
வெளியில் கண்ணால் பார்த்ததைத் தனி கருத்தாக மனத்தில் பதிய வைத்துக்கொள்வதை கண்ணோட்டம் என்கிறோம். ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் மற்றும் நிறம் போன்றவைகளைப் பொருத்தவரையில், பொதுவாக எல்லோருடைய கருத்துக்களும் ஒன்று போலத்தான் இருக்கும். ஆனால் அதனுடைய இயல்பைப் பொறுத்தவரை, குணங்களைப் பொறுத்தவரை கருத்துக்கள் கண்டிப்பாக மாறுபடும்.
இது உயிர்வாழும் ஜீவராசிகளிடம் உள்ள இயல்பாகும். அதிலும் மனிதனுக்கு மனிதன் இடையே உள்ள மாறுபாடு. மற்றவை காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஒரு விஷயத்தை நாம் புரிந்து வைத்திருப்பதற்கும், மற்றொருவர் புரிந்து வைப்பதற்கும் வேறுபாடு நிறையவே இருக்கும்.
ஏனெனில் ஒருவரை நாம் புரிந்து வைத்திருக்கும் சூழ்நிலை வேறு. அவரையே மற்றவர் புரிந்து வைத்திருக்கும் சூழ்நிலை வேறாக இருக்கும்.
ஆகவேதான், யாராவது, யாரைப் பற்றியாவது அபிப்பிராயம் கூறும் பொழுது, "நீங்கள் சொல்வது தவறு" என்று கூறக்கூடாது. அது அவர் புரிந்து கொண்டதை, அவருடைய தன் முனைப்பை அவமானப் படுத்துவதுபோல ஆகும். அதற்குப் பதிலாக, "நான் அவரைப் புரிந்து கொண்ட வகையில் என்னுடைய அபிப்பிராயம் இது. தவறாகக் கூட இருக்கலாம்" என்று மென்மையாக சுற்றி வளைத்து ஆரம்பிக்க வேண்டும்.
இந்த உலகத்தை, நீங்கள் பார்க்கும் கண்ணோட்டம் வேறு. புத்தர், ரமணர் போன்ற ஞானிகள் பார்க்கும் கண்ணோட்டம் வேறு. ஒரு மலரை, ஒரு தாவர விஞ்ஞானி பார்க்கும் கண்ணோட்டம் வேறு. ஒரு பெண் பார்க்கும் கண்ணோட்டம் வேறு ஒரு வியாபாரி பார்க்கும் கண்ணோட்டம் வேறு.
சாக்ரட்டீஸ் 'முறை' என்று ஒன்று உண்டு. சாக்ரட்டீஸ் எதையும் நேரடியாக ஆரம்பிக்கமாட்டார். தன் சீடர்களிடம் ஒரு கருத்தைத் திணிக்க வேண்டுமானால், சில சாதாரண கேள்விகளை அவர்களிடம் கேட்டு அவர்களிடமிருந்து "ஆமாம்", "சரி" என்ற சொற்களை வரவழைப்பார். அதாவது சீடர்கள், தன் கருத்தை மனத்தில் வாங்கும் அளவுக்கு அவர்களிடம் ஒரு சார்புநிலையை (Positive) அல்லது வாங்கும் தன்மையை (Receptive) ஏற்படுத்துவார். இந்த "ஆமாம்", "சரி" என்ற வார்த்தைகள் அவர்களிடமிருந்து போதுமான அளவுக்கு சேர்ந்த பிறகுதான் மெல்ல தன் கருத்தை வெளியிடுவார்.
சில பேர்கள் எடுத்த எடுப்பிலே, தான் சொல்லுவதுதான் சரி என்று ஆணித்தரமாக ஆரம்பிப்பார்கள். ஆனால் அவர் சரியாக இருக்காது ஏதோ காரணத்திற்காக, அவர் அதை ஆணித்தரமாக வலியுறுத்துவார். அப்போது நீங்களும் ஆணித்தரமாக மறுக்காதீர்கள். அப்படி செய்தால் வீண் விதண்டாவாதம் ஏற்பட்டு நட்பு முறித்துவிடும். வாதம் ஒருகாலும் ஜெயிக்காது.
எனவே இதனைக் கருத்திற்கொண்டு மற்றவர் அபிப்பிராயத்துக்கு மதிப்பு கொடுங்கள். மறுக்க வேண்டி சூழ்நிலை வந்தால், மிகவும் மென்மையாக சுற்றி வளைத்து நாம் சொல்லும் கருத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக, அவர்களது மனதினை முதலில் பக்குவப்படுத்தி பிறகு ஆரம்பியுங்கள்.
நீங்கள் சொல்லுவது தவறு நான் சொல்லுவதுதான் சரி என்று ஒரு போதும் கூறாதீர்கள். நட்பு முறிவுக்கு இதைவிட மோசமான வார்த்தைகள் கிடையாது. உஷாராகப் பேசுங்கள்.