இந்த உலகில் நல்லவர்களை அடையாளம் காண்பது எப்படி?

Lifestyle stories
Motivational articles
Published on

வீனமயமான இந்த உலகில் நல்லவர்களைப் பார்ப்பது என்பதே அரிதாகிக்கொண்டே வருகிறது. இந்த உலகில் ஆங்காங்கே நல்லோர் சிலர் இருப்பதால்தான் உலகம் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

ஔவை பிராட்டி இயற்றிய மூதுரையில் “நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்கிறார். இதன் பொருள் என்னவெனில் இந்த உலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவருடைய நற்குணத்திற்காகப் பெய்யும் மழை உலகத்தில் உள்ள அனைவருக்கும் நன்மை விளைவிக்கும் என்பதாகும்.

சுற்றத்தாரிடமும் நண்பர்களிடமும் அன்பாக நடந்துகொள்வதும், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதும், எப்போதும் நேர்மையாக இருப்பதும், உயிரே போனாலும் பொய் பேசாமல் உண்மையை மட்டுமே பேசுவதும் நல்லவர்களுடைய அடிப்படைக் குணங்கள்.

வெளித்தோற்றத்தையும் ஒருவர் பேசும் பேச்சுக்களையும் வைத்து ஒருவரை நல்லவர் என்று கூறிவிட முடியாது. தற்காலத்தில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதைப் புரிந்துகொள்வே முடியாத சூழல் நிலவுகிறது.

நல்லவர்கள் கனவிலும் தவறு செய்ய அஞ்சுபவர்கள். பிறருக்கு தீங்கு செய்யத் தயங்குபவர்கள். நல்லவர்கள் அமைதியானவர்களாக இருப்பதால் அவர்கள் கோழைகள் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. அவர்கள் பொங்கி எழுந்தால் அவர்களுடைய அறச்சீற்றத்தை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இதைக் கருத்தில் கொண்டுதான் “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

ஒருநாள் துரோணாச்சாரியார் தம்மிடம் குருகுல வாசம் மேற்கொண்ட பாண்டவர்களையும் கௌரவர்களையும் அழைத்தார். துரியோதனனை அழைத்து அவனிடம் “இந்த உலகில் நல்லவன் ஒருவனைக் கண்டுபிடித்து அழைத்து வா” என்று கூறி அனுப்பினார். பின்னர் யுதிஷ்டிரனை அழைத்து “இந்த உலகில் கெட்டவன் ஒருவனைக் கண்டுபிடித்து அழைத்து வா” என்று கூறி அனுப்பி வைத்தார். சில காலம் சென்றதும் திரும்பிய துரியோதனன் குருவிடம் “குருவே. பல இடங்களிலும் தேடிப்பார்த்தேன். என் கண்களுக்கு ஒரு நல்லவன் கூடத் தென்படவில்லை” என்றுரைத்தான். திரும்பிய யுதிஷ்டிரனும் “குருவே நான் பல இடங்களிலும் தேடிப்பார்த்தேன். என் கண்களுக்கு ஒரு கெட்டவன் கூடத் தென்படவில்லை” என்றான். இருவரும் ஒரே குருவிடம் கல்வி பயின்றவர்கள். இருவருக்கும் குரு ஒரே மாதிரிதான் கல்வி போதித்தார். மனதில் தீயஎண்ணம் உடையவனுக்கு எல்லோருமே கெட்டவர்களாகத்தான் தெரிவார்கள் என்பதும் மனதில் நல்ல எண்ணம் உடையவனுக்கு எல்லோருமே நல்லவர்களாகத்தான் தெரிவார்கள் என்பதும் இதன் மூலம் நமக்கு புலனாகிறது.

இதையும் படியுங்கள்:
முயற்சியே மூலதனம், விடாமுயற்சியே அடித்தளம்: உங்கள் வாழ்க்கையை ஒளிரச்செய்யுங்கள்!
Lifestyle stories

நல்ல எண்ணங்களை உடைய நல்லவர்களால் நேரத்திற்கு தகுந்தாற்போல் நடிக்கத் தெரியாது. மற்றவர்களை ஏமாற்றவும் தெரியாது. அவர்களால் பொய் சொல்லவும் முடியாது. நல்லவர்கள் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியாக வாழ வேண்டும். பிறர் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள். நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் இந்த உலகில் என்றென்றும் நிரந்தரமாக மதிப்பும் மரியாதையும் உண்டு. இதனால்தான் கெட்டவர்கள் கூட தங்களை நல்லவர்களாக்க் காண்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

நல்லவர்கள் பிறரால் மனவேதனை அடைந்து அவர்கள் அந்த வேதனையின் காரணமாக ஒரு சாபமிட்டால் அது நிச்சயம் பலித்துவிடும். நல்லோரின் சாபம் துன்புறுத்தியவரைத் துரத்தி வாழ்நாள் முழுவதும் மனவேதனைக்குள்ளாக்கிவிடும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் நல்லவர்களைத் துன்புறுத்தாதீர்கள்.

எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கும் நல்லவர்கள் சாபமிடுவார்களா? என்று கேட்பது புரிகிறது. ஆனால் தவிர்க்க இயலாத சூழலில் நல்லவர்களின் மனதிலிருந்து தவிர்க்கமுடியாமல் எழும் சாபமானது அதைப் பெறுபவரின் வம்சத்தை ஒரு நல்லபாம்பைப் போலத் தீண்டி அழிக்கும்.

எனவே எக்காரணத்தை முன்னிட்டும் நல்லவர்களைத் துன்புறுத்தக்கூடாது. மேலும் நல்லவர்களைத் தேடிச்சென்று நட்பு பாராட்டவும் பழகவேண்டும். நல்லோர் நட்பு நம் வாழ்க்கையை வளமாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com