அவமானங்களே வாழ்க்கையின் வெற்றிக்கான அஸ்திவாரம்!

lifestyle articles
Motivational articles
Published on

வமானங்கள். மனித வாழ்வில் மனதை உலுக்கி எடுக்கும் ஒரு விஷயம். வாழ்வில் ஒருவர் அவ்வப்போது சந்திக்கும் அவமானங்கள் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். ஒருவரின் கடைசி மூச்சு வரை அத்தகைய சம்பவங்கள் மறக்கவே மறக்காது. ஆனால் நம் வாழ்வில் அவமானங்கள் இல்லாமல் உயர்வு என்பது இல்லை.

“நீயெல்லாம் ஒரு ஆளா?” “நீ எதுக்குமே லாய்க்கில்லே. உன்னாலே எதையுமே செய்ய முடியாது” என்று என்று வசதி படைத்த ஒருவர் தன் உறவினர்களை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தும்போது அவமானப் பட்டவரின் மனதில் ஒரு வெறி இயல்பாகவே எழும். “உன் கண்முன்னாலேயே உயர்ந்து காட்டுகிறேன் பார்” என்ற சவால் மனதில் அப்போதே முளைத்துவிடும். அதன் பிறகு அவர் வெறித்தனமாக உழைக்க ஆரம்பிப்பார். இத்தகைய அவமானங்கள் பலரை உயர்த்தி உன்னதமான மனிதர்களாக ஆக்கியும் விடுகின்றன.

ஒருவரை வாழ்வில் உயரவிடாமல் செய்து விட முடிவு செய்தால் அவரை பாராட்டிக்கொண்டே இருந்தால் போதும். பாராட்டு மழையில் நனையும் அவர் மனது அடுத்தகட்ட உயர்வைப் பற்றி சிந்திக்காது. இன்னும் வாழ்வில் உயரவேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தாது.

வணிகம், கல்வி, திரைத்துறை இப்படி பல துறைகளில் வெற்றி பெற்று உச்சியில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். தொடக்கத்தில் அவர்கள் பலவிதமான அவமானங்களை சந்தித்தவர்களாகவே இருப்பார்கள். பாக்கெட்டில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வாழ்க்கையைத் தொடங்கியவர்களில் பலர் கோடீஸ்வரர்களாக உலா வருவதை நாம் பார்த்திருக்கிறோம். பார்க்கவும் போகிறோம். அத்தகையவர்களின வாழ்க்கைக்குப் பின்னால் ஏராளமான அவமானங்களும் அதைத் தொடர்ந்து கடினமாக உழைப்பும் இருக்கும்.

வெற்றியாளர்கள் தொடக்க வாழ்க்கையில் பட்ட அவமானங்கள் அவர்களின் மனதில் ஒரு நெருப்புப் பந்தைப்போல ’சுழன்று கொண்டே இருக்கும். அந்த நெருப்புப் பந்தை அணையவிடாமல் அதைப்பற்றி அவ்வப்போது நினைத்து உழைத்தபடியே இருப்பார்கள். ஒரு வெற்றியை சந்தித்துவிட்டால் போதும். அடுத்தது தொடர்ந்த வெற்றிதான். ஒரு கட்டத்தில் அவர்களின் வாழ்க்கையானது அவமானப்படுத்தியவர்களே வியந்து அவர்களை அண்ணாந்து பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு உயர்ந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
போதுமடா சாமி! குற்ற உணர்வின் பிடியில் இருந்து விடுபடுவது எப்படி?
lifestyle articles

வள்ளுவப் பெருந்தகை “தீயினால் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு” என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதுபோல வார்த்தைகளால் ஏற்படும் அவமானம் மிகக்கொடியது. அந்த காயம் மனதில் பதிந்து கடைசிவரை நிரந்தரமாகத் தங்கிவிடும்.

உண்மையில் சொல்லப்போனால் நேர்மையாக உழைத்து உயர்ந்தவர்கள் பிறரை அவமானப்படுத்துவதில்லை. கேலியும் செய்வதில்லை. இடையில் எதிர்பாராமல் பணக்காரராய் ஆனவர்களே பிறரை ஏளனமாகப் பார்ப்பதையும் இகழ்வதையும் செய்கிறார்கள். அவமானத்தை எவர் ஒருவர் அவமானமென நினைக்கிறார்களோ அவர்களால் வாழ்க்கையில் வெற்றிபெறவே முடியாது.

அவமானம் என்பது உண்மையில் உந்துசக்தி. அதை துடைத்துத் தூக்கிப் போடுபவர்களும் உண்டு. அதை நினைத்து நினைத்து மனதில் நிறுத்தி வெறியோடு உழைத்து உயர்பவர்களும் உண்டு.

ஒருவகையில் பார்த்தால் இவ்வாறாக அவமானங்களால் உயர்ந்தவர்கள் தங்கள் அவமானப்படுத்தியவர்களை ஒரு கட்டத்தில் அழைத்து அவர்களைப் பாராட்டிப் பரிசளித்துத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கவேண்டும். அவமானங்களே பலருடைய வாழ்க்கையை உயர்த்தி இருக்கிறது. இது ஒரு நம்பமுடியாத உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com