
நம் எதிரிகள் ஒருபோதும் நம்மைப் பற்றி நல்லவிதமாக சொல்லப் போவதில்லை என்பது உண்மையிலும் உண்மை. எனினும் அவர்கள் சொல்லும் கருத்தில் சில உண்மைகளும் இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஓர் எதிரியிடம் இருந்து வெளிப்படும் கருத்துக்களைக் கேட்கும் பொழுதெல்லாம் நாம் நம்மை ஒரு முறை சுயமதிப்பீடு செய்து கொள்வது நல்லது. நீங்கள் உங்களைச் சிறந்த மனிதனாக மாற்றிக் கொள்ள அது உதவும்.
இரக்க குணம் படைத்தவர்கள், மற்றவர்களுடைய தவறுகளுக்கான உண்மையான காரணங்களையும், இயலாமையையும் புரிந்து கொள்கிறார்கள். குற்றவாளிகள் என்றும் தெரிந்தும் அவர்களின் பலவீனங்களை அறிந்து மன்னித்து விடுகின்றார்கள்.
இப்படிபட்டவர்களின் உள்ளத்தில் உள்ளே இந்த மனித நேயமே அவர்களை உலகிற்கு அடையாளம் காண்பிப்பதோடு அவர்களை உலக அரங்கில் தூக்கி நிறுத்துகிறது.
ஒரு காலத்தில் கிரேக்க நாட்டில் மன்னராக விளங்கிய பெரிக்லிஸ் என்பவர் மீது கோபம் கொண்ட ஒரு மனிதர் அவரது அரண்மனைக்கு வந்து அவரை மிகவும் கேவலமாக திட்டித் தீர்த்தார்.
திட்டினார் என்றால் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்ல, மாறாக ஒருநாள் காலையில் இருந்து இரவு இருட்டும் வரைத் திட்டிக் கொண்டே இருந்தார். அதனால் களைத்து சோர்ந்துபோன அவர், தன் வீடு செல்ல ஆயுத்தமானார்.
அப்போது மன்னர் தனது அரண்மனை பணியாளரை அழைத்து, விளக்கை எடுத்து சென்று அந்த மனிதரை பாதுகாப்பாக அவரது வீட்டிற்குச்செல்ல அவருக்கு துணையாக அனுப்பி வைத்தார்.
நாம் நமது எதிரியிடம் உள்ள நல்ல பக்கங்களைக் கவனித்து, அவருடன் சமாதானமான போக்கை கடைப்பிடித்து, அவரை நேசிக்கத் தொடங்கினால், அவரை நாம் நல்ல நண்பராகவும் ஆக்கிக்கொள்ள முடியும்.
மற்றவர்களுடன் இணக்கமாக பழகும் முறையோடு நாம் நமது தனிப்பட்ட திறனை வளர்த்துக் கொண்டால், எவ்வளவு பெரிய எதிரியையும் சமாளித்து எளிதில் வெற்றிபெற முடியும் உங்கள் எதிரிகளை அன்பின் வழியாக அணுகுங்கள். உங்களை நீங்களே அன்பானவர்கள் ஆக்குங்கள்.
அன்பு என்பது வலிமை மிகுந்த, அனைவரும் வைத்துக் கொள்ள வேண்டிய ஆயுதம். அதை வைத்து அதிகாரம் செய்யாதீர்கள். விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் அரவணையுங்கள்
எதிரிகள் இல்லாமல் இருக்க அவர்களை நண்பர் களாக்குங்கள். அவர்களின் தேவைக்கு உதவி செய்யுங்கள், அவர்களின் தவறுகளை மன்னித்துவிடுங்கள்.
தவறுகளை மன்னிக்கும் குணம் நமக்கு வந்துவிட்டாலே போதும் வாழ்க்கையில் முன்னேற்றம்தான். அதேபோல் தவறு என்று தெரிந்தால் அதை சரி செய்து கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வரவேண்டும்.