
ஒரு பக்கம் செல்வந்தர்கள் வாழும் வசதி நிறைந்த பகுதி. மறுபக்கம் குறைந்த வருவாய் பிரிவினர் வாழும் நெரிசலான பகுதி. இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது ஸ்டீவ் மெக்ஸரியின் காஸ்காப் டி.வி. ஷாப். டி.வி. விற்பனை, டி.வி. சர்வீஸ், வீடியோ வாடகைக்கு விடுதல் என்று பல முகங்கள் கொண்ட கடை அது. மெக்ஸரியின் வாடிக்கையாளர்களில் பெரிய பணக்காரர்களும் உண்டு, ஏழைகளும் உண்டு. அவர், டி.வி.க்களில் விலைமிக்க புதிய மாடல்களை வசதியானவர்களுக்கும், பழுதுநீக்கிய பழைய டி.வி.க்களை வசதியில்லாதவர்களுக்கும் விற்று வந்தார். எல்லாருமே வீடியோ டேப்புகளை வாடகைக்கு எடுத்துச்செல்வார்கள்.
மெக்ஸரி இருதரப்புகளையும் ஒரே மாதிரியாகத்தான் நடத்துவார். எவ்வித பாரபட்சமுமின்றி உபசரிக்கவும், நட்பார்ந்த சேவையை வழங்கவும் செய்வார். தாங்களே பாகங்களை இணைத்து உருவாக்கிய பொருட்களுக்கும், பழுது நீக்கி விற்பனை செய்யும் பொருட்களுக்கும் அவர் குறைந்தபட்சம் தொண்ணூறு நாட்கள் உத்தரவாதமளிப்பார்.
அப்படியொரு உத்தரவாதத்துடன் பழைய டி.வி. செட் ஒன்றை வாங்கிப்போன பெண்ணொருத்தியைப் பற்றி மெக்ஸரி நினைவு கூர்ந்தது. 'அவள் செட்டை வாங்கிச்சென்று தொண்ணூறு நாட்கள் கழிந்து மேலும் இரண்டு நாட்களான நிலையில் அது பழுதாகிவிட்டது. உத்தரவாதக் காலம் முடிந்துவிட்டது என்று நான் காரணம் காட்டியிருக்க முடியும். ஆனால் நான் அப்படி வியாபாரம் செய்கிறதில்லை. அந்த 'செட்'டை மறுபேச்சில்லாமல் எடுத்துக்கொண்டு வேறு செட்டைக் கொடுத்தேன்.
அந்தப் பெண் வாடிக்கையாளர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். மெக்ஸரியின் நேர்மையை வியந்து, தனக்குத் தெரிந்தவர்களிட மெல்லாம் அவரைப் பாராட்டிப் பேசினாள். சில நாட்களிலேயே மேலும் பலர் அவரிடம் வந்து பழைய டி. வி. வேண்டுமென்று கேட்டு வாங்கிப்போனார்கள். மெக்ஸரியின் 'காஸ்காப் டி.வி வழங்கியது கூடுதல் சேவை. அதை கூடுதல் உழைப்பு, கூடுதலாய் இன்னொரு மைல் போதல் என்றும் சொல்லலாம். அது மற்றவர்கள் உங்களிடம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாய் நீங்கள் செய்வது.
இந்தக் காலத்தில் தாங்கள் வாங்குகிற சம்பளத்துக்கு மேல் உழைப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? இருக்கிறார்கள். மிகப்பெரிய சாதனையாளர்களும், வெற்றியாளர்களும் கூடுதலாய் ஒரு மணி நேரம் உழைக்கவோ கூடுதலாய் ஒரு மைல் நடக்கவோ செய்கிறவர்கள்தாம்.
அச்சடித்த விளம்பரங்கள் செய்யமுடியாத அற்புத்தை வாய் வார்த்தைகள் செய்துவிடும். ஆம். நீங்கள் ஒரு வாடிக்கையாளரை நடத்துகிறமுறை அவர் மூலம் அவருடைய நண்பர்களுக்கும், அண்டை வீட்டார்களுக்கும் தகவலாய் போய்ச்சேருகிறது. நீங்கள் நல்லவிதமாய் நடத்தினால் அது பாராட்டாகவும், அலட்சியமாய் நடத்தினால் அது குறைபாடாகவும் சொல்லப்படும். மெக்ஸரி கூறுகிறார், "உங்களுக்குச் சரியென்று பட்டதைச் செய்யுங்கள், நியாயமாய் நடந்து கொள்ளுங்கள். நேர்மையும், மரியாதையுந்தான். நீங்கள் கூடுதலாய் செலவழிக்கிறவை" என்று.
"உங்களுக்கு வழங்கப்படும் பணத்தைவிட சற்று கூடுதலாகவே உங்கள் சேவை இருக்கட்டும்" என்கிறார். க்ளமெண்ட் ஸ்டோன். உங்களுடைய மனோபாவத்தைப் பொறுத்தே வாடிக்கையாளர்கள் திரும்பவும் உங்களிடம் வருவதும் அல்லது அவர்கள் வராமலே நின்றுவிடுவதும் நீங்கள் விரும்பத்தக்கவிதத்தில் நடந்துகொண்டால் அவர்கள் மீண்டும் உருவாக்குவார்கள் கூடவே தங்கள் நண்பர்களையும் (உங்கள் புதிய வாடிக்கையாளர்கள்) அழைத்துக்கொண்டு.