
மனம் கொண்டவன். அதனால் மனிதன் எனப்பட்டான். வேறு உயிரினங்களுக்கு மனம் என்று ஒன்றில்லை. அது கடந்த காலத்தை எண்ணி வருந்துவதும் இல்லை; மகிழ்வதும் இல்லை. வருங்காலத்தை எண்ணி மயங்குவதும் இல்லை. அஞ்சுவதும் இல்லை.
மனிதனுக்கே இதுவெல்லாம்! காரணம்? அவனது மனம்தான்.
இந்த மனமே அவனது துன்பங்களுக்கெல்லாம் அடிப்படை. மனித வாழ்வில் இன்பம் பாதி துன்பம் பாதி என்பார்கள். அல்ல; மனித வாழ்வில் 90-சதவீதம் துன்பமே. மனிதனின் விட்டில் பூச்சிமனம் இன்பத்தை நாடியே மீண்டும் மீண்டும் துன்பத்தில் சிக்குகிறது. ஆனாலும் துன்பத்திலிருந்து மீண்டு, மீளவும் இன்பத்தை நாடியே துன்பத்தில் உழல்கிறது.
பகல் முடிந்து இரவு; இரவு முடிந்து பகல்; அதுபோல் துன்பம் முடிந்து இன்பம்; இன்பம் முடிந்து துன்பம்.
உப்பைத் தின்கிறோம்; தண்ணீர் குடிக்கிறோம். காரம் தின்கிறோம்; தண்ணீர் குடிக்கிறோம். அதிகமாக இனிப்பைத் தின்றாலும் தண்ணீர் குடிக்கிறோம்.
எது இன்பம், எது துன்பம் என்பதிலும் மயக்கம்.
இன்றைய இன்பம்: நாளைய துன்பம்.
பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அழுது புரண்டு அடம் பண்ணிய குழந்தைதான், பிறகு கல்விபயின்று அந்தக் கல்வித் தகுதி காரணமாக உயர் அதிகாரியாகப் பதவி வகித்து அந்தஸ்துடன் வாழ்கிறான். கல்யாண ஆசையில், எந்தப் பெண் கிடைத்தாலும் என்று அவசரம் அவசரமாகத் திருமணம் செய்து கொள்கிறவர். பிறகு குடும்ப வாழ்க்கை. மனைவி தொந்தரவு என்று வீட்டைவிட்டு ஓடி ஒளிகிறான்.
நேற்றைய நண்பன். இன்றைய விரோதி. நேற்றைய சகோதரன்; இன்று நம்மை கோர்ட்டுக்கு இழுக்கும் சொத்துப் பங்காளி.
அல்வா ருசியானதுதான் - நேற்றுவரை! இன்று அவன் சர்க்கரை நோயாளி, அல்வாவைப் பார்த்து ரசிக்கலாம்; ருசிக்க வழி இல்லை.
இன்பம் அல்லாத துன்பமோ, துன்பம் அல்லாத இன்பமோ இல்லை என்கிறார்கள் தத்துவாசிரியர்கள்.
நன்மையிலும் சிறிது கெடுதல் உண்டு. கெடுதியிலும் சிறிது நன்மை உண்டு. அதாவது - அனுபவபாடம்.
மாம்பழத்துக்குள் வண்டுபோல் எல்லா மனிதனின் இதயத்துள்ளும் இருப்பது வந்த துன்பம் அல்லது வரப்போகும் துன்பத்தை எண்ணி உடல் ரீதியாக, மன ரீதியாக மனிதனை வாட்டுவது - கவலை.
துன்பம் வந்தபிறகு அடையும் கவலை பரவாயில்லை. அதை மாற்றப் போராடும் வேலையில் மனம் இறங்கிவிடும். துன்பம் வந்து விடுமோ என்கிற கவலைதான் பெரும் கவலை. அது உடலை, மூளையை, இருதயத்தை, நரம்பு மண்டலத்தை எல்லாம் பாதிக்கிறது. பிறர் பேசுவது கேட்பதில்லை. பிறர் நடமாடுவது சுவனத்திற்குள் கொள்ளப்படுவதில்லை. பிறர் நம்மை நெருங்குவது கூட பிடிக்கவில்லை.
மனம் தனிமையை நாடுகிறது. அல்லது, பாதுகாப்பு தேடி ஆதரவை நாடுகிறது.
இருப்பது பறிபோகுமோ எனத் தவிப்பது கவலை என்றால், விரும்புவது கிடைக்காமல் போகுமோ என ஏங்குவதும் கவலையே.
அவரவர் கவலை அவரவர்க்குப் பெரிதாக இருக்கும்.
கவலையின் வகையும் அளவும் மாறலாம்.
முள்ளின் அளவுப்படி அதன் குத்தல் வலியிருக்கும்-குளிரின் அளவுக்குத் தகுந்தபடி உடல் நடுக்கம் இருக்கும்.
கவலை ஒருவகை பதைபதைப்பு; படபடப்பு.
கவலையால் பயம் பிறக்கலாம். பயத்தால் கவலை பிறக்கலாம்.
கவலையையும் பயத்தையும் ஒரு சேரத்தான் வெல்லவேண்டும். இரண்டையும் வென்றால் அச்சத்தை வெல்லலாம். ஆகவே மனதை எப்போதும் தயார் நிலையில் வைத்திருங்கள்.