
வெற்றி என்பது தனிப்பட்ட நபரால் மட்டுமல்ல, தனிப்பட்ட நபரின் திறமையால் பெறும் குழு வெற்றியையும் உள்ளடக்கியதே. தனிப்பட்ட நபரின் முடிவுகளில் தன்னிச்சையாக செயல்பட்டு பெறும் தனியொருவரின் வெற்றியை விட ஒர படி மேலானது குழு வெற்றி எனலாம். காரணம் குழுவின் அனைவரும் வெற்றிக்குத் தரும் பங்களிப்பின் மூலம் வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.
ஒலிம்பிக் போட்டியில் ரிலே ரேஸ் எனும் தடகளப் போட்டியை பார்த்திருப்பீர்கள். தடகளப் போட்டிகளில் அதிக விளையாட்டு ரசிகர்கள் இந்த ரிலே ரேஸை காணவிரும்புவார்கள். காரணம் இதிலுள்ள சுவாரஸ்யம்.
4×100 மீட்டர் என்று இதை சொல்வார்கள். பங்கு பெறும் ஒவ்வொரு அணியிலும் நான்கு தடகள வீரர்கள் இருப்பார்கள். அணியில் போட்டி துவங்கியதும் முதலில் ஓடுபவர்கள் பேட்டன் என சொல்லப்படும் குச்சி போன்ற கோலை கையில் எடுத்துக்கொண்டு ஓடுவார்கள். அவர்கள் 100 மீட்டர் தூரம் ஓடிப்போய் அங்கே தனது அணி சார்பில் ஏற்கனவே நின்றிருக்கும் மற்ற வீரரிடம் அந்த பேட்டனை கொடுக்க வேண்டும்.
இப்படியே ஒவ்வொரு அணியிலும் உள்ள நான்கு பேரும் அந்த பேட்டனை வாங்கிக்கொண்டு ஓடுவார்கள். கடைசியில் எந்த அணியில் உள்ள வீரர் வேகமாக வந்து வெற்றிக்கோட்டை அடைகிறாரோ அந்த அணிதான் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டு பரிசு பெறுவார்கள்.
அடுத்த முறை ரிலே ரேஸ் பார்க்க முடிந்தால் நன்றாக கவனித்து பாருங்கள். ஒவ்வொரு அணியிலும் யார் சிறந்த ஓட்டக்காரரோ அவர்தான் அந்த அணிக்காக கடைசியாக அந்த பேட்டனை வாங்கிக் கொண்டு ஓடக்கூடியவராக இருப்பார். இரண்டாவதாக யார் சிறந்த முறையில் ஓடுகிறாரோ அவர்தான் போட்டியின் துவக்கத்தில் ஓடுபவராக இருப்பார். இதில் ஒருவர் கொண்டுவரும் பேட்டனை அடுத்தவர் நின்றபடி வாங்கமாட்டார். அவரும் ஓடிக்கொண்டே கைகளை பின் நீட்டி அந்த பேட்டனை வாங்கியபடி வேகம் எடுப்பார்கள்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒவ்வொரு அணியிலும் உள்ள நான்கு வீரர்கள் யாராவது ஒருவரின் பேட்டன் கீழே விழுந்தாலும் அந்தக் குழு தகுதி இழந்து போட்டியிலிருந்து விலகுவர். ஆனாலும் அந்த பேட்டன் வாங்கும் வீரர் நின்று அதை கவனித்து வாங்குவது இல்லை. காரணம்' என்னுடைய அணியில் இருக்கும் சக ஓட்டக்காரர் நிச்சயமாக என் கையில்தான் அந்த பேட்டனை கொடுப்பார். அதை நான் கீழே விழாமல் வாங்கி விடுவேன்' என்பதுதான் அவருடைய உறுதியான நம்பிக்கையாக இருக்கும்.
எந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை முழுமையாக உணர்ந்து இணைந்து திறமையாக செயல்படுகிறார்களோ அந்த அணிதான் வெற்றி பெறும் குழுவாகும்.
இந்த ரிலே ரேஸிலிருந்து குழு வெற்றிக்கான ரகசியத்தை அல்லது விதியை கற்றுக்கொள்ளலாம். தனக்கு மேலுள்ளவர் மீதான நம்பிக்கையும், தரும் பணியை சிறப்பாக செய்து குழுவின் வெற்றிக்கு உதவுவதே நோக்கமாகவும் கொண்டு இருந்தால் வெற்றி பெறும் குழுவில் நாமும் ஒரு வெற்றியாளராக மகிழலாம்.