
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் நடக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறகுகளை இழந்தாலும் வருத்தப்பட மாட்டோம். வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லா நேரமும் உயர பறந்துகொண்டே இருக்காமல் தரையில் உள்ள எதார்த்தங்களையும், சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும்.
இங்கு பறப்பதற்கு வசதிகள் என்பதன் பொருள் வாழ்க்கையில் உள்ள வாய்ப்புகள், திறமைகள், வசதிகள் ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது எவ்வளவு வசதிகள் இருந்தாலும் வாழ்க்கையில் எதிர்ப்படும் எதார்த்தமான சவால்களையும், பிரச்னைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதுடன், அதற்கான திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாய்ப்புகளையும் வசதிகளையும் இழந்தாலும் மனம் தளராமல் இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு பணக்கஷ்டம், உடல் நல பிரச்னைகள், உறவுகளில் சிக்கல்கள், மன அழுத்தம், தோல்விகளை எதிர்கொள்வது போன்ற சவால்கள் இருக்கும். அவற்றை சமாளித்து தைரியமாக எதிர்கொண்டு முன்னேற வேண்டும்.
வருமானம் போதாத நிலை, கடன்கள் போன்ற பொருளாதார ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாண சிறந்த செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். சவால்களை எளிதாக கடந்து விட முடியாது. அவற்றை எதிர்கொள்ள சகிப்புத்தன்மை அவசியம். அத்துடன் தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சியும் தேவை.
சவால்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை மறக்க வேண்டாம். பணிச் சுமை, சகஊழியர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் போன்ற வேலை ரீதியான சவால்கள் மன அழுத்தத்தையும், மனச்சோர்வையும், ஒருவிதமான பதட்டத்தையும் உண்டாக்கும். ஆனால் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல், மனம் சோர்ந்து விடாமல், பிரச்னைகளை ஒரு வாய்ப்பாக எதிர்கொண்டு அவற்றை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடவேண்டும். தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ள பழகவேண்டும்.
குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்களையும், நட்புறவுகளில் ஏற்படும் பிரச்னைகளையும் ஓர் அழகிய அனுபவமாகப் பாருங்கள். முதுகிற்குப் பின்பு எழும் முனகல்கள் குறித்து கவலைப்படாமல் 'சவாலே சமாளி' என்று எதிர்கொள்ளப்பழகுங்கள். சவால்கள் இல்லாத வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது என்பதை உணருங்கள். வாழ்க்கையின் சுவாரசியமே சவால்களை எதிர்கொள்வதில்தான் உள்ளது. சவால்கள் இல்லாத வாழ்க்கை ஒருவிதமான சலிப்பையும், வெறுமையையும் உண்டாக்கும். தினமும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது சலிப்பை ஏற்படுத்தும். எனவே சுவாரசியங்களும், திருப்பங்களும் இருந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
தனிமைப்படுத்தப்படுவது, புறக்கணிப்பது, பாகுபாடு பார்ப்பது போன்ற சமூக ரீதியான சவால்களைக் கண்டு துவண்டுவிடாமல் நண்பர்கள், குடும்பத்தினர்களின் அரவணைப்பைப் பெற்று, தடைகளை உடைத்தெறிந்து சவால்களை தைரியமாக எதிர் கொண்டு முன்னேற வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு முறைதான். அதனை இனிதே வாழ்ந்து முடிக்க வேண்டும்.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!