
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே சில தனித்துவமான திறன்கள் உண்டு. அதை நாம் நம் வாழ்க்கை பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டு அதை மேம்படுத்துவது அவசியம். திறமைகளை அடையாளம் கண்டு மேம்படுத்துவதற்கு முதலில் நம் பலங்கள் மற்றும் பலவீனங்களை ஆராயவேண்டும். பின்பு மற்றவர்களிடம் இருந்து கருத்துக்களை பெறவும், பயிற்சி மற்றும் வழிகாட்டுதலின் மூலமும் நம் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து பயிற்சி செய்து திறமைகளை மேம்படுத்துவதன் மூலம் நம்மால் நம் திறமைகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
பலம் மற்றும் பலவீனங்களை அறிவது என்பது நாம் எதில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை புரிந்துகொண்டு செயலாற்றுவதே ஆகும். அத்துடன் நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அதில் ஆர்வம் காட்டுகிறோமா என்பதையும் பார்க்க வேண்டும். ஆர்வம் இருந்தால் தான் எந்த ஒரு செயலிலும் நம்மால் முழுமையாக ஈடுபட முடியும். முக்கியமாக நம் திறமைகளை வளர்க்கத் தேவையான பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களையும் பெறவேண்டியது அவசியம். புதுப்புது விஷயங்களை செய்து நம் திறமைகளை மேம்படுத்த முடியும்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்பது போல் முயற்சியும் பயிற்சியும் அவசியம். ஏதேனும் ஒன்றை செய்யத் தொடங்கும் பொழுது மனதில் இருப்பதற்கு முதலில் செயல் வடிவம் தரலாம். நம்முடைய ஆர்வமும் கற்றலும் புதிய சிந்தனைகளை தானாகவே தோற்றுவிக்கும்.
அதைக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். நாம் விளையாட்டாக செய்ய தொடங்கும் ஒரு செயல் நம்முடைய வளர்ச்சியை பன்மடங்காக பெருக்கலாம். எனவே நாம் என்ன செய்கிறோம் என்பதை விட எதை செய்தாலும் சிறப்பாக முழு கவனம் செலுத்தி செய்கிறோமா என்பதில் கவனம் அவசியம்.
ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். எதுவுமே நமக்கு எளிதாக கிடைக்காது. அனைத்திற்கும் முயற்சியும், உழைப்பும், தேடலும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையும் அவசியம். நம் திறமைகளை அடையாளம் கண்டு கொள்ள நமக்கு ஆர்வமும், ஆழ்ந்த சிந்தனையும் மட்டும் இருந்தால் போதாது. அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இதுவரை முயற்சிக்காத புதிதான ஏதாவது ஒன்றை செய்ய முற்படும்பொழுது நம் திறமை வெளிப்படும்.
சிலருக்கு அவர்களின் பலம் தெரிவதில்லை. என்னால் எதுவும் சாதிக்க முடியாது, திறமையற்றவன் என்று அவர்களின் திறமை மேல் அவர்களுக்கு நம்பிக்கை இருப்பதில்லை. யானையை சங்கிலியால் கட்டிப்போட்டே பழக்கிவிட்டால் அதற்கு அதன் பலம் தெரியாதாம்! அது போல் சிலருக்கு தங்களிடம் உள்ள திறமை தெரிவதில்லை.
நமக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிக் கொணர வாய்ப்புகளை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நமக்கான சரியான வாய்ப்பை பிறரால் என்றும் ஏற்படுத்தி தர இயலாது. எனவே நமக்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொண்டு முயற்சியும் பயிற்சியும் செய்ய நம் திறமைகளை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.
திறமை என்பது பிறப்பில் வருவது அல்ல; வளர்த்துக் கொள்வதில் உள்ளது. எந்த வேலை செய்யும்பொழுது நம் மனம் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறதோ அதுவே திறமையாகும். சிலருக்கு சிறுவயதிலேயே அவர்களுடைய திறமை இயற்கையாகவே வெளிப்பட்டுவிடும். பலருக்கும் ஏதாவது ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது அவ்வளவுதான்!