
சிக்கல்கள் இது ஒரு பொதுவான விஷயம் என்று சொல்லலாம். மனிதனாய் பிறந்த எல்லோருக்குமே நிச்சயம் சிக்கல் என்று ஒன்று வரும். ஆனால், அந்த சிக்கலை நாம் சமாளித்து அதில் இருந்து மீண்டு வருவதுதான் மிகப்பெரிய சவாலே. எந்த மாதிரியான சிக்கலாக இருந்தாலும் சரி அதை மேல மிக சுலபமாக கையாண்டு அந்த சிக்கலில் இருந்து வெளியே வந்துவிடலாம்.
சிக்கல் வரும்போது, ஒட்டுமொத்தச் சிக்கலையும் எண்ணி மலைக்கவோ, மருளவோ, தயங்கவோ கூடாது. சிக்கலைப் பகுதிகளாகப் பிரித்துப் பகுத்து, காரணம் அறிந்து, ஒவ்வொன்றாகத் தீர்வு கண்டால் ஒட்டு மொத்த சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.
சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு அதன் வழி தீர்வுக்கு வர வேண்டும். நூற்கண்டு சிக்கலாகிவிட்டால் ஒட்டு மொத்தமாகப் பிடித்து இழுத்தால் இன்னும் சிக்கலாகிவிடும். நூலின் தலைப்பைக் கண்டறிந்து அதன் வழி சிக்கலைத் தீர்த்தால் சிக்கல் தீர்ந்துவிடும்.
ஒரு நிர்வாகியின் அறையில் ஒரு கணினியின் படமும், அதன் கீழே,
"சிக்கல்களுக்கு தீர்வு...Ctrl + alt + del +" என்றிருந்தது.
அவரிடம் விளக்கம் கேட்டபோது சொன்னார்,
Ctrl என்பது (Control) (கட்டுப்படுத்தல்)
alt என்பது (alternate) ( மாற்று)
del என்பது (delete ) (நீக்குதல்.
சிக்கல் வரும்போது நம்மை நாமே
கட்டுப்படுத்தி, மாற்று வழியை யோசித்தால் வந்த சிக்கலை நீக்கி விடலாம். வாழ்க்கைக்கு உதவும் கணினியின் குறியீட்டு சொற்கள் இவை என்றார்.
மாற்றத்தை ஏற்படுத்தினால்தான் முன்னேற முடியும் என்பதைப் புரிந்து கொண்டு புதிய சிந்தனைகளை புகுத்திக்கொண்டே இருக்க வேண்டும். வழக்கமாக செய்கின்ற வேலைகளை மாற்றி செய்வதற்கு முயற்சித்தாலே போதும். மாற்று சிந்தனைகள் மலரத் தொடங்கிவிடும்.
வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்க முனையும்போது அதற்காக பல மாற்று வழிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் எந்த சிக்கல்களில் இருந்தும் வெளிப்படலாம். சிக்கல் என்பது தீர்க்கக் கூடியதே. அதை நாம் சாமர்த்தியமாக கையாண்டால் எப்பேர்ப்பட்ட சிக்கலையும் தீர்த்துவிடலாம் என்ற தெம்பும் தைரியமும் உங்கள் மனதில் பிறந்திருக்குமே.