

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அகத்தில் மூடுபனிபாக உறைந்து கிடக்கும் மிருக சக்தி விலகி, மனிதம் போற்றும் மாட்சிமை சக்தி மனங்களில் ஊடுருவி, மனித உறவுகளோடு சங்கமித்து உறவாடும் செயலில் ஒன்றிணைந்து வாழ்ந்து, புறத்தே தோன்றும் போலி முகஸ்துதி அகற்றுவோம்.
வாழ்க்கை என்பது, உறவுகளோடும் நட்போடும் சங்கிலி தொடர் போன்று இணைந்து வாழ்வது. அதில் அன்பின் பிணைப்பு முதன்மையானது. இருமுனை உள்ளங்களின் புரிதல் அவசியமானது. அதில் தொடங்குவதுதான் மனிதம் பூக்கும் சுவாசம். அதுதான் இதயம் வரை நுழைந்து, உறவென்னும் கதவை திறந்து உள்ளே சென்று, இணையும் கரங்களாக ஒன்றிணைந்து செயல்படும் தன்மை மனதில் வெளிப்பட்டு, நல்வினை ஆற்றுகிறது என்பதை உணர்வோம்.
மனிதர்கள் வாழ்க்கையில் மனிதம் வலுவாக வேரூன்றி, அடித்தளம் உருவானால், வேற்றுமை பிம்பங்கள் திரை விலகும், அமைதி வழித்தடம் பிறக்கும். மனதில் தூய்மையான எண்ணங்கள் தோன்றும், மனநிறைவு தரும், சகமனிதர்கள் துயர் துடைக்க வழிவகுக்கும். மகிழ்ச்சியின் அரும்புகள் உதடுகளில் பூக்கும். நாம் வாழும் காலம் மனிதம் சார்ந்து வாழ்ந்து காட்டுவோம்.
வாழ்க்கையில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை காட்டிலும், எப்படி வாழக்கூடாது என்பதை உணர்த்தும் வலு மிக்க வார்த்தை தான் மனிதம். நாம் இதுவரை வழுவி வாழ்ந்த வாழ்க்கையாக இருந்தால், அதனை விட்டு நழுவி, இப்படித்தான் வாழ வேண்டும் எனும் வாழும் முறை அறிந்து, மனிதம் தழுவி வாழ சபதம் ஏற்ப்போம்.
மனித குலத்தின் அனைத்து சமூக மக்களும் மனிதம் என்னும் மையப் புள்ளியில் இணைந்து, சமூகத்தின் நல்லிணக்கத்திற்கு பாலமாக இருக்கட்டும். மனித நேயத்தின் மாண்பு விழுமியங்களை ஒவ்வொரு மனங்களிலும் ஒளி ஏற்றி அமைதியும், அரவணைப்பும், வளர்ச்சியும் கூடிய ஆகச்சிறந்த எதிர்காலத்தை கட்டமைப்போம்.
கலியுக வாழ்க்கையில் போராட்டம், வன்மம், பகை தீர்த்தல், வினை அறுத்தல் போன்ற அரக்க குணத்தில், இன்றைய வாழ்க்கை முறையின் மாற்றத்தில், சிட்டுக்குருவி இனம் அரிதானது போல், மனிதம் அரிதாகி வலுவிழந்து வருவது நல்லது அல்ல என்பதை உணர்வோம். திசைகள் வாழ்ந்து காட்டும் தடங்களே தவிர, திசை ஒன்று நின்று, பகை கனல் கண்டு, அடுத்தவர்களை வீழ்த்தி, வேடிக்கை பார்ப்பது அல்ல. மனிதநேயத்தில் கால் தடம் பதித்து, சமத்துவ சகோதரத்துவ உணர்வுடன் வாழ்வில் ஒன்று இணைவோம்.
வாழ்வியல் நெறிமுறையோடு வாழும் மனிதத்தின் மையப் புள்ளியாக நாம் இருப்போம். அந்த புள்ளிக் கொண்டு, மற்றவர்களை சேர்த்து, அடித்தளம் இட்டு, தொடங்கி மனிதநேய கோலம் போட்டு சிறப்பான முறையில் வலு சேர்த்து உன்னதமான பணி செய்து, வளம் சேர்ப்போம்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய தன் உள்ளத்தில் மனிதநேயம் பூத்த மாமனிதர் வள்ளலார் வாழ்ந்த பூமி இது. இந்த செயல் எழுத்து வடிவில் படித்துவிட்டு, மறந்து போகும் நினைவாக பார்க்க கூடியது அல்ல. நம் இதயத்தில் புகுந்து, நமக்குள் கிளர்ந்து எழும் மனிதநேயத்தின் ஆற்றலின் குறியீடாக இருக்க வேண்டும்.
மனிதனாக வாழ்வோம், மனிதநேயம் உள்ளத்தோடு வாழ்க்கையில் தடம் பதிப்போம். மனிதம் சிறந்தால், மெல்லிய மிருதுவான மனித பூக்களின் வாசம் உலகெங்கும் வீசும்!