

மனித வாழ்க்கை கிடைப்பது அருமையான வாய்ப்பு. எக்காரணம் கொண்டும் அதை வீணாக்கி விடக்கூடாது. ஓசையை ஒழுங்குபடுத்தி இனிய சங்கீதம் வருகிறது. வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இரசனையிலிருந்துதான் இன்பம் பிறக்கிறது. நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் ரசனை உணர்வோடு செய்யுங்கள்.
உங்களைச் சுற்றிலும் பரவி இருக்கும் அழகை இரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையை உங்களுடைய கண்ணோட்டம்தான் உருவாக்குகிறது. உங்களுக்கு அமைந்த எல்லைக் கோட்டுக்குள் இனிமையான வாழ்க்கையினை உங்களால் அமைத்துக்கொள்ள முடியும். வாழ்க்கை என்ற இனிய சங்கீதத்தை ரசித்துக் கேட்க நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதன் இனிய ரீங்காரம் வாழ்க்கை முழுவதும் உங்களுக்குக் கேட்டுக்கொண்டே இருக்கும்.
நவீன வாழ்க்கையில் சங்கீதத்தை விட சப்தமே அதிகமாக இருக்கிறது. விஞ்ஞான யுகத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக வாழ்க்கையில் அபஸ்வரங்களை மனிதன் வளர்த்துக் கொண்டே போக முடியாது. இன்றைக்கு ஆடம்பரம் எனக் கருதப்படுவது, நாளைக்குத் தேவை என்கிற நிலையினைப் பெற்றுவிடுகிறது.
வாழ்க்கை என்பது சூழ்நிலைகளோடு இணக்கமாக நம்மை இணைத்துக் கொள்கின்ற ஓர் உபாயமே ஆகும். மாறுகின்ற சூழ்நிலைக்கு அனுசரித்துப் போகவேண்டும். அதே சமயம் நாம் அமைத்துக் கொண்டுள்ள வாழ்க்கை வரம்புகளை மாற்றிக் கொள்ளவும் கூடாது.
வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட முடியாது. சூழ்நிலைத் தாக்கங்களுக்கேற்ப வாழ்க்கை நெளியவும் வளையவும் அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு பரிமாணம் உண்டு.
அதை அவரவர்தான் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒருவரைப் போன இன்னொருவர் வாழ முடியாது. அவ்வாறு வாழ வேண்டிய அவசியமும் இல்லை. சமுதாய அமைப்பில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தனித்தனி வாழ்க்கைதான்.
சமுதாயத்தில் நாம் வகிக்கும் பாத்திரமும் நாம் பெறுகின்ற அங்கீகாரமும் நாம் அமைத்துக் கொள்கின்ற வாழ்க்கையினைப் பொறுத்தே உருவாகிறது. உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துத் திட்டமிட்டு அமைத்துக் கொள்கிறீர்களோ, அதுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்பதற்குப் பொதுவான இலக்கணம் இருந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் தனியான இலக்கணமும் உண்டு. அந்தத் தனியான இலக்கணம்தான், ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் தனித்தன்மையினையும் நிருணயிக்கிறது.
ஒரே ராகத்தை எல்லா வித்வான்களும் ஒரே மாதிரிப் பாடுவதில்லை. ஒவ்வொருவருக்கென்றும் தனி பாணி உண்டு. அதுபோலவே ஒவ்வொரு வித்துவானும் ஏதோ ஒரு ராகத்தை சிறப்பாகப் பாடுகின்றவர்களாகவே இருக்கிறார்கள். சில ராகங்களை விரும்பிப் பாடுகின்றவர்களும், வேறு சில ராகங்களைத் தொடாமல் விட்டு விடுகின்றவர்களும் உண்டு. அதுபோலத்தான் வாழ்க்கைச் சங்கீதமும் அமையமுடியும்.