

தற்காலத்தில் நிறைய ஆண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னைதான் விரும்பிய பெண்ணை எப்படி தன்னை விரும்ப வைப்பது என்பதுதான்.
சூழலில் பெண்களிடம் தங்களுக்கு எப்படிப்பட்ட ஆண்மகன் கணவனாக வேண்டும் என்று கேட்டால், (ரகட் பாய்ஸ்) முரட்டுத்தனமான ஆண்களைத்தான் பிடிக்கும் எனக் கூறுகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் நாம் அதிகமாக பார்க்கிறோம்.
ஆனால், உண்மையில் பெண்களுக்கு அப்படிப்பட்ட ஆண்களை அதிகம் பிடிப்பதில்லை. கொஞ்சம் வெள்ளந்தியான, நகைச்சுவை உணர்வுடன் இருக்கும் ஆண்களைத்தான் பிடிக்கும். நகைச்சுவை உணர்வு என்றவுடன் ஒரு நல்ல நகைச்சுவை புத்தகத்தை வாங்கி அதில் இருக்கும் ஜோக்குகளை எல்லாம் படித்துவிட்டு அந்தப் பெண்ணிடம் சென்று ஒப்புவிக்கக் கூடாது. இயல்பாகச் சூழ்நிலைக்கு ஏற்ப வரும் நகைச்சுவைகளைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம்!
கட்டுடல் மேனியாக இருக்கவேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கும் ஆண் மகனா நீங்கள்? அதற்காக அதிகம் நேரம் செலவிடுவது. அந்த இலக்கை அடைவதற்காக உடற்பயிற்சி செய்வது எனத் திட்டங்களை வகுத்து அதற்காகச் செயல்படும் ஆண்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? (பொதுவாக, இலக்குகளில் அதிகம் ஈடுபாடு உடைய ஆண்களைக்கண்டால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.)
பெண்கள் தங்களுக்கு ஏதேனும் இன்பமோ, துன்பமோ, கோபமோ ஏற்படும்பொழுது, அந்த மனநிலையைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்றார்போல் வாழ்த்துகளோ, ஆறுதலோ, அல்லது ஆதரவோ கூறும் ஆண்மகனின் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையை பெண்கள் உணர்வார்கள். இந்த அணுகுமுறை பெண்களிடையே ஒரு ஆண்மகனை மிக அழகாக எடுத்துக்காட்டும்.
ஒருவரிடம் பழகவேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய, அவரின் தோற்றம் மற்றும் அணிந்திருக்கும் உடையின் நேர்த்தி பெரும் அளவில் உதவும். அதனால்தான் ‘ஆள் பாதி ஆடை பாதி’ எனும் பழமொழி இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு ஆளும் தேவையில்லை, ஆடையும் தேவையில்லை; அன்பு மட்டும் போதும் என்றெல்லாம் கூறுவார்கள். உண்மையில், அது இரண்டாம் பட்சம். முதலில் பெண்கள் தங்களைப் பார்க்க வேண்டும். பின்னர் பேசவேண்டும். அடுத்துதான் காதலோ, நட்போ. அதற்குத் தோற்றமும் ஆடையும் முக்கியம்.
ஒரு ஆண் பெண்ணை மதிப்பதை நிச்சயம் எல்லா பெண்களும் விரும்புவார்கள். அதற்காக அந்தப் பெண் பார்க்கும்பொழுது, வயதானவர்கள் சாலை கடக்க முயற்சி செய்யும்போது சாலை கடந்துவிடுவது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் காய்கறி வாங்கி கொடுப்பது, யாசகர்களைப் பார்த்தால் தான தர்மம் செய்வது என சினிமாவில் வரும் ஹீரோ போல் இல்லாமல். பெண்கள் தங்களுடன் இருக்கும்பொழுது அவர்களுக்கான சுதந்திரத்தை அளித்து, அவர்கள் இருக்கும் சூழ்நிலைக்குத் தகுந்த மரியாதை அளித்தாலே அவர்களுக்கு உங்களைப் பிடிக்கும்.
இந்த சில விஷயங்களைச் செய்தாலே பெண்கள் உங்களை விரும்புவார்கள். அதற்காகப் பயிற்சி வகுப்பு எங்கும் செல்லத் தேவையில்லை.