

நம்பிக்கை. நம் வாழ்வின் உயர்வும் தாழ்வும் இந்த ஒற்றைச் சொல்லை நாம் பயன்படுத்தும்விதத்தில்தான் அமையும். முற்காலத்தில் பலர் நம்பிக்கையின் கை பிடித்து உயர்ந்தார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கு பக்கபலமாக விளங்குவார்கள். பெற்றோர் நம்பிக்கைச் சொற்களை பிள்ளைகளின் மனதில் விதைத்தவண்ணம் இருப்பார்கள்.
நம்புங்கள் நடக்கும் என்பார்கள். நாம் சாதிக்க வேண்டும் என்றால் முதலில் நம் திறமையை நாம் நம்ப வேண்டும். நம்மால் முடியும் என்ற உணர்வு எப்போதம் நம் மனதில் மேலோங்கி நிற்க வேண்டும்.
வேகமாக வளர்ந்து அதே வேகத்தில் கீழிறங்கியவர்கள் மீண்டும் வளர்ந்து சாதிப்பதையும் நாம் பார்க்கிறோம். இத்தகையவர்கள் எப்போதும் மனம் தளராதவர்களாக இருப்பார்கள். தம்மால் மீண்டும் உயர முடியும் என்ற எண்ணத்தில் உழைத்தவண்ணம் இருப்பார்கள்.
நம் வாழ்வில் நம் கண்முன்னே மெல்ல மெல்ல பலர் உயர்வதையும் பார்க்கிறோம். பலர் திறமைகள் பல கொண்டவர்களாக இருந்தாலும் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் காணாமல் அப்படியே இருப்பதையும் பார்க்கிறோம். இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது நம்பிக்கைதான். ஒரு செயலை நம்மால் நிச்சயம் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையால் இத்தகையவர்கள் வெற்றிகளை சுலபமாக அடைந்து விடுகிறார்கள்.
வாழ்வில் உயர வேண்டும் என்றால் சில முடிவுகளைத் துணிந்து எடுத்தாக வேண்டும். அத்தகைய துணிச்சலான முடிவுகள் வெற்றியையும் தரலாம். தோல்வியையும் தரலாம்.
சிலர் எந்த பணபலமும் இல்லாமல் பக்கபலமும் இல்லாமல் வெறும் கையோடு தங்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள். சில வருடங்கள் கழித்து அவர்கள் பலரும் கவனிக்கத்தக்க அளவிற்கு முன்னேறி இருப்பார்கள். வாழ்வில் முன்னேற பணமோ பக்கபலமோ தேவையில்லை. நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் விடாமல் பிடித்துக்கொண்டு பலவிதமான முயற்சிகளைச் செய்தவண்ணம் இருக்க வேண்டும்.
தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாழ்நாளில் சுமார் 1063 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். மின்சார பல்பைக் கண்டுபிடிக்க முயற்சி செய்த வேளைகளில் அவர் பலமுறை தோல்வியைச் சந்தித்திருக்கிறார். ஓவ்வொரு முறையும் அவர் செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தார்.
பல்பு எரிய முக்கியமான ஒரு பொருள் டங்ஸ்டன். பல்பில் டங்ஸ்டனை பயன்படுத்தினால் வெற்றி பெறமுடியும் என்பதை எடிசன் பலமுறை முயற்சித்த பின்னரே கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் மூங்கில் இழை, சிறு கம்பி முதலிய பல பொருட்களை இணைத்துப் பார்த்தார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. கடைசியாக விடாமுயற்சியுடன் போராடி டங்ஸ்டனை பல்பில் பயன்படுத்தி வெற்றியும் கண்டார்.