
அவசர முடிவுகள் எடுப்பது சில சூழ்நிலைகளில் அவசியமாக இருக்கலாம், குறிப்பாக உடனடி ஆபத்து ஏற்படும் பொழுது அவசரமாக செயல்படுவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் மற்ற நேரங்களில் அது சரியானதல்ல. நிதானமாக யோசித்து, எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து, உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது தான் சிறந்த முடிவுகளுக்கு வழி வகுக்கும். சில நேரங்களில் சூழ்நிலைகள் மிகவும் விரைவாக மாறி, யோசிக்கவே நேரம் தராது. அம்மாதிரியான சமயங்களில் மிகச்சிறந்த முடிவை எடுக்க முடிந்த வரை விரைவாக செயல்பட வேண்டும்.
அவசர முடிவுகளை எடுத்து அல்லல்படுபவர்கள் ஏராளம். அவசர அவசரமாக எடுக்கும் முடிவுகள் தேவையற்ற பிரச்னைகளை உண்டாக்கி விடும். எந்த ஒரு செயலையும் அல்லது முடிவையும் அவசரமாக எடுக்கும் பொழுது அது எதிர்மறையான விளைவுகளையோ அல்லது ஆபத்துகளையோ ஏற்படுத்தக்கூடும். எனவே முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது நிதானமாகவும், சிந்தித்தும் செயல்பட வேண்டியது அவசியம். அவசரமான செயல்கள் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோபம் அல்லது பயம் போன்ற உணர்ச்சிகள் முடிவெடுக்கும் திறனை பாதிக்கும். மிகுந்த மன அழுத்தத்தோடும், குழப்பத்தோடும் இருக்கும் சூழ்நிலைகளிலும் முடிவுகளை எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. அம்மாதிரியான சமயங்களில் முடிந்த வரை அமைதியாக இருப்பது தெளிவாக சிந்திக்க உதவும். அவசர காலங்களில் என்ன செய்யவேண்டும் என முன்பே திட்டமிடுவதும் சரியான முடிவுகளை எடுக்க உதவும். செயல்படுவதற்கு முன்பு சிந்திக்கவும், விருப்பங்களை எடை போடவும், சாதக பாதக விளைவுகளை கருத்தில் கொள்ளவும் நேரம் ஒதுக்கவேண்டும். அவசர முடிவுகள் எடுப்பதற்கான காரணங்கள் குழப்பம், சந்தேகம், தன்னம்பிக்கை இல்லாமை, பயம் போன்றவைதான்.
இவற்றைத் தவிர்த்து சிறந்த முடிவுகளை எப்படி எடுப்பது? நாம் எடுக்கும் முடிவு எதிர்காலத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உணர்ந்து எடுக்கக்கூடிய முடிவே சிறந்த முடிவாகும். உதாரணத்திற்கு கர்மவீரர் காமராஜர் அவருடைய ஆட்சிக்காலத்தில், புதிதாக துவங்கப்பட்ட கல்லூரியில் சேர்வதற்காக வந்த விண்ணப்பத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது? எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது? போன்ற குழப்பங்கள் அதிகாரிகளிடையே வெகுநேரமாக இருந்து கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த காமராஜர் விவரத்தை கேட்டறிந்து உள்ளே சென்றவர் சிலவற்றை தேர்வு செய்து எடுத்து வந்தார்.
அதிகாரிகளுக்கு ஒரே குழப்பம். காமராஜர் எதன் அடிப்படையில் விண்ணப்பங்களை தேர்வு செய்தார் என்று. அதை காமராஜரிடமே கேட்டுவிட, அவரோ எந்த மாணவரின் விண்ணப்பத்தில் தந்தையுடைய கையொப்பம் இடும் இடத்தில் கைரேகை இருந்ததோ அந்த விண்ணப்பங்களை முதலில் தேர்வு செய்தேன் என்றார்.
எதிர்காலத்தில் படிக்காத குடும்பத்திலிருந்து வரும் பட்டதாரிகளால் எதிர்கால கல்வி வளர்ச்சியில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று உணர்ந்து இந்த முடிவை எடுத்தார். அவருடைய இந்த முடிவு எதிர்கால கல்வி வளர்ச்சியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் ஒரு முடிவு எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றறிந்து எடுக்கும் முடிவே சிறந்த முடிவாகும்.
முடிவு எடுப்பது என்பது ஒரு சிறந்த கலையாகும். அதனை சரியாக தேர்ந்தெடுக்கும் பொழுது நமக்கு நல்ல எதிர்காலம் அமைவது உறுதி. எனவே அவசர முடிவு எடுக்காமல் சிந்தித்து செயலாற்றுவதே சிறந்தது.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!