
அதிகமாக சிந்திப்பது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். சிலர் எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். தேவையோ இல்லையோ சிந்தனை ஓட்டம் நடந்துகொண்டே இருக்கும். அது அப்படி ஆகிவிடுமோ, இது இப்படி ஆகிவிடுமோ என்று சதா சிந்தித்து குழம்பிக் கொண்டே இருப்பார்கள். தேவையோ இல்லையோ எப்போது பார்த்தாலும் சிந்தித்துக் கொண்டே இருந்தால் தூக்கமின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம், மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.
அதிகமாக சிந்திக்கும் பொழுது எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றுவது மிகவும் இயல்பானது. அதிகமாக சிந்திப்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தயக்கமும் சிரமமும் உண்டாகும். மன அழுத்தம் மற்றும் கவலை உண்டாகும். நாம் செய்ய வேண்டிய எந்த செயலிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிப்போம்.
ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக சிந்திப்பது பல பிரச்னைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. உறவுகளில் புரிதல் இல்லாமை ஏற்படவும், உறவுகளுக்குள் சிக்கல்களை ஏற்படுத்தவும் செய்யும். அதிகப்படியான சிந்தனை சரியான முடிவு எடுப்பதில் தயக்கத்தை ஏற்படுத்துவதுடன், பிரச்னைகள் ஏற்படும்போது பதட்டத்தையும் அதிகரிக்கும்.
அதிகப்படியான சிந்தனை தற்போதைய அழகான தருணத்தை அனுபவிக்கவிடாமல் செய்துவிடும். இதனை தவிர்க்க மனம் விரும்பும் விளையாட்டுகளில் ஈடுபடுவதும், நண்பர்களுடன் பழகுவதும், விருப்பமான புத்தகங்களை படிப்பதும் சிறந்த பலனைத் தரும். தினமும் சில நிமிடங்களாவது தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்த உதவும். ஆழ்ந்த மூச்சு, தியானம் போன்றவற்றை பழகுவது அதிகப்படியான சிந்தனைகள் எழுவதை தடுப்பதுடன் சஞ்சலமற்ற தெளிவான மனதையும் கொடுக்கும்.
ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லாத விஷயங்களை கற்பனை செய்து சிந்திக்க தொடங்குவதால் மனக்கவலைதான் அதிகரிக்கும். எதையும் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினால் மனக்கவலை உண்டாகாது. அதிகமாக சிந்திப்பது நம்மை நாமே சந்தேகப்பட வைக்கும். பிரச்சனை என்று வரும்போது குழப்பத்தில் மூழ்கி விடுவோம்.
நம் மன அமைதியையும் நேரத்தையும் வீணடிக்கும். நம்முடைய ஆற்றலையும் மழுங்கடித்துவிடும். அதிகமாக யோசிப்பதால் தலைவலி, தூக்க கோளாறுகள் போன்ற உடல் பிரச்னைகளை அனுபவிக்க வேண்டிவரும்.
அதிகமாக சிந்திப்பதை தவிர்க்கவும் சமாளிக்கவும் அதன் தாக்கத்தை குறைக்கவும் ஆரோக்கியமான சில வழிகள் உள்ளன. முக்கியமாக நம் கவனத்தை திசை திருப்புவது நல்லது. நம்முடைய தனிப்பட்ட திறன்களை பயன்படுத்தி ஆக்கபூர்வமான செயல்களை செய்வதில் ஈடுபடுவது சிறந்த பலன் அளிக்கும். மன ஆரோக்கியத்தையோ தினசரி செயல்பாட்டையோ பாதிக்காமல் இருக்கவும், திறம்பட சமாளிக்கவும் தியானம் கைகொடுக்கும்.