
ஓஷோ என்ற மகாஞானி, 'உங்களைப் பற்றி உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ நினைக்காதீர்கள். அப்படி நினைப்பது அடுத்தவர்களை தாழ்வாகவோ அல்லது உயர்வாகவோ நினைக்க வழி வகுத்துவிடும். நீங்கள் நீங்களாக உங்கள் இயல்பான மனிதநேயத்தோடு, அன்பும், கருணையும் கொண்டு இருங்கள்
ஒருவர் டாக்டருக்கு படித்து ஒரு தேர்ந்த டாக்டராக இருந்தால் அவருக்கு உடற்கூறு வியாதிகள் மருந்துகள் போன்றவற்றில் தான் அறிவும் திறமையும் இருக்கும். உதாரணமாக பொறியியல் விவசாயம், மொழி இப்படி எவ்வளவோ பிரிவுகளில் இவர் அறியாதவராகவே இருக்கிறார்.
ஆகவே படிப்பு என்பது ஒரு துறையைச் சார்ந்த விஷயம். மற்ற துறைகளில் ஏதோ ஓரளவு மேம்போக்கான அறிவு இருக்கலாம். இது படிக்காதவனிடமும் உண்டு. ஆகவே, நான் படித்தவன் என்ற செருக்கு யாருக்கும் வேண்டாம். அதைப்போலத்தான் பணம். படிப்பையாவது ஓரளவு நம்பலாம். ஆனால் பணம் கொஞ்சம் கூட நிரந்தரமில்லாதது. இதை வைத்துக்கொண்டு, ஒருவன் தான் உயர்ந்தவன் என்று கருதினால், அவனைப்போல முட்டாள் யாரும் இருக்க முடியாது.
குஜராத் பூகம்பத்தில் எத்தனை கோடீஸ்வரர்கள் ஒரே இரவில் பிச்சைக்காரர்கள் ஆனார்கள். எத்தனையோ தகுதியற்றவர்கள் என்று கருதக்கூடியவர்கள் அடுத்தவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆகவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்.
படிக்காத பெரியாகும், காமராஜரும்தான் தமிழ்நாட்டில் பெரும் மாறுதல்களை உண்டாக்கினார்கள். படிக்காத பாமரர்களுக்குத்தான் உள் உணர்வு அதிகம். அந்தக் காலத்தில் உள்ள பெண்களுக்கு படிப்பு என்பதே இல்லை. ஆனால் அவர்களுக்கெல்லாம் அசாத்திய உள் உணர்வு இருந்தது. ஒருவரை பார்த்த உடனேயே அவர்கள் எந்த நோக்கத்திற்காக வருகிறார்கள் என்பதை உடனேயே புரிந்துகொள்ளுவார்கள். இந்த உள்ளுணர்வு படித்தவர்களைக் காட்டிலும் படிக்காதவர் களிடம் அதிகமாக வேலைசெய்யும்.
ஏனெனில் படித்தவர்கள் எதற்கும் தான் படித்ததை மட்டுமே நம்புவார்கள். இது வாழ்க்கைக்கு ஓரளவுதான் பயன்படும். படிக்காதவர்கள் சற்று விழிப்புணர்வாக இருந்தால் அவர்களிடம் உள்ளுணர்வு மிகவும் பிரமாதமாக வேலை செய்யும்.
எனவே இதனைக் கருத்திற் கொண்டு யாரையும் தாழ்வாக நினைக்காதீர்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. இதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.