
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பது எப்படி உண்மையோ, அதேபோன்று பிறப்பால் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை என்பதும் உண்மை. வளர்ப்பின் தன்மை, சூழ்நிலை, நண்பர்கள் போன்றவற்றின் காரணமாக நல்லவர்களும் கெட்டவர்களும் உருவாக்கப்படுகின்றனர்.
அன்னை தெரசா தனது பன்னிரெண்டாவது வயதில் சமூகசேவை செய்ய முன்வந்தவர். தீயது என்ன என்றே தெரியாதவர். எப்பொழுதும் இறைப்பணி; எப்பொழுதும் அடுத்தவர் நலனில் அக்கறை - இப்படியாக அவர் வாழ்ந்தார்.
அன்பிற்கான நோபல் பரிசு பெற்றவர் கருணைக்காக நம்முடன்வாழ்ந்தவர்; தீயவர்களையும் கொடியவை களையும் அன்பால் அரவணைத்துக்கொண்டவர்.
மனிதன் அன்பிற்காக ஏங்குபவன். எங்கெல்லாம் அன்பு இருக்கின்றதோ அங்கெல்லாம் மகிழ்ச்சி பிறக்கும். அதனால்தான் மகிழ்ச்சியாக இருக்கிறவரிடம் அனைவரும் அன்பாக இருக்கிறார்கள்.
அன்பு இல்லாமல் மகிழ்ச்சி இல்லை. அன்பு நிறைந்த மகிழ்ச்சியே நிலையானது; நிரந்தரமானது. கெட்டவர்கள் நீண்டநேரம் சந்தோஷமாக இருக்கமுடியாது. நல்லவர்களால் மட்டுமே நீண்டகாலம் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.
ஒவ்வொரு மனிதனும் தனது இறுதிக்காலத்திலாவது மற்றவர்களுக்கு உதவி செய்து நல்லவர்களாக வாழ்ந்துகாட்ட ஆசைப்படுகிறான்.
வாழ்வைப் புரிந்துகொண்டு வாழ்வை அர்த்தமுள்ளதாக்க நம்மால் முடியும்.
ஊர்வன, பறப்பன, மிருகங்கள், செடி, கொடிகள், மரங்கள் புல் பூண்டு எல்லாம் உயிர்வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் வாழ்க்கையை நடத்துகின்றான். உயிர்வாழ்தல் மட்டுமே வாழ்க்கை அல்ல.
ஆனால் மனிதன் வாழ்வதற்கும் மிருகங்கள் வாழ்வதற்கும் வேறுபாடு உள்ளது. அதனால்தான் மனிதன் வாழ்க்கை நடத்துகின்றான் மற்றவை உயிர்வாழ்கின்றன.
மனிதன் உள்ளத்தால் வாழ்கின்றான். அதனால்தான் அவன் வாழ்க்கை நடத்துகின்றான். மற்ற உயிரினங்கள் உடலால் வாழ்கின்றன
நாம் நல்லவர்களாக வாழ நாம் செய்ய வேண்டியது மனதை கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைப்பதுதான் தாயுமானவர், 'கோபத்தை அடக்குதல் முதலிய சித்துக்களைவிட மனதை அடக்கும் சித்தே சிறந்து என்கிறார்.
தினசரி படுக்கையில் தூங்குமுன் அன்று காலை நீங்கள் செய்த செயல்களை - சந்தித்த மனிதர்களை - அவர்களை நீங்கள் எப்படி நடத்தினீர்கள் என்பதை அசைபோட்டுப்பாருங்கள்.
'தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பார்கள். அதுபோன்றே மற்றவர்களால் உங்களைக் கெட்டவர்களாக ஆக்கமுடியாது. நீங்கள் சற்று கவனமுடன் இருங்கள். கெட்டது உங்களை நெருங்காது.
நல்லது மனதில் நிறைந்திருக்கும்போது கெட்டது மனதில் புக இடமிருக்காது. ஒருவேளை மறந்தும் ஒரு தகாத செயலைச் செய்துவிட்டால் வருத்தம் தெரிவியுங்கள். அந்தச் செயலுக்காக உங்களையே நீங்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள்.
இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்காதிருக்கும் வகையில் கவனமாக இருங்கள். அது உங்களால் முடியும்.
'நல்லது சிறந்ததைச் சொல்லித் தருகின்றது' என்பது எஸ்டோனியன் பழமொழியாகும். நல்லது காத்திருந்து வருகின்றது; தீயது ஓடோடி வருகின்றது.
முடிந்த மட்டும் நற்காரியங்களில் ஈடுபடுங்கள். முயற்சி திருவினை ஆக்கும். பாலிலிருந்து வெண்ணெய் வருவதுபோல் ஒரு நல்ல காரியத்திலிருந்து மற்றொரு நன்மை உண்டாகின்றது.
'எண்ணம் நலமானால் எல்லாம் நலமே!' என்பது நூற்றுக்கு நூறு முற்றிலும் உண்மை.