

ஈன்று புறம் தருதல் தாய்க்குக் கடமை
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடமை
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடமை
ஒளிரும் வால் சுழற்றி களிறெறிந்து பெயர்தல்
காளைக்குக் கடமை
என்ற கருத்தினை வலியுறுத்துகிறது புறநானூறு.
‘கடமைதான் விதியை நிர்ணயிக்கின்றது’ என்கிறது கிரீஸ் நாட்டுப் பழமொழி.
கடமையிலிருந்து தவறும்போது குற்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த குற்ற உணர்வு ஓரளவு வரை தேவையானது. வேண்டும் என்றே தவறிழைக்காமலும், பிறரை துன்புறுத்தாமல் இருக்க அது நம்மை நெறிப்படுத்துகிறது. எனினும் எல்லை கடந்தால், அது நமது அன்றாட வாழ்க்கையையும் மனநலத்தையும் பாதிக்கிறது.
குற்ற உணர்வை அகற்ற விரும்பும் ஒருவர் முதலாவதாக தன்னிடம் உள்ள குற்ற உணர்வை அறிந்து, புரிந்து, உணர்ந்துகொள்ள வேண்டும். எவ்வளவு விரைவில் புரிந்துகொள்கிறோமோ அவ்வளவு விரைவில் அகற்ற முற்படலாம்.
குற்ற உணர்வு ஏற்படும்போது அமைதியற்று காணப்படுகிறீர்களா? சினம்கொள்கிறீர்களா? உடல் உறுப்புகள் எவற்றிலும் அதன் பாதிப்பு காணப்படுகிறதா? என்று கவனித்துப் பாருங்கள். உங்கள் உணர்வை அறிந்துகொள்ளலாம்.
குற்ற உணர்வு சரிதானா? நீங்கள் செய்தவற்றிற்குத்தான் அவ்வாறு உணர்கிறீர்களா? உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவத்திற்கும் நீங்கள் திருத்திக்கொண்ட பின்னரும் அவ்வாறு உணர்கிறீர்களா? அப்போது, அவற்றை நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்.
உங்களது தவறுகளால் யாருக்கும் தீங்கு விளைந்திருந்தால், அதனைப் போக்க நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்கலாம். நீங்கள் உணவு பழக்கத்தால் அல்லலுறுகிறீர்களா? முயற்சி செய்து மாற்றிக் கொள்ளலாம். அதிக எடை குறைக்க உடற்பயிற்சி செய்யலாம். பிறரிடம் தவறாக பேசியிருந்தால் மன்னிப்புக் கோரலாம்.
உங்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் உங்கள் மன்னிப்பை ஏற்க மறுக்கிறாரா? அல்லது அவர் அணுகும் நிலையில் இல்லையா? உங்களிடம் நீங்களே மன்னிப்பு கோருங்கள். இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள். அதோடு விட்டுவிட்டு நகர்ந்து செல்லுங்கள். மறப்போம், மன்னிப்போம். பிறருக்கு மட்டுமல்ல, நமக்கும் பொருந்தும். எதையும் முழுமையாக சரிவர செய்ய இயலவில்லையே என வருந்தாது, இயன்றவரை சரியாக செய்தோம் என மனநிறைவு அடையலாம்.
மனித செயல்பாடுகளில் தவறுகள் சாத்தியமே என உணருங்கள். படிப்படியாக அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். குற்ற உணர்வு நமது செயல்திறனை முடக்குவதற்கு இடம் தரலாகாது. நம்மை திருத்திக்கொள்ள பயன்பட வேண்டும்.
எனது தோழியுடன் ஷாப்பிங் சென்றுவிட்டு வெளியில் வந்தேன். அப்பொழுது அவள் கையில் வைத்திருந்த வாழைப்பழத் தோலை சாலை ஓரத்தில் வீசி எறிந்தாள். அதைப் பார்த்த நான் இதை நீ வசிக்கும் சிங்கப்பூரா இருந்திருந்தால் இப்படி போடுவாயா? போடத்தான் அவர்கள் விடுவார்களா? குப்பைத்தொட்டி உன் கண்ணெதிரே இருக்க அதில் போடுவதற்கு என்ன தயக்கம்? அங்கு ஒரு நியாயம். இங்கு ஒரு நியாயமா? குப்பையை உரிய இடத்தில் போடுவதும் ஒரு பொது நலம்தான் என்று கூறினேன். அவள் குற்ற உணர்வால் தவித்தாள்.சிறிது நேரம் பேசாமல்கூட வந்தாள். பிறகு சகஜ நிலைக்குத் திரும்பினாள்.
என்றாலும், கீழ்கண்ட நிகழ்ச்சி மேலும் அவளை பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாக்கி, சங்கடத்தில் ஆழ்த்தியது என்னவோ உண்மை. இதோ அந்த நிகழ்வு:
அந்த நேரத்தில் சென்னை நகரத்தின் நடு உச்சி வேளை. வெளிநாட்டுப் பயணி ஒருவர் இரு கைகளிலும் பழத்தோல்களைப் பிடித்தபடி சாலையோரம் நடந்துகொண்டிருந்தார். அவருடைய கண்கள் இங்கும் அங்கும் எதையோ தேடிக்கொண்டே இருந்தன. சாலையில் போவோர், வருவோர் கையில் பழத்தோல்களை வைத்துக்கொண்டு இவர் என்ன செய்யப் போகிறார்? என்று அவரை வியப்புடன் பார்த்தனர். நீண்டுகொண்டே போகும் சாலையில் வெகு தொலைவு நடந்த பிறகுதான் அது அவருடைய கண்ணில்பட்டது. ஆம் அவர் தேடியது குப்பைத்தொட்டி. தம் கையில் இருந்த பழத்தோல்களை அதில் போட்ட பிறகுதான் அவருக்கு நிம்மதி.
அப்போதுதான் மற்றவர்களுக்கு விஷயம் புரிந்தது. குப்பையையும் தோல்களையும் அவற்றுக்குரிய இடங்களில்தான் போட வேண்டும் என்பது அவருடைய நாட்டுப் பழக்கம். அதை நம் நாட்டிலும் பின்பற்றுவதற்காக குப்பைத் தொட்டியைத் தேடி அவர் பாவம் வெகு நேரமாய் அலைந்து இருக்கிறார்.
அன்பர்களே !.
உங்கள் பண்பு உயர்ந்ததாக எண்ணப்பட வேண்டுமா? பொதுநலத்தைக் கடைபிடியுங்கள்!
-இந்திராணி தங்கவேல்