

இரும்புத் தாதுவை உருக்க தேவைப்படும் அதிக வெப்பத்தை அளிக்க கரிதான் ஏற்றது என்று கண்டு கொண்டு இருந்தார்கள். இங்கிலாந்தில் இரும்பு தாது கணிசமாக கிடைத்து வந்தாலும் கரி தான் இருக்காது.
மரங்களுக்கு தட்டுப்பாடு என்பதால் மரக்கரிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏனென்றால் கப்பல்களை கட்டுவதற்கு மரங்கள் அதிகம் தேவைப்பட்டதால் அந்த தேவையை குறைத்துக்கொண்டு மரங்களை சுட்டு கரியாக்குவது காசை கரியாக்கும் முயற்சியாகவே அமையும். கரி இல்லாததால் இரும்பு உற்பத்தி செய்ய முடியவில்லை. இரும்பு இல்லாததால் பீரங்கிகளையும் ஆயுதங்களையும் கருவிகளையும் இங்கிலாந்தால் தயாரிக்க முடியவில்லை.
மரங்களை வளர்த்து விறகாக்கி கரியை பெறுவது சுற்று வழியாக இருந்தது. ஆகவே மரக்கரிக்கு பதில் மாற்றுப் பொருள் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டிய எண்ணம் பலருக்கும் ஏற்பட தொடங்கியிருந்தது.
கரிக்கு பதில் பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பொருளை ஆராய்ந்தால் என்ன என்று யோசித்தார் ஆபிரகாம் டார்பி என்ற ஆங்கிலேயர். அவர் கறுப்புக் கல்லை பற்றி கேள்விப்பட்டிருந்தார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காடுகள் மண்ணுக்குள் புதையுண்டு பூமியின் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக இந்த மரங்கள் கரியாக மாறின.
அப்படி கரியாக மாறிய மரங்கள்தான் கறுப்பு கல் தோன்ற காரணம் என்பதை டார்பி உணர்ந்தார். இந்த கறுப்பு கல்லை கரியைப்போல் ஏன் பயன்படுத்தக்கூடாது என்ற கேள்வி அவரது மனதில் இருந்தது.
அந்த நொடி அவருக்குள் புதிய உத்வேகம் எழுந்து கறுப்பு கல்லை தீவிரமாக ஆராய்ந்து, அதிலிருந்து சில வாயுக்களை நீக்கி பிறகு அசுத்தங்களையும் அப்புறப்படுத்தினார்.
கறுப்பு கல்லை விட நன்றாக எரியக்கூடிய கோக் எனப்படும் கரிக்கட்டியை உருவாக்கினார். இரும்பை உருக்குவதற்கு கரிக்கட்டி சிறப்பான மாற்றுப் பொருளாக அமையும் என்பதை கண்டு கொண்டார் டார்பி.
உலகத் தொழில்களை டார்பியின் இந்த கண்டுபிடிப்பு புரட்டி போட்டது. கறுப்புக்கல் கருப்பு தங்கம் என்று போற்றப்படும் நிலையை உருவாக்கியது.
எதற்கு கட்டுப்பாடு ஏற்பட்டு வளர்ச்சிக்கு தடையாக இருந்ததோ அதற்கு மாற்றுப் பொருள் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. தடைகளையும் வழிகளாக மாற்றிக்கொள்ளும் தகுதியான வழி ஆபிரகாம் டார்பிக்கு ஒரு நொடியில் தோன்றியதால் உலகமே அவரைப் போற்றியது.
ஆகவே, ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும் வழிகளாக மாற்றிக்கொள்ளும் தகுதியான வழி யாருக்கு வேண்டுமானாலும் ஒரு நொடியில் தோன்றும் என்பதால் தடைகளை கண்டு எப்பொழுதும் தயக்கம் கொள்ளாமல் அதற்கான மாற்று வழியை யோசித்தால் வெற்றி நிச்சயம்.