

கடலில் மீன் பிடிக்கச் செல்கிற மீனவர்கள் தரைக்காற்று கடலை நோக்கி வீசுகின்ற இரவு நேரத்தில் மீன் பிடிக்கச் செல்லுகிறார்கள். கடல் காற்று பூமியை நோக்கி வீசும் பகல் நேரத்தில் கடற்கரைக்குத் திரும்புகிறார்கள்.
காற்று வீசுகின்ற திசையில்தான் பாய்மரத்தைச் செலுத்த முடியும் என்பதால் இப்படிச் செய்கிறார்கள். காற்று சாதகமாக வீசுகின்ற திசையைக் கணித்து இரவு நேரங்களில் இப்படிச் செய்கிறார்கள்.
எந்தக் காரியத்தையும் தக்க தருணம் அறிந்து செய்கின்ற போதுதான் வெற்றி சுலபமாகிறது. இரும்பு சூடேறிய நிலையில் அதை அடித்துச் சரிசெய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு.
நாம் விரும்புகின்றபோது காற்று வீசவேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது. அதனால் காற்று வீசுகின்ற போதுதான் நம்முடைய காரியத்தையும் சாதித்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் மனிதர்கள் முன்னேறுவதற்குத் தேவையான ஒரு வாசகத்தையும் நம் முன்னோர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். அதுதான் 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்கிற வாசகமாகும்.
சாதாரணக் களத்துமேட்டு அனுபவத்தை வைத்துச் சொல்லப்பட்டுள்ள இந்த வாசகம், மிகப்பெரிய வாழ்க்கை உண்மையினைப் போதிக்கின்ற வாசகமாக அமைந்திருக்கிறது.
'வாய்ப்பு வரும்போது அதைப் பயன்படுத்திக்கொள்' என்கிறது இந்த வாசகம். இதனைப் புரிந்துகொண்டு நாம் செயல்பட்டாலே வெற்றியின் வாசலைத் தொட்டுவிடலாம்.
களத்துமேட்டில் நெல் இருந்தால் நல்ல உழவன் காற்றின் வருகைக்காக காத்திருக்கிறான். சோம்பேறி உழவன் காற்றை தவறவிட்ட பிறகு கை பிசைந்து நிற்கிறான்.
அடுக்கடுக்காகச் சந்தர்ப்பங்கள் வந்து போகின்றன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறான். சந்தர்ப்பங்களைத் தவறவிடுபவன் தோல்வி அடைவதோடு அடுத்த வாய்ப்புக் கிடைக்காதா? என்று ஏங்கியும் தவிக்கிறான்.
இன்று உனக்கு, நாளை வேறொருவருக்கு, மறுநாள் வோறொ வருக்கு என்று சந்தர்ப்பங்கள் மாறிக்கொண்டேயிருக்கும். நாம் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறவேண்டும்.
நல்ல வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். நமது ஆற்றலலை வெளிப்படுத்தும் கருவியாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நாம் வெற்றி பெறுவதற்குத் திறமை வேண்டும். அதை வெளிபடுத்தும் முறையை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சந்தர்ப்பம் நமக்குச் சாதகமாக வளைந்து கொடுக்கும்.
ஆகவே 'சிறு துரும்பும் பற்குத்த உதவும் 'என்பதுபோல நமக்கு சிறிய ஒரு வாய்ப்புக் கிடைத்தாலும், அதை தவறவிடாமல் மனதார ஏற்று நம்முடைய உழைப்பை முழுமூச்சில் செலுத்தி காரியத்தில் இறங்கினால் அதற்கு அடுத்து பெரிய வாய்ப்பு நாம் தேடாமலேயே நம்மை தேடிவரும் என்பது நிச்சயமான உண்மை.