

வாழ்க்கையில் நன்றி என்ற வார்த்தை நம் இதயத்தில் இருந்து பூக்கிறது. மனிதர்களோடு, மனிதத்தை மலரச்செய்து, எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து வாழ்கிறது. உதவிடும் கரங்களுக்கு, உன்னதம் செய்து, புகழ் மாலை சூட்டுகிறது. மனிதனின் உயர்ந்த பண்பின் வெளிப்பாடாக முத்திரை பதிக்கும் வார்த்தை தான் நன்றி. அன்பைப் போன்று, எதிர்வினை ஆற்றாத, அழகான வார்த்தையாக மிளிர்கிறது.
நன்றி உள்ள மனிதர்கள் உள்ளத்தில் பொறுமை வாழ்கிறது. அவர்களின் ஆழ்ந்த மனதில் இறை நம்பிக்கை குடிகொண்டு இருக்கிறது. இது கலியுக காலம். ஐயன் வள்ளுவன் குறள், 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்னும் குறலுக்கு, வலுசேர்க்கும் நிகழ்வுகள் நடப்பது, பரவலாக அத்திப் பூத்தாற்போல் ஆகிவிட்டது வேதனை அளிக்கிறது. நன்றியுள்ள இதயமே, இறைவனின் அருளின் உறைவிடம் என்பதை மறக்காதீர்கள். உதவி செய்யும் நெஞ்சங்களில், நன்றிக் கடன் பட்டு இருப்போம். அதனை அன்பின் பார்வையோடு, அங்கீகரித்து கடன் தீர்ப்போம்.
மழை பொழியும் நிலங்களில், பசுமை வாழ்கிறது. அதுபோலவே நன்றி சொல்லும் இதயங்களில் தோழமை வாழ்கிறது. நன்றியோடு வாழும் மனிதர்கள் உள்ளத்திலும், உணர்வுகளிலும் என்றும் உதவும் எண்ணமும், தர்ம சிந்தனையும் உயிர்ப்புடன் இருக்கின்றன. அன்போடு வாழ்வது, மனித மனங்களின் சங்கமம். நன்றி போற்றும்படி வாழ்வது, இறை அருளின் சங்கமம் என்பதை உணருவோம்.
இறைவனுக்கு நன்றியுடைய அடியானாக இருந்தால், அந்த இறை நம்பிக்கை, நமக்கு பல வெற்றிப்படிகளில் உயரச்செய்யும் சிறகுகளாக வாழ்க்கையில் பரிணமிக்கும்.
அனைவர் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்த கவிஞர் கண்ணதாசன், தான் எழுதிய திரை பாடல் வரிகளில், 'ஆசை களவு கோபம் கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் வாழும் தெய்வம்' என்று நன்றிக்கான உணர்வுகளை அங்கீகரிக்கும் வகையில் சொல்லி இருப்பதைப் பாராட்டுவோம்.
நாம் இன்று சுதந்திர நீரோட்டத்தில் வாழ்கிறோம். பூத்து குலுங்கும் அறிவியல் முன்னேற்றம், நம் வாழ்க்கையோடு வாசம் செய்கிறது. எதுவும் எளிதில் கிடைக்கும் நிலை உள்ளது. இதற்கு நாம் எல்லோரும் வாழ்நாள் முழுவதும், அல்லும் பகலும் போராடி, வாழ்க்கையில் பல இன்னல்களில் சிறைப்பட்டு, தன் வாழ்க்கையை தேச விடுதலைக்காக, அர்ப்பணித்த உத்தமர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர்கள்தான் அதன் அடடித்தளக் கற்களாக நிலையுண்ட புகழோடு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, விடுதலை சிற்பிகளை என்றென்றும் நம் மனதில் நிலை நிறுத்தி நன்றியோடு போற்றுவோம்.
சமூக நல்லிணக்கத்தை போற்றி வலியுறுத்தும் புதினங்கள், சமுக விழிப்புணர்வு நூல்கள், பண்டைய வரலாற்று நாவல்கள்... இப்படி பல தரப்பட்ட நல்ல நிகழ்வுகளை நமக்காக படைத்த, அறிவில் சிறந்த மேன்மைமிகு எழுத்தாள பெருமக்கள் அனைவருக்கும் நன்றிக் கடன் பற்றிருக்கிறோம்.
நன்றி சொல்லும் மனங்களுக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று வினை ஆற்றத்தெரியாது. நன்றி விசுவாசம் வெளிப்படும் மனதில் தான், அறிதலும் புரிதலும் நட்பாக, மாறிவிடும் தன்மைக் கொண்டது என்பதை உணர்ந்து, அன்பை விதைப்போம், நன்றியை காணிக்கை செய்து, மலரும் நட்பு உள்ளங்களில் வாழ்க்கையில் மகிமை பொங்கட்டும்!