
இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ஏதேனும் ஒரு வழியில் எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள்.
இந்த எதிரிகளைக் கண்டு பயப்படுவோர் பலர்; பணிந்து போவோர் பலர்: தப்பிக்க வேண்டி பாராட்டுவோர் பலர்; வழிவகை தெரியாது எதிர்த்து சின்னா பின்னமாவோர் சிலர்; தற்கொலை செய்து கொள்வோர் சிலர்.
இவையெல்லாம் ஏன் என்று எண்ணிப்பார்த்தால் ஒன்று புலப்படும். அதுதான் 'ஒன்றுமே இல்லாதது'. இந்த ஒன்றுமே இல்லாததற்காகவா நீங்கள் தற்கொலை முயற்சிக்கும், தரந்தாழ்ந்தும் போகிறீர்கள்!
உங்கள் எதிரியை நீங்கள் நிச்சயம் வெல்லலாம், வெற்றி பெறலாம்.
முதலில் எதிரியை வெல்லக்கூடிய மிகச்சிறந்த ஆயுதம் அவனைப் பொருட்படுத்தாமல் இருப்பதுதான். கிராமப்புறங்களில் இன்றும் இந்தப் பேச்சு வழக்கில் உள்ளது. 'சூரியனைப்பார்த்து நாய் குரைக்கிறது. உனக்கென்ன?' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
எவ்வளவுக்கெவ்வளவு நாம் நம் எதிரியைப் புறக்கணிக்கிறோமோ. எவ்வளவுக்கெவ்வளவு நாம் அவனை லட்சியம் செய்யாமல் இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவன் சோர்ந்து போவான்.
அவனை இவ்விதம் சோர்வடையச் செய்வதன் மூலம் நாம் வெற்றி பெற்றவனாகிறோம். எப்படி? என்னடா, இவன் என்ன செய்தாலும் இப்படி கல்லுளிமங்கனாக இருக்கிறானே என்று அவன் எண்ணும்படி செய்து விட்டதினால்!
மாறாக இதனை விடுத்து அவனது செய்கைகளை அப்படியே நாமும் பிரதிபலிக்கக்கூடாது. அப்படிபிரதிபலித்தோமானால் சர்வநாசம் நிச்சயம் என்பதனை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
அவனால் உங்களுக்கு உருவான பிரச்னையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதே அவனுக்குத் தெரியக்கூடாது.
பாதிப்பு எதுவாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும்போல் இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
தெரிந்தோ, தெரியாமலோ ஆரம்பத்தில் அவன் தூண்டுதல் பெற நாம் காரணமாக இருந்துவிட்டோம். இனி கவனம் ஒன்றுதான் நமக்குத் தேவையானது!
அவன் உங்களைப்பற்றிக் கூறும் பொய் பிரசாரங்களோ, வதந்தியோ. நீண்ட நாளைக்கு நிலைப்பதற்கில்லை. பொய் என்றும் நிலைக்கக் கூடியதில்லை என்பதனை நினைவில் கொள்ளவேண்டும்.
இவையெல்லாம் அதிகாலை நேரத்து பனிமூட்டம். உண்மையெனும் கதிரவனின் கதிர்கள் பட்டால் ஓடி மறைந்துவிடும். ஆனால் அந்தக் கதிரவன் வரும்வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும். அதுவரையில் எக்காரணம் கொண்டும் நீங்கள் எதிர்ப்பிரச்சாரத்தில் இறங்கி விடக்கூடாது. அது ஆபத்து. மாறாக அவனது வதந்திக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடி விடுவதோ, தற்கொலை செய்து கொள்வதோ கோழைத்தனம் மட்டுமல்ல, உங்கள் எதிரிக்கு அது ஒரு முழு வெற்றியாகும்.
அவனது வதந்தி உண்மை என்று ஆகிவிடும். இப்படி ஒரு வாய்ப்பினை நீங்களே உங்கள் எதிரிக்கு உருவாக்கித் தருதல் ஆகாது. எதிரிகள் நமக்கு பலவகை உண்டு. காதல் என்ற பெயரில் ஏமாற்றியவன். திருமணத்திற்குப்பின் எதிரியாதல். மறைமுகமாக நம்மால் பாதிக்கப்பட்டவன், தொழில் ரீதியாக, பொதுப்பிரச்னையில் மற்றும் உறவினர் என்று எதிரிகளில் பலப்பல வகைகள் உள்ளனர்.
இவர்கள் எல்லாம் சீண்டிப்பார்த்து மகிழ்ச்சி அடையக்கூடிய வழியில் நாம் இடம் தரலாகாது. அப்புறம் அவர்களுடன் போராடுவதிலேயே நமது வாழ்க்கை வீணடிக்கப்பட்டுவிடும். எனவே எப்போதும் பாதிப்பையும், பலவீனத்தையும் வெளிக்காட்டல் ஆகாது.
சமய சந்தர்ப்பங்கள் என்று ஒன்று உண்டு. அது உங்களைத் தேடிவரும். அதுவரை நீங்கள் உங்கள் ஆற்றல்களை எல்லாம் அடக்கியே வைத்திருங்கள். அதன்பின் உங்களின் தாக்குதலில் இருந்து அவர்கள் தப்பிக்கவே வழி இல்லை என்பதை மாத்திரம் மனதில் கொள்ளுங்கள்.