
உங்களுக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் பிடித்த பொதுவான விதி என்ன? நான் சொல்வது சரி, நீ சொல்வது தவறு. அமெரிக்காவிற்கு முதன் முதலாகப் சென்றிருந்தார் ஒருவர். நெடுஞ்சாலையில் வேகமாக கார் ஓட்டிக்கொண்டிருந்தார். அவர் மனைவியிடமிருந்து ஒரு போன் வந்தது. "கவனமாகச் செல்லுங்கள். யாரோ ஒரு கிறுக்கன் சாலையின் தப்பான பக்கத்தில் காரை ஓட்டிச் செல்வதாக டி.வி. யில் அறிவித்து எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூற அவர்" ஒருவனா, என்னைத் தவிர இங்கு எல்லோரும் தப்பான பக்கத்தில்தான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்" என்று இரைந்தாராம். இவரைப் போன்ற முட்டாள்தனம் சரியான விதி புரிதல் இல்லாததால் வருகிறது.
இது ஒழுங்கு, இது ஒழுங்கீனம் என்று உங்களுக்கு வற்புறுத்திக் சொன்னதை மட்டுமே அடிப்படையாக வைத்து வாழ முற்பட்டால் என்ன ஆகும். சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தீர்களானால் உலகில் எல்லா பகுதிகளிலும் எத்தனையோ பேர் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், உலகம் அவர்கள் விரும்பியபடி சுத்தம் படுத்தப்பட்டதா?. ஒழுக்கம் பற்றிய போதனைகள், சமூகம் விதித்த சட்டங்கள் எதுவும் உங்கள் அடிப்படையை மாற்றிவிடாது.
ஒருவர் முன்பின் ரயிலைப் பார்த்ததில்லை. ஒருநாள் தெரியாத்தனமாக ரயில் பாதையில் நடந்து கொண்டிருந்தார். கூ… வென்ற விசில் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க ரயில் அவரை தூக்கி அடித்துவிட்டது. பல வாரங்கள் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.
இவரை இவரது நண்பர் விருந்துக்குக் கூப்பிட அங்கு சென்ற இவர் சமையலறையிலிருந்து குக்கர் விசில் சத்தம் கேட்டு பாய்ந்து கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து குக்கரை அடித்து நொறுக்கிவிட்டார். அவர் நண்பர் ஏன் இப்படிச் செய்தாய் என காரணம் கேட்க "உனக்குத் தெரியாது. இது வளர்ந்து பெரிதாகிவிட்டால் சமாளிக்க முடியாது. குட்டியாக இருக்கும் போதே கொன்றுவிட வேண்டும்" என்றாராம்.
உண்மையில் சரி தவறு என்றெல்லாம் உலகில் எதுவும் இல்லை. புத்திசாலித்தனமாக வாழ ஆசைப்படுகிறீர்களா அல்லது முட்டாள்தனமாக வாழ முடிவு செய்கிறீர்களா என்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யாரும் முட்டாள்தனமாக வாழ்வதில்லை. தன்னையறியாமல் மூடத்தனத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் செய்யும் செயல்கள் மற்றவர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை முழுமையாக உணர்ந்து கவனத்துடன் முழுமையான விழிப்புணர்வுடன் செயல்பட ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் உங்கள் முட்டாள் தனம் உதிர்ந்து விடும். வாழ்க்கையின் வளர்ச்சிக்குத் தேவை தடுமாற்றம் இல்லாத கவனம், முழுமையான விழிப்புணர்வு.