

நாம் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுவது, வளர்ச்சிக்காக நமது திறன்களையும் சூழ்நிலையையும் மதிப்பிடுவதற்கும், நமது தற்போதைய நிலையை புரிந்துகொள்வதற்கும் உள்ள இயற்கையான மனிதப்போக்குதான் காரணமாகும். இது நம்மை மேம்படுத்திக் கொள்ளவும் சுயமரியாதையை வளர்த்துக்கொள்ளவும் உதவும். ஆனால் இது சுயமதிப்பில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும்.
நாம் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் நமது திறமைகளையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள முடியும். அத்துடன் நம்மைவிட சிறந்து விளங்குபவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு நம்மை மேம்படுத்திக்கொள்ளவும் இது உதவுகிறது. இது சுயமதிப்பீடு செய்ய ஒரு சிறந்த நிலையாக கருதப்படுகிறது. ஒருவருடன் நம்மை ஒப்பிடும்பொழுது, நமது தற்போதைய சூழ்நிலை மற்றும் வாழ்க்கைப் பயணத்தை மதிப்பிட இது உதவுகிறது.
ஒப்பிடுவது என்பது இந்த சமூகத்தில் நாம் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஒப்பீடு இல்லாத இடத்தில் முன்னேற்றம் இருக்காது. என்னதான் நமக்கு நாமே போட்டி என்றாலும் பிறரைப் பார்த்து உற்சாகமடைவதும், உத்வேகம் அடைவதும் இயல்பானது.
சமூகத்தில் நாம் யார் என்பதை புரிந்து கொள்ளவும், நமது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஒப்பீடு ஒரு சிறந்த அடிப்படைப் பகுதியாகும். நம்மை பிறருடன் ஒப்பிடுவதன் மூலம், நமது துறையில் உள்ள மற்றவர்களின் திறன்களையும், அவர்களின் சாதனைகளையும் பற்றிய தகவல்களை சேகரிக்கிறோம். சில சமயங்களில் அவர்களின் வெற்றியைப் பார்த்து நாம் உந்துதல் பெறுகிறோம். இது நம்முடைய சொந்த இலக்குகளை அடைய நம்மை வெகுவாக ஊக்குவிக்கிறது.
நாகேஷ் சொன்னதுபோல் ஒரு சாதாரண கரண்ட் கட் வந்தாலே அடுத்த வீட்டை பார்த்து அங்கேயும் கரண்ட் இல்லையென்றால் தான் மனம் திருப்தி கொள்கிறது. இது சரியான போக்கு இல்லைதான் என்றாலும் ஒப்பீடு இருந்தால்தான் போட்டியிருக்கும், வளர்ச்சி இருக்கும். முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். சுசூகி பார்த்து ஒப்பிடாத வரை மாருதி 800 லேயே நொண்டி அடித்து காணாமல் போயிருக்கும். நோக்கியாவோடு ஒப்பிடாவிட்டால் சாம்சங் வளர்ந்திருக்காது. எனவே ஒப்பீடு என்பது தவறல்ல, அது நம் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும் வரை.
பொதுவாக நாம் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது அவர்களின் வெற்றிகள் மட்டுமே நம் கண்ணில்படும். அதை அடைவதற்கு அவர்கள் உழைத்த உழைப்போ, சந்தித்த பின்னடைவுகள் போன்றவற்றைப் பற்றியோ நாம் காண்பதில்லை அல்லது கண்டுகொள்வதில்லை. இது ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கி நம்மைத் தாழ்வாக உணர வைக்கலாம். சில சமயம் ஒப்பிடுவது நம்முடைய சுயமரியாதையைக் குறைக்கலாம். இது நாம் எதையாவது சாதித்திருந்தாலும் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு குறைவாக மதிப்பிட வழிவகுக்கும்.
சமூக ஊடகங்களும் ஒருவரின் வெற்றிக்கு பின் உள்ள கடினமான உழைப்பையும், பட்ட அவமானங்களையும், பின்னடைவுகளையும் காட்டுவதில்லை. அவர்கள் வாழ்க்கையின் பிரகாசமான பக்கத்தை மட்டுமே காட்டுகின்றன. இது ஒப்பிடுவதை மேலும் எளிதாக்குகிறது.
எனவே, இத்தகைய ஒப்பீடுகளின் மீது அதிக கவனம் செலுத்துவது நம்முடைய தனிப்பட்ட வளர்ச்சியை குறைத்து தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே ஒப்பிடுவது என்பது நம் திறமைகளையும் அறிவையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் தான் இருக்க வேண்டுமே தவிர பிறவற்றில் கவனம் செலுத்துவது நம் சுய மதிப்பையும் மரியாதையும் இழக்க வைக்கும்.