

ஒரு சிலர் அடுத்தவர்களை பார்த்து எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் அவர்கள் முகத்திற்கு நேராகவே கூறிவிடுவார்கள். இல்லையென்றால் மறைமுகமாக இன்னொருவரிடம் கூறிக்கொண்டிருப்பார்கள். ஒன்றை யோசித்து பார்த்தீர்களா? எப்படி நீங்கள் அடுத்தவர்களைப் பற்றி குறை கூறுகிறீர்களோ, அதைப்போலவே, அதே அடுத்தவர்கள் உங்களைப் பற்றியும் வேறு ஒருவரிடம் கூறலாமே...
அடுத்தவர்களிடம் இருக்கும் குறைகளையே பார்க்கும் நீங்கள் உங்களிடம் குறை இருக்கிறதா என்று பார்த்தீர்களா? உண்மையில் உங்களிடம் குறை இருந்தாலும் அது உங்கள் கண்ணுக்கு தெரியாது, மாறாக அடுத்தவர்களின் கண்களுக்குத்தான் தெரியும். இதுதான் உண்மை. எப்படி என்று கேட்கிறீர்களா?
உதாரணத்திற்கு உங்கள் முதுகில் அழுக்கு இருந்தால், அது உங்களுக்குத் தெரியுமா, தெரியவே தெரியாது. நீங்கள் என்னுடைய முதுகுப்பகுதி மிகவும் சுத்தமாக இருக்கிறது என்று தனக்கு தானாவே நினைத்துக் கொண்டு அடுத்தவர்களின் முதுகை பார்க்கிறீர்கள். அவர்களின் முதுகில் இருக்கும் அழுக்குதான் உங்களுக்கு தெரிகிறது. அதேபோல உங்கள் முதுகில் இருக்கும் அழுக்கும் மற்றவர்களுக்கு தெரியும். ஆகவேதான் ஒரு சில சமயங்களில் சிலர், அவன் முதுகில் இத்தனை அழுக்கு இருக்கிறது அதை வைத்துக்கொண்டு அடுத்தவனை பற்றி பேசுகிறானா இவன் என்று கிண்டலாக சொல்வார்கள்.
ஆகவே, குறை என்பது எல்லோரிடமும் இருக்கும். எல்லோருமே தவறு செய்வார்கள். குறை இல்லாத மனிதர்களே இவ்வுலகத்தில் இல்லை. எல்லோருமே எதாவது ஒரு நிர்பந்தத்தில் தவறும் செய்திருக்கிறோம், செய்து கொண்டும் இருக்கிறோம். இதில் நாம் ஏன் அடுத்தவரின் மேட்டருக்குள் மூக்கை நுழைக்க வேண்டும்? நமக்கு இருக்கும் தவறை அலசி ஆராய்ந்து அதை செய்து கொள்ளலாமே.... அதை விட்டுவிட்டு வேண்டாததை செய்து நேரத்தையும் எனர்ஜியையும் ஏன் வீணாக்க வேண்டும்?
காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது, ஆகவே நீங்கள் உங்களிடம் இருக்கும் குறைகளை உங்களின் பெற்றோர்களிடமோ அல்லது குழந்தைகளிடமோ அல்லது உங்களின் துணையிடமிருந்தோ கேட்டு தெரிந்து கொண்டு அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.
உங்களிடம் இருக்கும் குறைகள் எப்போது உங்களுக்கு தெரிய வருமோ, அப்போதிலிருந்து நீங்கள் அடுத்தவர்களை பார்க்கும் போதெல்லாம், உங்களுக்கு அவர்களிடம் குறைகளும் கண்ணுக்குத் தெரியாது, தெரிந்தாலும் நீங்கள் அதை அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவும் மாட்டீர்கள். இதுதான் உண்மை. இதை புரிந்துகொண்டு இனிமேலாவது அடுத்தவர்களை குறை சொல்லும் பழக்கமிருநதால் அதை நிறுத்திக்கொள்ளவும்.