
கட்டுப்பாடுகள் இருக்கும் பொழுது மீறல்களும் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்க பிடிக்காது. செய்யாதே என்றால் செய்யத் தோன்றும். போகாதே என்றால் போகத் தோன்றும். எனவே கட்டுப்பாட்டை மீறி செய்ய தூண்டும். கட்டுப்பாடுகள் என்பது ஒரு செயலை தடுத்து நிறுத்துவது, கட்டுப்படுத்துவது. இதனால் ஒருவரின் சுதந்திரம் பறிபோவதாக எண்ணி அதை மீறும் செயல் நடைபெறுகிறது.
கட்டுப்பாடுகள் ஏன் மீறல்களுக்கு வழி வகுக்கின்றன தெரியுமா? சிலருக்கு இந்த கட்டுப்பாடுகள் சவாலாகத் தோன்றலாம். சிலர் கட்டுப்பாடுகளை விரும்பாது மறுப்பு தெரிவிக்கும் வகையில் அதை புறக்கணித்து மீறல்களை செய்ய முற்படலாம். கட்டுப்பாடுகள் சில நேரங்களில் பயனற்றதாகவோ அல்லது சாதகமற்றதாகவோ தோன்றுவதால் மீறல்களை தூண்டலாம். இன்னும் சிலருக்கு கட்டுப்பாடுகளின் மீது தவறான புரிதல் ஏற்பட்டிருக்கலாம். கட்டுப்பாடுகளின் நோக்கத்தை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு மீறல்களை செய்யலாம்.
கட்டுப்பாடுகள் இருந்தால் மீறல்களும் இருக்கத்தான் செய்யும். ஒரு நிறுவனத்தின் உள் கட்டுப்பாடு பலவீனமடைந்தால் மோசடி அல்லது தவறுகள் ஏற்படலாம் இந்த கட்டுப்பாட்டு மீறல் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்கும். ஒரு நிறுவனத்தின் தரவு பாதுகாப்பு மீறப்பட்டால் அந்த நிறுவனம் அபராததுக்கு ஆளாகலாம்.
ஒரு விளையாட்டு விதி மீறப்பட்டால் அந்த அணியின் வீரர் தண்டனைக்கு ஆளாகலாம். எனவே, கட்டுப்பாட்டில் இருந்து மீறல்கள் ஏற்பட்டால் அது தண்டனைக்கோ அல்லது அபராதத்திற்கோ இல்லையென்றால் தவறு ஏற்படவோ காரணமாகலாம்.
நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துவதற்கும், தவறுகளை தடுப்பதற்கும் அக கட்டுப்பாடுகளை பயன்படுத்துகின்றன. ஒரு அமைப்பு கண்ட்ரோல் சிஸ்டம் முறையில் ஒரு கருவியை கட்டுப்படுத்தி மேலாண்மை செய்து நெறிப்படுத்துவதும் இதனால் தான். உடல் நலனுக்காக சில உணவுகளை தவிர்க்க சொல்வதும் அல்லது அளவுடன் எடுத்துக்கொள்ள சொல்வதும் உணவில் கட்டுப்பாட்டை கொண்டுவரத்தான். இவற்றிலிருந்து மீறும்பொழுது அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.
எங்கும் எதிலும் ஒரு வரைமுறை, கட்டுப்பாடு ஏன் தேவைப்படுகிறது தெரியுமா? இது மனித ஆற்றலை வளர்க்கும். ஊக்கம் அளிக்கும். மனதிற்கு தெம்பையும், வலுவையும் கொடுக்கும். எனவே கட்டுப்பாடுகளை மீறுவதிலிருந்து தப்புவதற்கு கட்டுப்பாடுகளின் நோக்கத்தையும், அது ஏன் செயல்படுத்தப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் தெளிவாக புரிந்து கொண்டால் மீறல்கள் இருக்காது.
விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை புறக்கணிக்காமல் பின்பற்றுவதும், செயலாற்றுவதும் அவசியம். கட்டுப்பாட்டை மீறும் செயல்களை தடுக்கும் வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதை செயல்படுத்துவதும் அவசியம்.