
என் தோழி பல்வேறு சமயங்களில் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுவாள். என்ன என்று விசாரித்தால், நான் சிறு தவறு செய்து விட்டேன். ஒரு கரப்பான் பூச்சியை அடித்துவிட்டேன். ஒரு எறும்பை நசுக்கி விட்டேன். அந்த கர்மவினைகள் என்னைப் பற்றிக் கொள்ளுமோ? என் சந்ததியை தாக்குமோ என்று நினைத்து பயமாக இருக்கிறது என்று புலம்புவாள்.
அதைப்போல் அவள் வீட்டு தோட்டத்தில் பூக்கள், கீரைகள், காய்கறி, கனிகள் என்று எதைப் பறித்தாலும் அந்த செடிகளை பார்த்து கும்பிடுவாள். அவற்றையெல்லாம் சமைத்து சாமி படத்திற்கு முன்பாக வைத்து பூஜை செய்துவிட்டுத்தான் சாப்பிடுவாள். சாப்பிடுவதற்கு முன்பும் அத்தனை முறை தியானிப்பாள். அப்படி ஒரு பயம் அவளுக்கு. அவைகளும் நம்மைப்போல் ஒரு உயிர் தானே. அவற்றை பறிக்கும்பொழுது அதற்கும் வலிக்கும்தானே என்று கூறுவாள்.
கடவுளை விட கர்ம வினைகளுக்கு அதிகமாக பயப்படவேண்டும். கடவுளாவது மன்னிப்பார். கர்ம வினைகள் ஒரு போதும் மன்னிக்காது. திரும்பி வந்தே தீரும் என்பதுதான் அவள் மனதில் உள்ள ஆழமான கருத்து.
நமது கௌரவம், மதிப்பு, மகிழ்ச்சி, மானம், வாழ்க்கை அனைத்தும் நமது நாக்கின் நுனியில்தான் உள்ளது. உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவும் இல்லை. போகும் பாதையில் கற்றுக் கொள்ள பாடங்கள் ஏராளமாக இருக்கின்றன. கவலை என்பது கைக்குழந்தை அல்ல. எந்நேரமும் தோளில் சுமப்பதற்கு. கவலை ஒரு கட்டுச்சோறு. அதை தின்று தீர்க்கவேண்டும் அல்லது பகிர்ந்து தீர்க்க வேண்டும். இல்லையேல் அது கெட்டுவிடும். கவலையும் அப்படிப்பட்டதுதான்.
மனதிலேயே அடக்கி வைத்திருந்தால் பல்வேறு நோய்கள் நம்மை துரத்திக்கொண்டு வரும். அதை முறையான, மனதிற்கு ஆறுதலும் தெம்பும், உறுதியையும், உற்சாகத்தையும் அளிப்பவர்களுடன் பகிர்ந்து கொண்டால் ஒரு நிம்மதி கிடைக்கும். பயமும் கவலையும் இன்றி நிம்மதியாக அடுத்த வேலையைத் தொடரலாம்.
தன்னந்தனியாக உயரே பறக்கும் பறவையைப் பார்த்து அந்தப் பறவைக்கு இருக்கும் நம்பிக்கையை நாமும் மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறர் நினைத்ததை எழுதும் காகிதமாக இருப்பதைவிட, நாம் நினைத்ததை எழுதும் பேனாவாக மாற வேண்டாமா? அதற்கு கவலை, பயம் தடங்கலாக இருந்தால் அவற்றை உதறித் தள்ள துணியவேண்டும்.
கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறி விடுகிறோம். அதிகம் படித்தால் சொந்த நாட்டை விட்டு வெளியேறி விடுகிறோம். மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். யாரிடமும் விரோதிக்க, விவாதிக்க வேண்டாம். வாழ்வது சில காலம். நடப்பது நடக்கட்டும் என்று நாம் செய்யும் செயல்களில் மட்டும் தெளிவாக இருந்து, அதை சரிவர செய்து வந்தால் கவலை, பயம் அறவே இன்றி அமைதியாக வாழலாம்.
கர்ம வினைகள் நம்மை பாதிக்குமோ என்று அச்சப்பட வேண்டிய தேவை இருக்காது. அதனால் மாற்றம்தான் அனைத்திற்கும் மா மருந்து. ஆதலால் தேவையற்ற பயம், கவலை போன்றவற்றை உதறித்தள்ளி மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழ்வாங்கு வாழ்வோமாக!