம்.