

"உங்களை நம்புங்கள் - நீங்கள் நினைப்பதை விட உங்களுக்கு அதிகம் தெரியும்." - பெஞ்சமின் ஸ்போக்.
"நீங்கள் நம்புவதை விட நீங்கள் தைரியமானவர், நீங்கள் நினைப்பதைவிட புத்திசாலி என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்." -கிறிஸ்டோபர் ராபின்.
அறிஞர்களின் இந்த இரண்டு தன்னம்பிக்கை மொழிகளிலும் அடிப்படையாக இருப்பது நமக்கு நாமே ஊக்குவித்துக் கொள்ளும் பாஸிடிவ் என்பது தெரியும். ஆம் ஒருவரின் வெற்றிக்கு அவசியம் தேவை பாஸிடிவ் எனப்படும் நேர்மறை எண்ணங்களும் செயல்களும்தான்.
எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் எனக்குள் தோன்றும் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்க்க முடியவில்லையே என்று யோசிப்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள்.. நீங்கள் மட்டுமல்ல வாழ்க்கையில் பெரும்பாலோனோர் பத்து சதவிகிதமாவது எதிர்மறை எண்ணங்களை (negative thinking) கொண்டவராகவே இருப்பார்கள். ஆனால் ஒன்று.. எதிர்மறை எண்ணங்களை போக்க முயலாமல் தொடர்ந்து வளர்த்துக் கொள்பவர்கள் எதிர்வரும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறுவர். ஆனால் நேர்மறை எண்ணங்கள் நம்பிக்கையைத் தந்து மன அழுத்தத்தை போக்க பேருதவி புரிகிறது.
சரி. பாஸிடிவ் என்று எதைக் குறிக்கிறோம்? மனதில் என்றும் மகிழ்ச்சியுடன் உடல் நலத்தில் ஆரோக்கியத்துடன் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக ஆராய்ந்து வெற்றிகரமான முடிவுகளை எடுக்கும் ஒரு சிறந்த அணுகுமுறையையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) என்கிறோம்.
என்ன செய்தால் பாஸிட்டிவ் எண்ணங்கள் நமக்குள் பெருகும்? வழிகள் இருக்கிறதா? இதோ…
ஓடிக்கொண்டே இருக்காமல் சிறிது நேரம் ஒதுக்கி மனதிற்கு அமைதி தரும் தியானம் செய்யப் பழகுங்கள். கண்களை மூடி தாறுமாறாக ஒடும் எண்ணங்களை கட்டுப்படுத்தி நீங்கள் வெற்றி பெறப்போவது போல் நேர்மறை எண்ணங்களை ஓடவிட்டு மகிழுங்கள். ஆரம்பத்தில் அடம்பிடிக்கும் எண்ணங்கள் நாளடைவில் நம் லகானுக்குள் கட்டுப்படும்.
உங்களுக்கு பழக்கமே இல்லையெனினும் தவிர்க்காமல் புதிய விஷயத்தில் நாட்டம் செலுத்துங்கள். இதற்கு முன் நான் இந்த செயலை செய்ததே இல்லை என்று யோசிப்பதை விட புதிதாக ஒரு விஷயத்தை பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நேர்மறையாக சிந்தித்து அதில் உள்ளவற்றை அனுபவத்தில் அறிந்து கொள்ளுங்கள். அனுபவம் என்றும் அழியாத சொத்து.
எதிர்மறை எண்ணங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல் உதவிகள் தேவைப்படுவோருக்கு ஏதாவது நன்மை செய்ய முயற்சி செய்யுங்கள். இப்படி செய்யும் போது தவறான எண்ணங்களிலிருந்து கவனத்தை வேறு நல்ல விஷயத்தில் திசை திருப்புவது மட்டுமல்ல பெரும் மனநிறைவும் உண்டாகும். இதன் மூலம் நம் எண்ணங்களும் நல்லதையே நாடும்.
வாய்ப்புகள் வரும்போது யோசிக்காமல் அதை கைப்பற்ற வேண்டும். இதை என்னால் செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களால் முடியாதென்றால் அதைச் செய்ய வேறோரு வெற்றியாளர் தயாராக இருப்பார். அந்த செயல் மிகவும் கடினமாக இருக்கும் என்று எண்ணாமல் நேர்மறையாக வேறொரு கோணத்தில் இதை அணுகி வெற்றி பெறுவேன் என்று சிந்தித்து தாமதிக்காமல் காரியத்தில் இறங்குங்கள்.
(Be Positive) பி பாஸிடிவ் என்பது எண்ணத்தில் இருந்தால் செயல் சிறக்கும் . தொடரும் வெற்றியும் உங்களைத்தான் காதலிக்கும்.
-சேலம் சுபா