
பிறர் பேசுவதை மனம் கொடுத்து முதலில் கேட்கும் தாராளமான மனப்பான்மை ஒரு நண்பரை பெறுவதற்கு மிக எளிதான இலகுவான சுலபமான மற்றும் நிச்சயமான வழியாகும்.
அதேபோல் உயர்வதற்கு இலகுவாக இருக்குமாறு உங்களை பிரச்னைகள் இல்லாத எளியவராக ஆக்கிக்கொண்டு பிறர் உங்களை நேசிக்கும் அளவில் இருங்கள்.
புதுப் புது நட்புறவுகளை வளர்த்துக் கொள்வதில் முன்முயற்சி காட்டுங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களைப் பிறரிடம் அறிமுகம் செய்துகொள்ளுங்கள். அவருடைய பெயரை நன்றாக மனதில் வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் பெயரையும் அவர் மனதில் பதியும்படியாகச் செய்யுங்கள், அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவரிடம் கடிதம் மூலம்/தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
மனித இயல்புக்கே உண்டான நலிவான அம்சங்களையும் எல்லைகளையும் ஒப்புக்கொள்ளுங்கள். எவரையும் பிழையே செய்யாத முழுமையைப் பெற்றவர் என்று நினைக்காதீர்கள்.
ஒருவரிடம் உள்ள பிடித்தமான குணங்களையே பாராட்டிப் புகழும் பழக்கத்தைக் கை கொள்ளுங்கள். வேண்டாதவற்றை ஒதுக்குங்கள். பிறர் மூன்றாமவரைப் பற்றி உங்களிடம் குறை கூறுவதை அல்லது புறம் பேசுவதைக் கேட்காதீர்கள். எவரைப் பற்றியும் நேர்மறையாகவே எண்ணுங்கள். நேர்மறையான முடிவுகளே உங்களுக்குக் கிடைக்கும்.
பிறரிடம் பேசும் பொழுது நாம் மேலே சொன்னபடி உரையாடல்களில் ஒரு தாராள மனப்பான்மையைக் கையாளுங்கள். வெற்றியாளர்களைப்போல நடந்துகொள்ளுங்கள். பிறரைப் பேச அனுமதியுங்கள். அவர் தன் கொள்கைகளை, கண்ணோட்டங்களை விளக்கட்டும். அவர் செய்த சாதனைகளையும் சொல்ல அனுமதியுங்கள்.
என்றைக்கும் தவறாது மரியாதையைப் பேணி வாருங்கள். மரியாதை கொடுக்கப்படுபவர் மகிழ்ச்சி அடைவார். உங்களுக்கும் அது திருப்தியாக இருக்கும்.
சள சளவென்று பேசிக்கொண்டிருப்பவராகவே இருக்காதீர்கள். பிறர் பேசுவதையும் கவனியுங்கள். ஊன்றி கவனியுங்கள். நண்பர்களைச் சம்பாதியுங்கள். கற்றுக்கொள்ளுங்கள். மென்மேலும் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்களுக்குப் பிறரை பழிக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்படும்பொழுது, நீங்கள் எப்படி அதை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் இன்னமும் எவ்வளவு காலம் கழித்து உங்களுக்கு வெற்றி கிட்டப்போகிறது என்பது தீர்மானிக்கப்படும்.
உயர்வு பெறவேண்டும் சிறப்பு பெறவேண்டும் என்ற குறிக்கோளை இலக்கை நாடி செல்பவர்களின் பேச்சு சுருங்க கூறி விளங்க வைக்கும் தன்மையில் அமையும் ஒவ்வொரு சொல்லும் முத்துக்கள்போல உதிரும்.