
உங்கள் மனதில் எது கருக்கொள்கிறதோ அது உருக்கொள்ளவும் முடியும்". தேவை ஆக்கபூர்வமான மனோபாவம் (Positive mental attitude). இது நேர்மறையானது. நிச்சயத்தன்மை கொண்டது. வெற்றிக்குத் தேவை இந்த அணுகுமுறைதான்.
உலகில் இலட்சோப லட்சம் பேர் தங்கள் வாழ்க்கையில் பொறுப்பேற்றுக் கொள்ளவும், தாங்கள் நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோள்களை அடையவும் ஆக்கபூர்வமான மனோபாவம் உதவும். இன்று அரசியலில், கல்வித் துறையில், தொழிலில், கலைத்துறையில் முதன்மை வகிப்பவர்களெல்லாம் ஆக்கபூர்வ மனோபாவத்தின் அத்தாட்சிகளாயிருக்கிறார்கள்.
நாம் எல்லோருமே ஆக்க பூர்வமானதும், எதிர்மறையானது மான எண்ணங்களோடும், உணர்வுகளோடும் பிறந்திருந் தாலும், சூழ்நிலை என்னவோ பெரும்பாலும் எதிர்மறையாகி விடுகிறது. நாம் முதலில் பேசக்கற்றுக் கொண்ட சில வார்த்தைகளில் 'இல்லை' என்பதும் ஒன்று. எதிர்மறை சக்திகள் நம் வாழ்க்கை நெடுகவும் தொடரவே செய்கின்றன.
நாம் நல்ல முறையில் எதைச் செய்தாலும் எப்போதாவது தான் பாராட்டு வார்த்தை காதில் விழுகிறது. ஆனால், நம்முடைய தவறுகளைச் சுட்டிக்காட்டவும், நம்மைக்குறை கூறவும் நண்பர்கள், அண்டை அயலார், சகஊழியர்கள், உறவினர்கள் என்று நிறையப் பேர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் வெற்றிபெற ஒரு வலுவான தன்முனைப்பு (Ego), நம்பிக்கை தேவைப்படுகிறது. எதிர்மறை சக்திகளை முறியடிப்பதற்கான மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
நாம் எந்த அளவு ஆக்கபூர்வமாய் வலுப்படுத்திக் கொள்வதென்பது ஆளுக்காள் வேறுபடுகிறது. வீட்டிலும், அலுவலகத்திலும், தொழிலகத்திலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் நாம் எதிர்த்து நிற்கும் எதிர்மறை சக்திகள் பல. அதற்குச் சரியான விகிதத்தில் ஆக்கபூர்வ சக்திகள் நம்மிடம் இருக்கவேண்டும்.
ஒரு ஆயுள்காப்பீட்டு முகவர் தம்முடைய வேலை நிமித்தம் எத்தனை பேருடைய நிராகரிப்புகளை ஏற்கும்படியாகிறது தெரியுமா?
முகத்துக்கு நேரே சொல்லப்படுகிற மறுப்புகள், முதுகுக்குப் பின்னே அறைந்து சாத்தப்படும் கதவுகள் இவற்றைச் சகித்துக்கொள்ள அவருடைய சிந்தனை ஆக்கபூர்வமாயிருந்தால்தான் முடியும்.
அதே சமயம் ஒரு மருத்துவர் அதிலும் அறுவை சிகிச்சையில் புகழ்பெற்ற மருத்துவர் என்றால் நோயாளிகள் மட்டுமல்ல அவருடைய துறையில் உள்ளவர்களும் அவரிடம் எத்தனை மரியாதை காட்டுகிறார்கள்! அவருடைய பதவிக்கும், திறமைக்கும் கிடைக்கிற மரியாதை அது.
வெற்றிக்கான விதிகளைப் பட்டியலிடுகிறபோது அதில் முதலிடம் பெறுவது இந்த ஆக்கபூர்வ மனோபாவந்தான். இது ஒரு நடைமுறை, செயற்பாங்கு. இதன்மூலமே உங்கள் வாழ்க்கையை இன்னும் சிறப்பானதாக்கிக்கொள்ள முடியும்.