
தவறு செய்வது மனித இயல்பு என்பதுபோல் செய்யும் தவறை மன்னிப்பதும் மனித இயல்புதான். ஒரு தவறை செய்யும் பொழுது அதை நியாயப்படுத்தக் கூடாது. தவறை மறைக்க பிறரை குற்றம் சாட்டுவதோ, மறுப்பதோ, மீண்டும் அந்த தவறை செய்வதோ கூடாது. தவறு செய்யும் பெரும்பாலானவர்கள் மன்னிப்பு கேட்பதில்லை.
மன்னிப்பு என்பது உறவில் ஏற்படும் விரிசலை இணைக்கும் ஒரு சிறந்த பாலமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவர்களிடையே இருக்கும் நம்பிக்கையை அதிகரித்து மன்னிப்பு கேட்பதன் வழியாகவும், மன்னிப்பதன் வழியாகவும் அவர்களிடையே இருக்கும் பிரச்னைகள் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்க்கவும் செய்கின்றது.
ஒருவர் செய்த தவறுக்காக அவரை பழிவாங்குவதோ, தண்டிப்பதோ அந்தத் தவறிலிருந்து அவர்களை திருத்த இயலாது. மன்னிப்பு என்ற ஒன்று மட்டுமே அவர்களின் உள்ள உணர்வைத்தூண்டி, செய்யும் தவறிலிருந்து திருந்தி வாழ உதவும். மன்னிப்பது என்பது பச்சாதாபம் மற்றும் புரிதல் மூலம் உறவுகளை மேம்படுத்தும். மனக்கசப்பின்றி ஆழமான தொடர்புகளை வளர்க்கும். மன்னிக்க கற்றுக்கொள்வது நம்முடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
'தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பது தெய்வப்பண்பு' என்ற ஒரு சொல்லாடல் உண்டு. தவறு செய்தவர்கள் அதை நன்கு உணர்ந்து மன்னிப்பு கேட்பது என்பது தானாக நிகழவேண்டும். அதுபோல் பிறர் தவறு செய்திருந்தாலும் அவர்களை மன்னிக்கும் பெருந்தன்மை நம்மிடம் இருப்பது நல்லது. 'மறப்போம் மன்னிப்போம்' என்று சொல்வது மிகவும் எளிது. மறப்பதும் மன்னிப்பதும் சிறந்த பண்புகள்தான்.
ஆனால் மன்னிப்பது வேண்டுமானால் நம் கட்டுப்பாட்டில் இருக்கலாம். மறப்பது என்பது அவ்வளவு எளிதில் நிகழக்கூடியது இல்லை. சில நிகழ்வுகளை மறப்பதற்கு சிறிது கடினமாக இருக்கலாம். அதற்கு சிறிது காலமும் தேவைப்படலாம்.
மன்னிப்பது மனித இயல்புதான் என்றாலும் மன்னிப்பு கேட்பதாலேயே சிலரை மன்னித்துவிட முடியாது. முக்கியமாக நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், கொலை, கொள்ளை செய்தவர்கள், தேசத்துரோகிகள் என சிலர் மன்னிக்க தகுதியற்றவர்கள்.
உண்மையான 'மன்னிப்பது' என்பது அனைத்து எதிர்பார்ப்புகளையும் விட்டுவிடும். மன்னிப்பு என்பது உண்மையில் தந்திரமானது. நாம் மனதால் குணமடைந்தால் மட்டுமே மன்னிக்க முடியும். ஆனால் மன்னிப்பது என்ற குணத்தை இயல்பாக்கி கொண்டால் வாழ்க்கை அமைதியாகவும், சந்தோஷமாகவும் செல்லும்.
இரக்க குணம் உள்ளவர்கள் அதிகமான மன்னிக்கும் மனப்பான்மையை கொண்டவர்களாக இருப்பார்கள். மன்னிப்பதில் ஒரு தனி சுகம் உண்டு. திருப்தி உண்டு. இதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். மன்னிப்பு கேட்பவரைவிட தவறை மன்னிக்கும் குணம் கொண்டவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். மன்னிப்பு வன்மங்களை குறைக்கும். நிம்மதியைத் தரும். மனதை லேசாக்கும். சமூகத்தில் நமக்கான மதிப்பை அதிகரிக்கும். மன்னிப்பதால் தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வரும்பொழுது உறவுகள் பலப்படும்.
மன்னிப்பதால் மன அமைதி கிடைக்குமெனில் அதை இயல்பாக்கி கொள்வது சிறப்புதானே!