
ஊருக்குள் 'ஸ்டிரிக்ட் ஆபிசர்'னு பெயர் எடுத்தவருக்கு சோம்பேறி பையன் ஒருவன் இருந்தான். அவன் எப்பவும் லேட்டா எழுந்து ஸ்கூலுக்கு போறது நண்பர்களோடு விளையாடிக்கிட்டே இருக்கறதுனு ஒழுக்கம் இல்லாம இருந்தான். இதைப் பார்த்த அவனோட அப்பா கவலையோடு அவன்கிட்ட, "ஏண்டா, எப்ப பார்த்தாலும் விளையாடிக்கிட்டே இருக்க? ஒழுக்கமா படிச்சு, வேலைக்குப் போகணும்டா!" னு சொல்ல அந்த பையன் " சரி அப்பா, படிச்சு, வேலைக்குப் போனா என்ன கிடைக்கும்?"னு கேட்கறான்.
அதுக்கு அவங்க அப்பா, "நல்ல சம்பளம் கிடைக்கும், நல்லா சாப்பிடலாம், நல்லா இருக்கலாம்"னு சொன்னாரு. அதுக்கு அந்த பையன், "அப்பா, நான் இப்பவே நல்லா சாப்பிட்டு, நல்லா விளையாடிட்டு இருக்கேனே, எதுக்கு படிக்கணும்?"னு கேட்டான். அந்ந ஸ்டிரிக்ட் ஆபிசர் என்ன சொல்றதுனு தெரியாம திருதிருனு முழிச்சாரு. ஊருக்குத்தான் உபதேசம் தன் பிள்ளையைத் திருத்த வழி தெரியலையேனு.
இது வெறும் கதை அல்ல… நிஜத்திலும் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தராத இளைய தலைமுறையினர் பெருகிவிட்டனர். சமீபத்தில் பார்த்த ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் டிரைவர் வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் அப்பா காசில் சொகுசு பைக்குகள் வாங்கும் இளைஞரின் காணொளி வைரலானது. இதுவும் ஒருவகையான ஒழுக்கக் கேடானதுதானே? பெற்றோரின் அன்பை தவறாக உபயோகித்துக்கொள்ள நினைக்கும் அந்த இளைஞர் எதிர்காலம் எப்படி இருக்கும்?
எவ்வளவு பெரிய வெற்றியாளர்களாக இருந்தாலும் ஒழுக்கமில்லை எனில் அவர்கள் இந்த சமூகத்தில் மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை. வாழ்க்கையில் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் மிகப்பெரிய இடத்தைப் பெறுகிறது. நமது பழக்கவழக்கங்கள், நடத்தைகள் மற்றும் விளைவுகளை வடிவமைப்பதில் ஒழுக்கமே முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படி!
ஒழுக்கம் நமது இலக்குகளில் வழிகாட்டுதலை வழங்கி கவனம் செலுத்த உதவுகிறது. நமது பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கவும் ஒழுக்கமே அடிப்படையாகிறது.
வெற்றிக்கு முக்கியத் தேவை சுயகட்டுப்பாடு. இதை வளர்க்க உதவும் ஒழுக்கம் சிறந்தவற்றை நம்மை நோக்கி ஈர்க்கவும் வைக்கும். ஒழுக்கமுள்ளவர்களைத் தேடி வாய்ப்புகள் வருவது போல. இதனால் நமது தனிப்பட்ட வளர்ச்சி மேன்மை பெறும். நமது பொறுப்புணர்வை ஒழுக்கமே தீர்மானிக்கிறது. அது குடும்பம் என்றாலும் சமூகம் என்றாலும்.
நம்பிக்கத்தன்மையும், பொறுப்பாகவும் இருப்பதன் மூலம் உறவுகள் மற்றும் நண்பர்களின் மரியாதை மற்றும் நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. பொதுத்தளத்தில் பயனுள்ள தகவல்தொடர்புகளை ஊக்குவிக்கிறது, தடைகள் மற்றும் சவால்களை சமாளிப்பதற்கு மிகவும் அவசியமான திறனை வளர்க்க ஒழுக்கமே உதவுகிறது. சவாலான காலங்களில் விடாமுயற்சியுடன் செயல்படவும், இலக்குகளில் உறுதியாக இருக்கவும் ஒழுக்கம் நமக்கு உறுதுணையாக உள்ளது.
ஒழுக்கம் என்பது கருணை மற்றும் அன்புடன் தொடர்புடையது என்பதை இந்த பிரபலமான முல்லாக் கதை மூலம் அறியலாம்.
வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுழைவதைப் பார்த்த முல்லா திருடனைப் பார்த்து அலறாமல் "தம்பி நீ திருட வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், நீ என் வீட்டிற்கு வந்ததற்கு உனக்கு ஒரு பரிசு தருகிறேன் ஏற்றுக்கொள்" என சொல்ல வந்த திருடன் விழிக்கிறான்.
முல்லா திருடனுக்கு ஒரு பெரிய தட்டு நிறைய உணவைத் தருகிறார். திருடன் ஆச்சரியம் "ஐயா நான் திருட வந்ததற்கு என்னை அடிக்காமல் ஏன் எனக்கு உணவு கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டான். அதற்கு முல்லா, "நீ திருட வந்தாலும், உன் பசியைப்போக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். சாப்பிடு" என்றாராம். அதன் பின் அந்தத் திருடன் திருடியிருப்பான் என நினைக்கிறீர்களா?
மனிதரின் தீய எண்ணங்களை களையும் ஒழுக்கம் ஏன் அவசியம் என்பதற்கான காரணங்களை புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறக்கும்.