
துன்பங்கள் வருவது இயற்கையின் நியதி; வாழ்வியலின் மாற்ற முடியாத அமைப்பு. துன்பமே இல்லாத வருங்காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் நிகழ்கால வாழ்வைத் தவறவிட நேரிடும்.
ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். துன்பமே இல்லாத ஒரு வாழ்க்கை என்பது இந்திரலோகத்தில்கூட இருக்க முடியாது. அப்படி ஒன்று இருப்பதாக நீங்கள் கற்பனை வேண்டுமானால் செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட கற்பனை வாழ்வை அடைவதற்காக மனிதர்கள் முயலலாம்; பெரிதாகப் போராடலாம்.
அத்தகைய போராட்டத்தில் ஈடுபடும் போதெல்லாம் நிகழ்கால வாழ்வை அவர்கள் பலி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். குறிப்பிட்ட கட்டத்தில் திரும்பிப் பார்க்கும்போது வாழ்க்கைளில் முழுமையாக இழந்துவிட்டது அவர்களுக்குத் தெரியவரும். அதன் பின் அவர்களின் புலம்பல் பெரிதாகிவிடும். ஏனெனில் மரணம் வாசலில் வந்து நிற்கின்ற நேரமாக இருக்கும் அது. பெரும்பாலோர் மரணத் தறுவாயில்தான் ஒட்டுமொத்த வாழ்வையும் தாங்கள் தவறவிட்டதை உணர்கிறார்கள்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இப்போதே வாழத் தொடங்குவதுதான். இந்தக் கணத்திலேயே வாழ ஆரம்பிப்பதுதான். துன்பம் இல்லாத ஒரு காலம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிராமல் துன்பத்தையும் எதிர்கொண்டும் ஏற்றுக்கொண்டும் வாழ்வதுதான்.
துன்பமயமான காலக்கட்டத்திலும் இயல்பாக வாழ்வை நடத்த வேண்டுமானால் அந்தத் துன்பங்களை வெல்லவேண்டும். அதாவது துன்பத்திற்குத் துன்பப்படாத மனநிலையைப்பெற வேண்டும்.
இடுக்கண் வருங்கால் நகுக' என்கிறான் வள்ளுவன். அதாவது. துன்பம் வரும் வேளையில் சிரியுங்கள்' என்று கூறுகிறான். துன்பம் வரும்போது பலர் சிரிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அது விரக்திச் சிரிப்பு. வாழ்வில் தாங்கள் மட்டுமே சபிக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் நம்பிக்கையின்மையின் அடையாளச் சிரிப்பு.
வள்ளுவன், சிரியுங்கள்' என்று கூறுவது ஆழ்ந்த பொருள் பொதிந்தது. அது புரிந்துகொள்ளப்பட வேண்டும். சிரிப்பு என்பது வெறும் உதடுகளின் அசைவோ திறப்போ அல்ல. அது உள்ளத்தின் மலர்ச்சி. உள்ளம் ஒருபோதும் சுருங்கிவிடாமல் விரிந்த மலராகவே விளங்கிக் கொண்டிருக்குமானால் துன்பங்களால் வரும் வருத்தம் தெரிவதில்லை.
அப்படி மலர்ந்த பூவைப்போல் மனம் திகழ்வதற்கு எதையும் இலேசாக எடுத்துக்கொள்கிற, விளையாட்டாகப் பார்க்கிற பக்குவம் அமைந்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட மனப்பாங்குதான் துன்பத்தை வெல்வதற்குச் சரியான வழி இதனை தவிர்த்து மற்ற வழிகள் எல்லாம் துன்பத்தை வெல்வதற்கு துணை புரியாது.