

ஆரம்பகால எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, அனுபவம் வாய்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்குக் கூட சில சமயங்களில் சிந்தனையோட்டத்தில் தடைகள் ஏற்படும். இந்தத் தடையை எதிர்கொள்ள உதவும் சில பயனுள்ள குறிப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
1. எதைப் பற்றியாவது எழுதத் தொடங்கவேண்டும். ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு, இரண்டு மூன்று பக்கங்களாவது எழுதுங்கள். அதில் இலக்கணப் பிழை இருக்கிறதா? கருத்துகள் கோர்வையாக இருக்கின்றனவா? என்று கவலைப்படாமல் எழுதுங்கள். ஒன்றுக்கும் உதவாத யோசனைகளைக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை.
2. தினமும் எழுதுவதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் பிற வேலைகளைத் தள்ளிவைத்து விட்டு கட்டாயமாக எழுதவேண்டும். அது அதிகாலை, மாலை, அல்லது இரவாக இருக்கலாம். வழக்கமாக எழுதும் இடமாக இருத்தல் நல்லது. மூளை அந்த செயலுக்குப் பழகி படைப்பாற்றலுக்கு வழிவகுக்கும்.
3. தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்காமல் சிறிய இடைவெளிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அரைமணி நேரம் எழுதி விட்டு எழுந்து சென்று ஏதாவது ஒரு சிறிய வேலையை செய்யலாம். திரும்பி வரும்போது புதிய கருத்துக்கள் மனதில் தோன்றும்.
4. ஒரு நாவல் எழுதவேண்டும் என்று நினைத்தால் அதை இத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஒரு அத்தியாயத்தை ஒரு வாரத்தில் எழுதி முடிப்பேன் என்று தீர்மானித்துக் கொண்டு எழுதலாம். தினமும் நான்கு பக்கங்கள் எழுதவேண்டும் என்று காலநேரத்தை நிர்ணயித்துக் கொண்டால் விரைவில் எழுதி முடிக்கலாம்
5. உங்களுக்கு நம்பிக்கையுள்ள எழுத்தாள நண்பர்களிடம் எழுத்துத் தடையை பற்றி பேசலாம். அல்லது கற்பனையிலாவது அதைப்பற்றி நண்பர்களிடம் பேசும்போது எண்ணங்களை தெளிவுபடுத்த உதவுகிறது.
6. முதலில் மனதில் தோன்றியவற்றையெல்லாம் பேப்பரில் எழுதுவது அல்லது நேரடியாக கணினியில் டைப் செய்யலாம். பிறகு அதை எடிட் செய்து கொள்ளலாம். இது மனதில் இருக்கும் அழுத்தத்தைக் குறைக்கிறது.
7. வழக்கமாக எழுதும் பாணியைத் தவிர்த்துவிட்டு வேடிக்கையாக எழுதலாம். வித்தியாசமான கதைக் கருவை எடுத்து எழுதலாம்.
8. எழுதும்போது எந்தவிதமான தீர்ப்புக்கும் ஆட்படாமல் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் எழுதலாமா என்று உள்மனதில் இருந்து உள்விமர்சகர் குரல் கொடுத்தால் அதை சற்று நேரம் அமைதியாக இரு என்று பணிக்க வேண்டும். எழுத்தின் முதல் டிராப்ட்தான் எழுதுகிறேன் என்று நேர்மறையாக சொல்லிக்கொள்ளும்போது மனதில் இருக்கும் அழுத்தம் குறைகிறது. உங்களுக்கு பிடித்த நண்பரிடம் பேசுவதுபோல நினைத்துக்கொண்டு எழுதலாம் இதனால் எழுதும் வேலை சுலபமாக ஆகிறது.
9. எழுதி முடித்ததை உற்சாகமான மனநிலையில் அமர்ந்து திருத்தவும். அப்போது ஐடியாக்களை புதிதாக மாற்ற நிறைய யோசனைகள் தோன்றும்.
10. எழுதுவதற்கு எந்த ஐடியாவும் கிடைக்கவில்லை என்றால் ஒரு திரைப்படம் அல்லது வேற்று மொழி திரைப்படங்களை பார்க்கலாம். புதிய கதைக்கரு கொண்ட படங்கள் சிந்தனையைத் தூண்டும். பிடித்த அல்லது சிறந்த எழுத்தாளரின் புத்தகங்களை வாசிக்கலாம். நல்ல நாவல்கள் மற்றும் சிறுகதைகளை வாசித்தால் அது எழுத்துத் தடையை உடைக்க வசதியாக இருக்கும்.